Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' மக்களை அசத்துமா 'அம்மா தியேட்டர்'? -கேள்விகளை அடுக்கும் எஸ்.ரா.

சென்னையில் ஐந்து இடங்களில் அம்மா திரையரங்கத்தைக் கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன. ' இந்த தியேட்டர்களைக் கொண்டு வருவதற்கான நோக்கத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவை மக்களுக்கான தியேட்டராகச் செயல்படுமா?' எனக் கேள்விகளை எழுப்புகிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

சர்வதேச திரைப்பட வளர்ச்சிக் கழகத்தை வழிகாட்டும் நிறுவனமாக நியமித்து, அம்மா திரையரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 2014-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், ' மிகக் குறைந்த கட்டணத்தில் புதிய திரைப்படங்களைப் பார்க்கும் வகையில் அம்மா திரையரங்கம் அமைக்கப்படும்' எனக் கூறியிருந்தார் மேயர் சைதை துரைசாமி. இதற்காக, ராயபுரம், அடையாறு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. மாநகராட்சியின் இந்தத் திட்டத்திற்கு அரசு ஒப்புதலும்  கொடுத்துவிட்டது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாநகராட்சி அதிகாரி ஒருவர், " மாநகராட்சியின் கட்டடப் பொறியாளர்களால் திரையரங்கத்திற்கான முழு வடிவமைப்பைக் கொண்டு வருவதில் சிரமம் இருப்பதால், திரைப்படத்துறையில் உள்ள அனுபவம் வாய்ந்த நிறுவனம் மூலம் கட்டடப் பணிகளைச் செய்ய இருக்கிறோம்.

இதற்காக மும்பையில் செயல்பட்டு வரும் சர்வதேச திரைப்பட வளர்ச்சிக் கழகத்தை, வழிகாட்டும் நிறுவனமாக நியமிக்க இருக்கிறோம். அவர்கள் அளிக்கும் அறிக்கையைப் பொறுத்து திரையரங்கின் வடிவமைப்பு இறுதி செய்யப்படும். தற்போது தி.நகரில் உள்ள பி.டி.தியாகராயர் அரங்கம், ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கம் ஆகியவற்றை  திரையரங்கமாக மாற்றுவது குறித்தும் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. தவிர பெரம்பூர், பேசின்பிரிட்ஜ், ராயபுரம், கோட்டூர்புரம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் 'அம்மா திரையரங்கம்' அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்திருக்கிறோம். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே, அம்மா திரையரங்கம் செயல்படும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன" என்றார் விரிவாக.

' அரசே மலிவு விலை தியேட்டர்களை எடுத்து நடத்த வேண்டும்' என்ற கோரிக்கையை, தொடக்கம் முதலே பேசி வருகிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். மாநகராட்சியின் முயற்சி பற்றி அவரிடம் பேசினோம்.

" இன்றைய காலகட்டத்தில் அரசு திரையரங்கத்திற்கான தேவை இருக்கிறது. ஆறு இடங்களில் தியேட்டர் வரப் போகிறது என்கிறார்கள். அது எந்த மாதிரியான கொள்ளளவு உள்ள தியேட்டர்? எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. முழு நேரமாக இயங்கக் கூடிய தியேட்டரா? மல்டிபிளக்ஸ் போல 300 சீட்டுகள் உள்ள சிறு தியேட்டரா? அரசு தியேட்டரில் என்ன மாதிரியான படங்கள் திரையிடப்படும் என்பது குறித்து தெளிவாக விளக்க வேண்டும்.

ஏற்கெனவே ஊட்டி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு தியேட்டர்கள் இயங்கி வந்தன. கலைவாணர் அரங்கத்தில் சிறு தியேட்டர் ஒன்றையும் அரசு நடத்தி வந்தது. ஊட்டியில் இயங்கி வந்த தியேட்டர் சேவை, சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு தியேட்டர்கள் இயங்கி வந்தன. இப்போது அங்கு படங்கள் திரையிடப்படுவதில்லை. தற்போது அரசு கொண்டு வரும் தியேட்டர்களில், பார்வையாளர்களுக்கு என்ன மாதிரியான சலுகை அளிக்கப்படும்; குறும்படத்தை திரையிட முடியுமா? சிறு முதலீட்டுப் படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவார்களா? குழந்தைகளுக்கான படங்களை வெளியிடுவார்களா என்பதைப் பற்றியெல்லாம் இன்னமும் அறிவிப்பு வெளியாகவில்லை. அதனை தெளிவாக அறிவிக்கும்போதுதான், குறைகளை எவ்வாறு சரிசெய்வது என்பதைப் பற்றி பேச முடியும்" என்றார் விளக்கமாக.

-ஆ.விஜயானந்த்
 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ