Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒருவேளை அன்று நுங்கம்பாக்கத்தில் போலீஸ் இருந்திருந்தால்...! ரயில்வே ஐ.ஜி ஆதங்கம்

 

''சுவாதி கொலையான நாளில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் எந்த போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் இல்லை. ஒருவேளை காவலர்கள் அங்கு இருந்திருந்தால் இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கும்'' என்று ரயில்வே பாதுகாப்புப்படை ஐ.ஜி. கூறினார்.

சென்னையில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் (ஆர்.பி.எப்) ஐ.ஜி. எஸ்.சி.பாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ரயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பு குறித்து கடந்த மாதம் 16ம் தேதி முதல் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. குறிப்பாகப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் தீவிரமாக இருந்து வருகிறோம். 182 என்ற உதவி எண் மூலம் தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவிக்கும் ரயில் பயணிகளை உடனே அணுகி பிரச்னைகளைத் தீர்க்கிறோம். தெற்கு ரயில்வே முழுவதும் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளில் இருந்து காப்பாற்றவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் 4 ஆயிரத்து 200 பாதுகாப்புப்படையினர் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இ–டிக்கெட் சேவையில் முறைகேட்டில் ஈடுபட்ட 24 பேரை கைது செய்து உள்ளோம். அவர்களிடம் இருந்து ரூ.2.72 லட்சம் மதிப்புள்ள ரெயில் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. முறைகேடான பயணம் மேற்கொண்ட 2,256 பேரிடம் இருந்து ரூ.8½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியூட்டக்கூடிய ஒன்று. மீண்டும் இதுபோல ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க சென்னை கோட்டத்தில் 82 இடங்கள் உள்பட தெற்கு ரயில்வே முழுவதும் 136 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. சென்னை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம் ரயில் நிலையங்கள் கூடுதல் பாதுகாப்புடன் செயல்படும். இதற்காக ரூ.28.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது" என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்கள்:

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சுவாதி கொலையான நாளில் பாதுகாப்புப் படை வீரர்கள் இருந்தனரா?

சம்பவம் நடந்த நாளில் அங்கு எந்த காவலரும் பாதுகாப்புப் பணியில் இல்லை. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பணி முடித்ததும், அடுத்த ரயில் நிலையத்துக்குக் காவலர்கள் சென்றுவிட்டனர். ஒருவேளை காவலர்கள் அங்கு இருந்திருந்தால் இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கும்.

புதிதாக காவல் படை நியமிக்கப்படுமா?

கூடுதல் பாதுகாப்புக்காக ஒரு கம்பெனி (140 பேர்) காவலர்கள் விரைவில் பணியில் ஈடுபட உள்ளனர்.

அனைத்து ரயில் நிலையங்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் வருவது எப்போது?

95 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரயில் நிலையங்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும்.

பயணிகள் பாதுகாப்புக்காக ஏதேனும் செல்போன் ‘அப்ளிகேஷன்’ அறிமுகப்படுத்தப்படுமா?


பயணிகளின் எல்லா தேவைகளையும் ஒருசேர ஒருங்கிணைக்க ஏதுவாக ஒற்றைச் சாளர முறையில் புதிய ‘அப்ளிகேஷன்’ தொடங்குவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். ஏனெனில் இதில் பல சிக்கல்கள் உள்ளன. விரைவில் இந்த ‘அப்ளிகேஷன்’ தொடங்குவது குறித்து தெரிவிக்கப்படும்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ