Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தே.மு.தி.கவில் குடும்ப ஆதிக்கம், அதனால் தி.மு.கவில் இணைந்த தே.மு.தி.க. மா.செ.!

சென்னை: தே.மு.தி.கவில் குடும்ப ஆதிக்கம் இருப்பதாக கூறி, அக்கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தே.மு.தி.கவிலிருந்து விலகி தி.மு.க.வில் இன்று இணைந்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கட்சியில் இருந்து வி.சி.சந்திரகுமார் தலைமையில் சிலர் பிரிந்து, மக்கள் தே.மு.தி.க. என்ற புது கட்சியைத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து இவர்கள், சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ஈரோடு, மேட்டூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தனர்.

இந்நிலையில் மக்கள் தே.மு.தி.க.வின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அதில், மக்கள் தே.மு.தி.க.வை தி.மு.க.வில் இணைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவரை தே.மு.தி.க.வின் 19 மாவட்டச் செயலாளர்கள் தி.மு.க.வில் இணைந்து உள்ளனர்.

மேலும், சேலத்தில் வருகின்ற 17-ம் தேதி நடைபெற உள்ள இணைப்பு விழாவில், ஏராளமான மக்கள் தே.மு.தி.க.வினர் மற்றும் தே.மு.தி.க.வினர் தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தே.மு.தி.க. தென் சென்னை மாவட்டச் செயலாளர் வி.என் ராஜன், தனது ஆதரவாளர்களுடன் இன்று அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

அதன்பின் வி.என்.ராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தே.மு.தி.க.வில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லை தே.மு.தி.கவில் குடும்ப ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அ.தி.மு.க.வை வீழ்த்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்த விஜயகாந்த், பின்னர் மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து, தொண்டர்களை ஏமாற்றிவிட்டார்.

மாவட்ட நிர்வாகிகளின் கருத்தை ஏற்காமல் விஜயகாந்த் செயல்பட்டார். கூட்டணி அமைத்தது குறித்த அதிருப்தி காரணமாகதான் தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்துள்ளேன். மேலும், தே.மு.தி.க.வில் இருந்து விலக பல மாவட்ட நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்" என்றார்.

புதிய பொறுப்பாளர்கள் நியமனம்...

இதனிடையே, தே.மு.தி.க.,வின் தென் சென்னை மாவட்டத்துக்கு புதிய பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நியமனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தேசிய முற்போக்கு திராவிட கழகம் தென் சென்னை மாவட்ட கழக பொறுப்பாளர்களாக வி.சி.ஆனந்தன், (தி.நகர் பகுதி செயலாளர்), பிரபாகரன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு மாவட்ட, பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து கழகம் சிறப்பான வளர்ச்சி பெற பாடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்