Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரியில் தமிழக மருத்துவர் மர்ம மரணம்: சிபிஐ விசாரணைக் கோரி போராட்டம்!

கோவை: டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.டி. படிப்பை மேற்கொண்டு வந்த திருப்பூரைச் சேர்ந்த டாக்டர் சரவணன் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கோவையில் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 
எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் எம்.டி. பட்ட மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த டாக்டர் சரவணன், கடந்த 10 ம் தேதி டெல்லியில் தனது அறையில் விஷ ஊசி போடப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது மரணத்தில் சந்தேகங்கள் நிறைய இருப்பதாக பட்டியலிட்ட சக மருத்துவர்கள், சரவணன் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என தெரிவித்திருந்தனர்.
 
 
இந்நிலையில் டாக்டர் சரவணன் மர்மமான முறையில் இறந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கோரி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் அரசு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டத்தலைவர் டாக்டர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். 
 
"டாக்டர் சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனையில் நிலவும் அசாதாரண சூழலால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. பொதுவாக வடமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பற்றச் சூழல் நிலவி வருகிறது. எனவே டாக்டர் சரவணன் மர்மமான முறையில் இறந்த வழக்கில், உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்," என அரசு மருத்துவர்கள்  வலியுறுத்தினர்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜெய்சிங் மற்றும் அரசு மருத்துவர்கள், முதுநிலை, இளநிலை பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
- ச.ஜெ.ரவி

எடிட்டர் சாய்ஸ்