Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொது இடத்தில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியாது! - நீதிமன்றம் கண்டனம்

சென்னை: செங்கம் பகுதியில், ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் டவுன் தோக்கவாடியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராஜா (38). இவரது மனைவி உஷா (35), மகன் சூரியா (18). இவர்கள் மூன்று பேரும் , கடந்த சில தினங்களுக்கு முன்னர் உறவினர் திருமணத்துக்காக நகை வாங்க,  செங்கம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நகை கடைக்கு வந்துள்ளனர். அப்போது நகையைத் தேர்வு செய்வதில் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது.

உடனே இருவரும் நகைக்கடையை விட்டு வெளியே வந்து நின்றபடி, நடுரோட்டில் வாய்த்தகராறில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது, அந்த வழியாக வந்த செங்கம் போலீஸ்காரர்கள் முருகன், விஜயகுமார் மற்றும் நம்வாழ்வார் ஆகியோர்,  ராஜா மற்றும் அவரது மனைவியிடம், ‘ஏன் நடுரோட்டில் நின்று சண்டை போட்டு கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டுள்ளனர். அதற்கு இருவரும், ‘இது எங்கள் வீட்டுப்பிரச்னை. நாங்கள் சண்டை போட்டுக் கொள்வோம். சேர்ந்துகொள்வோம். நீங்கள் ஏன் இதைக் கேட்கிறீர்கள்?’ என்று கூறியதாகத் தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த போலீசார், ‘எங்களிடமே திமிராக பேசுகிறாயா?’ என்று கேட்டபடி கணவன், மனைவி, மகன் என மூவரையும் லத்தியால் சரமாரியாக கண்மூடித்தனமாகத் தாக்கி இருக்கின்றனர்.
இதன் உச்சமாக ஒரு போலீஸ்காரர் தனது பூட்ஸ் காலால் எட்டி எட்டி உதைத்து இருக்கிறார். போலீசாரின் அடி உதையை தாங்க முடியாமல் மூவரும் நடுரோட்டில் தலைதெறிக்க அங்கும் இங்குமாக ஓடி இருக்கின்றனர்.

அப்போதும் ஆத்திரம் அடங்காத 3 போலீசாரும், விடாமல் தொடர்ந்து விரட்டி விரட்டி ராஜா, அவரது மனைவி உஷா, மகன் சூரியாவை சரமாரியாக அடித்துள்ளனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் பற்றி அறிந்த தோக்கவாடி பகுதி மக்கள், செங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ ஊடகங்களில் வெளியான நிலையில், திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி பரிந்துரையின் பேரில் போலீஸ்காரர்கள் முருகன், விஜயகுமார் மற்றும் நம்மாழ்வார் ஆகிய மூன்று பேரையும் வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றி டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தன்னை தாக்கிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஆட்டோ டிரைவர் ராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சென்னை மருத்துவமனைக்கு அவர்களை மாற்றியது பற்றிய அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் “பொது இடத்தில் காவல்துறையினர் நடந்துகொண்ட விதத்தை ஏற்க முடியாது. இதுதொடர்பாக காவல்துறை ஏன், தானே முன்வந்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை? பாதிக்கப்பட்டவர்களின் உடல்நலம் மற்றும் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

அப்போது, ஆர்.டி.ஓ. விசாரணை அறிக்கை வந்தபிறகே போலீஸ்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்வது பற்றி முடிவு செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ''போலீசாரால் 3 பேரும் தாக்கப்பட்டது சமூக வலைதளம் மூலம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. விசாரணையை முடித்து, எதுவும் நடைபெறவில்லை என்பதுபோல் ஆர்.டி.ஓ. அறிக்கை தந்துவிட முடியாது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. வருகின்ற 17-ம் தேதி ஆர்.டி.ஓ. அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்" என்று கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை வருகின்ற 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ