Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அரசாணை 72-ஐ அமல்படுத்துவாரா முதல்வர்?' -வேண்டுகோள் வைக்கும் வி.சி.க.

' உள்ளாட்சி அமைப்புகளில், எழுத்தர் பதவிக்கான நியமனங்களில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடர்ந்து அநீதி நடக்கிறது. ஊராட்சித் தலைவர்களே தன்னிச்சையாக ஆட்களை நியமிப்பதால் ஏராளமான குளறுபடிகள் நடக்கின்றன' எனக் கொந்தளிக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார்.

தமிழ்நாட்டில் 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பஞ்சாயத்து எழுத்தர் பதவிக்கு, வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பதிவு மூப்பு அடிப்படையில் தகுதியானவர்களைத் தேர்வு செய்து, மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. இதற்கென 2013-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது ( G.O. Ms. No. 72, Rural Development & Panchayat Raj (E5) Dt: 9th July 2013). அரசின் உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, நெல்லை மாவட்டம், புதுக்குடி ஊராட்சித் தலைவர் கோபிராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தடை உத்தரவு வாங்கிவிட்டதால், அரசாணையை நடைமுறைக்குக் கொண்டு வர முடியவில்லை.

இந்நிலையில், " நீதிமன்றத்தின் தடை உத்தரவை நீக்குவதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை" எனக் கொந்தளிக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார்.

மேலும் அவர், " அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பு வரையில் ஊராட்சி எழுத்தர் பதவிக்கான ஆட்களை அந்தந்த ஊராட்சித் தலைவர் மற்றும் பணி நியமனக் குழுவில் உள்ள வார்டு உறுப்பினர் மூலமாக தேர்வு செய்தனர். இதனால், ஊராட்சித் தலைவர்கள் தமது உறவினர்களையும், தமது சாதிக்காரர்களையும் மட்டுமே இப்பணியில் அமர்த்திக் கொண்டனர். ஆனால், தலித் தலைவர்கள் இருக்கும் ஊராட்சிகளில் அவர்கள் விரும்பியவர்களை சுலபமாக நியமிக்க முடிவதில்லை. ஏனெனில், தலித் அல்லாத ஊராட்சித் துணைத் தலைவர் மற்றும் பணி நியமனக் குழுவில் உள்ள வார்டு உறுப்பினர் இதற்கு ஒப்புதல் கொடுப்பதில்லை. இந்த நியமனங்களில் இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுவதில்லை. இதனால் சுமார் 2,500 தலித்துகளுக்குக் கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.

தலித் ஊராட்சித் தலைவர் பணி புரியும் ஊராட்சிகள் பலவற்றில், தலித் அல்லாத பஞ்சாயத்து எழுத்தர்கள்தான், தலைவர் போலச் செயல்படுகின்றனர். கணக்குகளில் குளறுபடி செய்து, தலித் பஞ்சாயத்துத் தலைவர்களை ஏதேனும் சிக்கலில் மாட்டவைத்து, அவர்களைப் பதவிநீக்கம் செய்வதற்கு இந்த எழுத்தர்களே கருவியாக இருப்பதும் சில இடங்களில் நடந்துள்ளது. இந்தியா முழுவதும், உள்ளாட்சி அமைப்புகளில் பஞ்சாயத்து எழுத்தர் பதவிக்கு மாநில அரசுதான் நியமனம் செய்கிறது. தமிழ்நாட்டில்தான் பஞ்சாயத்து தலைவரே நியமித்துக்கொள்ளும் இந்த அநீதி தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் இந்த நேரத்தில் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து, அரசாணை எண் 72-ஐ நடைமுறைப்படுத்தத் தமிழக அரசை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

-ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ