Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 நாள் போலீஸ் கஸ்டடியில் ராம்குமார்..! சுவாதி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு


சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நுங்கம்பாக்கம் காவல்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவருடைய மகள் சுவாதி. மென்பொருள் நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை செய்து வந்த சுவாதி, கடந்த மாதம் 24ம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும், கொலையை பார்த்த சாட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமாரை (24) காவல்துறையினர்  கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கொலை சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளை கொண்டு கொலையாளியை அடையாளம் காட்ட புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நீதிபதி ஆர்.சங்கர் நேற்று நடந்தது. அப்போது, ராம்குமாரை சுவாதியின் தந்தை அடையாளம் காட்டினார். இதைத் தொடர்ந்து  பெட்டி கடைக்காரர் சிவகுமார், ராம்குமாரை காட்டி நான் பார்த்த நபர் இவர் போல் தான் இருந்தார் என கூறியதாக தெரிகிறது. சுமார் 2  மணி நேரம் இந்த அடையாள அணிவகுப்பு நடந்தது.

இந்த நிலையில், ராம்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நுங்கம்பாக்கம் காவல்துறையினர் எழும்பூர் 13வது நடுவர் நீதிமன்றத்தில் இன்று காலை மனுத் தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராம்குமாரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதைத் தொடர்ந்து புழல் சிறையில் சிகிச்சை அளித்த மருத்துவர் நவீன்குமார், ராம்குமாரின் உடல் நிலை குறித்து நீதிபதியிடம் விளக்கம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ், ஆட்சேபணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ராம்குமார் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவரை போலீஸ் காவலில் அனுப்ப கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோபிநாத் , ராம்குமாரை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ