Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விதி மீறி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்: மதுரையில் டிராபிக் ராமசாமி நடவடிக்கை!

க்கள் பாதுகாப்பு கழக தலைவரும் சமூக ஆர்வலருமான டிராபிக் ராமசாமி, மதுரையில் விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்களைப் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.

டிராபிக் ராமசாமி தனது சொந்த வேலையாக மதுரை வந்தார். போக்குவரத்துப் பாதிப்பு குறித்துப் பொதுமக்கள் அவரிடம் மனு அளித்ததின் பெயரில்,  போக்குவரத்து  போலீஸார்  உதவியுடன், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள டி.பி.கே சாலையில் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

விதிகளை மீறி செயல்பட்ட 10 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த டிராபிக் ஏ.சி. திருமலை,  பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கூட்டத்தைக் கலைத்தார்.

இதுகுறித்து டிராபிக் ராமசாமி கூறுகையில், ''சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில்தான் அதிக அளவில் விதிகளை மீறி ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன . கடந்த வருடம் மதுரையில் 26 ஆயிரமாக இருந்த ஆட்டோக்களின் எண்ணிக்கை, தற்போது உயர்ந்து 32 ஆயிரமாக மாறியுள்ளன. இதில் அதிகாரிகள் தெரிந்தே பர்மிட் வழங்குகின்றனர். இதனால் பல விபத்துகள் அரங்கேறுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். இது குறித்த தகவல் சேகரித்துள்ளேன். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர உள்ளேன்'' என்றார்.

அதே சமயம் ஷேர்  ஆட்டோ ஓட்டுநர்கள், ''இது எங்களுக்கு வாழ்வாதார பிரச்சனை என்பதால்,  கால அவகாசம் அளிக்கவேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தனர்.

- சே.சின்னதுரை

படம்: ஈ.ஜெ.நந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ