Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'என்னை கருணைக் கொலை செய்யுங்கள்!' - கதறும் காவல் வாகனம்!

அனுப்புநர்

டவுன்  பெட்ரோல் வாகனம்,
நகர காவல் நிலையம்,
செங்கல்பட்டு.

பெறுநர்

உயர்திரு. தமிழக காவல்துறை தலைவர்,
சென்னை.

பொருள் - எனது உடல் நிலையை கருத்தில் கொண்டு என்னை கருணை கொலை செய்ய வேண்டி மனு

தமிழக காவல்துறை தலைவர் அவர்களுக்கு,

செங்கல்பட்டு டவுன் பெட்ரோல் (நகர ரோந்து) வாகனத்தின் பணிவான வணக்கம்!

2003 ல் பிறந்த எனக்கு, அதே வருடம்  ஆகஸ்ட் மாதத்தில் தமிழக காவல்துறைக்கு பணி செய்ய, காவல் துறையினர் என்னை விலைக்கு வாங்கினார்கள். நான் வேலைக்கு சேர்ந்த புதிதில், மிடுக்காக ஊர் முழுக்க வலம் வருவேன். என் கம்பீர தோற்றத்தைப் பார்த்தாலே சாலையில் செல்வோரெல்லாம் வழிவிட்டு ஒதுங்குவார்கள். சீறும் சிங்கமாக ஓடுவதையெண்ணி பெருமிதமும் பூரிப்பும் அடைவேன்.  குற்றங்களை குறைப்பதும், சாலைகளை ஒழுங்குபடுத்துவதும்தான் என்னுடைய முதன்மைப்பணி. இந்த வருடம் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் செங்கல்பட்டு நகரே மூழ்கிவிட்டது. என்னோட உடல்நிலையை பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல், இரவு, பகல் பாராமல்  எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கேன். ஆரம்ப காலத்துல செங்கல்பட்டு நகரத்தின் எல்லைச்சாமின்னு என்னைச் சொல்வாங்க.

இன்னைக்கு காலையில எஸ்.ஐ. சுந்தரவடிவு அண்ணன் கூடத்தான் சுற்றிவந்தேன். அவருக்கு டிரைவர் இல்லாததால அவரே ஓட்டுவார். ‘உனக்கு ஒரு டிரைவர் கூட தரமாட்டேங்குறாங்களே’ன்னு என்னிடம் புலம்புவார். மதியம் ஏட்டு ரெஸ்லீ அண்ணன் கூட போகணும். ராத்திரியும் பகலுமா இப்படி நேரம் காலம் இல்லாம எனக்கு வேலை இருக்கு.

 

செங்கல்பட்டு நகரை சுற்றிச்சுற்றி வர, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 லிட்டர் டீசலாவது எனக்கு தேவைப்படும். மாதம் 300 லிட்டர் டீசலாவது போடணும். ஆனால் எனக்கு 150 லிட்டர்தான் அரசாங்கம் கொடுக்கிறது. டிரைவர் அண்ணன் எப்படியோ  தினமும் டீசலைப் போடுவார். நகரம் முழுக்க ஓடியோடி என்னோட டயரெல்லாம் தேய்ந்துவிட்டது. டயரை மாற்றினாத்தான் ஓடமுடியும், என்ற நிலைக்கு வந்தேன். எவ்வளவு சொல்லியும் டிபார்ட்மெண்டில் கடைசிவரை என்னை கண்டுக்கவே இல்லை. இதனால நகரவே முடியாத நிலையில் கிடந்தேன். நம்ம டிரைவர் அண்ணன்கள் அவங்களே சொந்த முயற்சியில என்னைக் காப்பாற்ற முடிவெடுத்தாங்க. என் நிலையை ஊரில் இருக்கும் பஸ் முதலாளிகளிடம் சொன்னாங்க. இதனால காண்டிபன் டிரான்ஸ்போர்ட் முதலாளி ரெண்டு டயர் வாங்கி கொடுத்தார். குமரன் பஸ் ஓனர் ரெண்டு டயர் வாங்கி கொடுத்தார். ரேடியேட்டர் போய் விட்டது. அதை கே.ஆர்.சி. பஸ் ஓனர் வாங்கிக் கொடுத்தார். செல்ப் மோட்டர், பேட்டரி என எல்லாத்துக்கும் யாரையாவது பிடிச்சுதான், இன்றைக்கு வரைக்கும் என் உயிரை காப்பாத்திக்கிட்டே இருக்காங்க. என்னாலதான் அவங்களுக்கு கெட்ட பேருன்னு நினைக்கும் போது, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.

வருடா வருடம் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி தலைமையில் இன்ஸ்பெக் ஷன் நடத்துவார்கள். 2013 ம் வருடம் நடந்த இன்ஸ்பெக் ஷனில் முடியாம கிடந்த என்னை, இரவோடு இரவாக சர்வீஸ் செய்து, பெயிண்ட் அடித்து, மேக்கப் எல்லாம் செய்து அதிகாலை 4 மணிக்கெல்லாம் இன்ஸ்பெக் ஷனுக்கு கொண்டு போனாங்க. மைதானத்தில் பள பளன்னு நின்றுகொண்டிருந்தேன்.இதனால எனக்கு அவார்டு கொடுத்தார் டி.ஐ.ஜி. 2013 லிருந்தே காஞ்சிபுரம் ஏரியாவிற்கு டி.ஐ.ஜி கிடையாது. அதனால இன்ஸ்பெக் ஷனும் கிடையாது. சர்வீஸும் கிடையாது.

சென்னையில் இருந்து ஒரு வி.ஐ.பி.,  திருப்பூரில் நடந்த திருமணத்திற்கு சென்றார். அப்போது என்னை எஸ்கார்ட் டூட்டிக்கு அனுப்பினார்கள். என்னோட உடல்நிலை சரியில்லாததால் அவங்களுக்கு ஈடான வேகத்தில் போக முடியவில்லை. சூடு அதிகமாகி வழியெங்கும் மூச்சுவாங்க ஆரம்பித்துவிட்டது. ஒரு வழியா நானும் அந்த மண்டபத்திற்கு போய் சேர்ந்தேன். அதுக்குள்ள அந்த வி.ஐ.பி., கல்யாணத்தை முடிச்சுட்டு வெளியே வந்துவிட்டார். என்னை பார்த்தவர், நாங்க ரெடியா இருக்கோம்னு நெனச்சு பாராட்டிட்டு கிளம்பினார். உடனே அவர் கூடவே நாங்களும் சென்னைக்கு கிளம்பினோம். வழியில உடம்பு சூடு அதிகமாகி இன்ஜின் ஆஃப் ஆகிவிட்டது. டிரைவர் அண்ணன், ஓரமா ஒரு புளியமரத்தை பார்த்து கொஞ்ச நேரம் நிறுத்தினார். திரும்பவும் அவர் ஸ்டார்ட் செய்யும் போது, அவருக்கு ஒரு போன் வந்தது. ‘நாங்க சென்னை போயிட்டோம்... தேங்ஸ்’னு அந்த வி.ஐ.பி தரப்பில் சொன்னாங்க. நாங்க பாதியிலே நின்ற கதை அவங்களுக்கு தெரியாது.

 

சில நேரங்களில் ஏ.எஸ்.பி வண்டியையே பேட்டரி இல்லாம தள்ளி ஸ்டார்ட் செய்வாங்க. அவங்களுக்கே அந்த கதின்னா நம்மை மட்டும் எப்படி கவனிப்பாங்க. ஆயில் சர்வீசுக்கு போகணும்னா, காஞ்சிபுரம் போய், எனக்கு பர்மிஷன் வாங்குவாங்க. அப்புறம் அங்கிருந்து 12 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒர்க் ஷாப்பிற்கு கொண்டு செல்வார்கள். ஒர்க் ஷாப் போனாலும் அங்கே பில்டர் இருக்காது. அதையும் வெளியில் இருந்து வாங்கிக்கொண்டு போவாங்க. 5 லிட்டர் ஆயிலுக்கு 50 கி.மீ. அலையவிடுவாங்க.

என்னை சரியா கவனிக்காததால முன்பு போல என்னால் ஓடியாடி வேலை செய்ய முடியல. அதனால டவுனுக்குள் ஆங்காங்கே நின்றுவிடுகிறேன். மெக்கானிக் யாரையாவது கூட்டிக்கிட்டு வந்துதான் சரிசெய்கிறார்கள். என்னோட பக்கவாட்டில் இருக்கும் படியெல்லாம் துருப்பிடித்துவிட்டது. காலை வைத்தால் உடைந்து விடுவேன் என்பதால் தாவிக் குதித்து ஏறுகிறார்கள். பக்கவாட்டு கதவெல்லாம் கிழிஞ்சு பஞ்சுபஞ்சா தொங்குது. மழைபெய்தால் உள்ளே ஒழுக ஆரம்பித்துவிடுவேன்.  ஸ்டார்ட் செய்தாலே கரகரவென ரைஸ்மில் கணக்கா சத்தம் வரும். வயோதிகம் காரணமாக என்னோட உடம்புல இருக்கும் எந்த பாகமும் இப்ப சரியா வேலை செய்யவில்லை. இன்டிகேட்டர் கிடையாது.  முன்பக்கமும், பின்பக்கமும் உள்ள தகரங்கள் தடதடவென தாளம் போடும்.  ஆடும் தகரத்தின் மீது கட்டுக்கம்பியை கொண்டு கட்டி வைப்பார்கள். பேட்டரி சரியா வேலை செய்யாததால் ஆங்காங்கே நின்றுவிடுவேன். போற, வர்றவங்க யாராவது வந்து என்னை தள்ளிவிட்டால்தான் என்னால் கிளம்ப முடிகிறது.

சில நேரங்களில் யாரும் தள்ளக்கூட வரமாட்டாங்க. அதனால என்னை மேடான இடத்தில் மட்டுமே நிறுத்துவாங்க. இதையெல்லாம் பார்த்துவிட்டு என்னை 'சுந்தரா டிராவல்ஸ்' னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. கேட்கவே ரொம்ப அசிங்கமாக இருக்கிறது. இப்பவெல்லாம் கொலை, கொள்ளைன்னு எங்க தப்பு நடந்தாலும் என்னால உடனே போக முடியவில்லை. டிராஃபிக்கை கிளியர் செய்ய வேண்டிய நானே ஆங்காங்கே நின்று டிராபிக்கை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஏ.எஸ்.பி., எஸ்.பி., என எல்லோரிடமும் என்னோட நிலையை சொல்லிச்சொல்லி அலுத்துவிட்டது. பொதுமக்கள், காவல்துறையினர் என எல்லோரும் என்னை காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு கரித்துக்கொட்டுகிறார்கள். வாழ தகுதியற்ற என்னை நீங்கள் கொடுமைப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? மிகுந்த மனவேதனையில் இருக்கும் என்னை மனசாட்சியே இல்லாமல் துன்புறுத்தாதீர்கள். ஆகவே ஐயா அவர்கள் என்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

டவுன் பெட்ரோல் வாகனம்,
செங்கல்பட்டு.


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ