Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுவாதி கொலை வழக்கில் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தினார் நீதிபதி!


சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை உறுதி செய்ய புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த இன்ஜினீயர் சுவாதி கடந்த மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் (24) என்ற வாலிபரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கொலை சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள், கொலையாளியை அடையாளம் காட்டும் விதமாக, ராம்குமார் மற்றும் பிற நபர்களை வரிசையாக நிற்கவைத்து அடையாள அணி வகுப்பு நடத்த காவல்துறையினர் முடிவு செய்தனர். இந்த அடையாள அணிவகுப்பை நடத்துவதற்கு ஒரு நீதிபதியை நியமிக்கும்படி, சென்னை எழும்பூர் தலைமை மாஜிஸ்திரேட்டிடம், நுங்கம்பாக்கம் காவல்துறையினர் மனு கொடுத்தனர்.

இந்த மனுவை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட்டு, அடையாள அணிவகுப்பை நடத்த, சென்னையில் உள்ள மூத்த சிவில் நீதிபதியும், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுமான ஆர்.சங்கரை நியமித்து உத்தரவிட்டார்.

இதன்பேரில், சென்னை புழல் சிறையில் இன்று (செவ்வாய்)காலை 10 மணிக்கு மாஜிஸ்திரேட் சங்கர் புழல் சிறைக்கு வந்தார். அப்போது, கொலை சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள், கொலையாளியை அடையாளம் காட்டும் விதமாக, ராம்குமார் மற்றும் ராம்குமார் முகசாயல் கொண்டவர்களை வரிசையாக நிற்கவைத்து அடையாள அணி வகுப்பு நடத்தப்பட்டது.

சுவாதியின் பின்னால் தொடர்ந்து சுற்றியது யார் என்று அவரது தந்தை சந்தானகோபால கிருஷ்ணனிடம் கேட்கப்பட்டது. அதேபோல் கொலையை நேரில் பார்த்த பெட்டிக்கடை சிவக்குமாரிடம் குற்றவாளியை அடையாளம் காட்ட கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி அவர்கள் அடையாளம் காட்டினர். இந்த அடையாள அணிவகுப்பின்போது காவல்துறை அதிகாரிகளும், சிறைத்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

அடையாள அணி வகுப்பிற்கு பின் நீதிபதி சங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சுவாதி கொலை வழக்கு தொடர்பான அடையாள அணிவகுப்பு விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. யார் யாரிடம் விசாரணை நடைபெற்றது என்ற விவரங்களை வெளியிட முடியாது" என கூறினார்.

எஸ்.மகேஷ்


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ