Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மகள் திருமணத்துக்கு பணம் திரட்ட முடியாமல் குடும்பமே தற்கொலை!

காஞ்சிபுரம் அருகே,  மகள் திருமணத்திற்கு பணம் திரட்ட முடியாததால், குடும்பமே தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காஞ்சிபுரம் அருகே உள்ள காட்டுபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து ( 58).  இவரது மனைவி சரஸ்வதி (50 ), மகள் இந்துமதி (28), மகன் காமேஷ் (25). இந்துமதி பி.ஏ பி.எட் படித்திருந்தார். மதுரமங்கலம் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். அந்தப் பகுதியில் உள்ள ஏழைக் குழந்தைகள் கல்விக்கு உதவி செய்வது, நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். இவரது சகோதரர் காமேஷ்,  என்ஜினியரிங்  முடித்து விட்டு வேலைக்காக முயற்சித்து கொண்டிருந்தார்.

இரு பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக ஏற்கனவே முத்து வங்கியில் லோன் வாங்கியிருந்துள்ளார். அந்த லோனில் சிறுபகுதி அடைக்கப்படவில்லை. இந்த நிலையில் மகள் இந்துமதிக்கு, முத்து  வரன் தேடி வந்தார்.  திருமணச் செலவுக்காக  வங்கியில் லோன் வாங்கியாவது திருமணத்தை நடத்தி விடலாம் என முத்து நினைத்திருந்தார். தெரிந்த நண்பர்களிடமும் பணம் கேட்டிருந்தார். ஆனால், ஏற்கனவே லோன் பாக்கியிருப்பதால் வங்கியில் கடன் தர மறுத்து விட்டனர். திருமணம் முடிந்து  இந்துமதி போய் விட்டால், குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கமாட்டார் என்றும் கூறி நண்பர்கள் கைவிரித்து விட்டனர். இதனால், குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு,'' உங்களுக்கு நான்தானே பாரமாக இருக்கிறேன் '' எனக் கூறி, பெற்றோர் முன்னிலையிலேயே இந்துமதி விஷம் கலந்த ஜாங்கிரியை சாப்பிட்டு உயிரிழந்ததாகவும், அதனைத் தொடர்ந்து மகள் இறந்து கிடப்பதை காண சகிக்க முடியாமல், அவரது தந்தை முத்துவும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனால் அதிர்ச்சியும், துயரமும் அடைந்த காமேசும் சரஸ்வதியும் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

திங்கட்கிழமை மதியம் வரை முத்துவின் வீடு திறக்கப்படாததையடுத்து, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் சடலங்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது.



 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ