Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மனக்கசப்பு இல்லை... தே.மு.தி.க., த.மா.கா.வை மீண்டும் கூட்டணிக்கு அழைப்போம்! -வைகோ

சென்னை: எங்களுக்குள் மனக்கசப்பு ஏதும் இல்லை. தே.மு.தி.க., த.மா.கா.வை மீண்டும் கூட்டணிக்கு அழைப்போம் என்று மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய 4 கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கின. இந்த கூட்டணியை வலுப்படுத்துவதற்காக மேலும் பல கட்சிகளை இணைக்கவும் அவர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதன்படி, தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய 2 கட்சிகளும் மக்கள் நலக்கூட்டணியோடு இணைந்து தேர்தலைச்  சந்தித்தன. இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். ஆனால், இந்தக் கூட்டணி தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது.

தேர்தலுக்குப் பின் இந்தக் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். அதே நேரத்தில் தே.மு.தி.க.வும் இந்த கூட்டணியில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியானது. ஆனாலும், கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்னமும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியும், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வோடு இணையப்போகிறது என்ற செய்தி வெளியாகியது.

இந்நிலையில், மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், ரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் நேற்று மாலை சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் சந்தித்துப் பேசினார்கள். இந்தச் சந்திப்பின்போது, நான்கு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் உடன் இருந்தனர். சுமார் 2½ மணி நேரம் நீடித்த இவர்களின் சந்திப்பில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்புக்கு பின் 4 தலைவர்களும் ஒன்றாக வெளியே வந்தனர். அப்போது வைகோ செய்தியாளர்களிடம் பேசியபோது, ''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே மதுக் கடைகளின் நேரத்தைக் குறைத்தோம், கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்தோம் என்று இல்லாமல் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

உலகப் பொதுமறை தந்த வள்ளுவரின் சிலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி தரையில் கிடப்பது, கோடான கோடி தமிழர்களின் இதயங்களில் பழுக்கக் காய்த்த கம்பியைச் சொருகுவது போன்று உள்ளது. வள்ளுவர் சிலை கெளரவமான முறையில் நிறுவப்பட வேண்டும். இல்லையென்றால் அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. இணைந்து அமைத்த மக்கள் நலக் கூட்டியக்கம் நிரந்தர இயக்கமாக செயல்படும். அதில் இந்த 4 கட்சிகளும் நிரந்தர உறுப்புகளாகச் செயல்படும். தேர்தல் நேரத்தில் கட்சிகள் வரலாம், போகலாம்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனைக் கருதி 4 கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுவது என்று ஏற்கெனவே அறிவித்து இருந்தோம். அதன்படி, உள்ளாட்சித் தேர்தலிலும், மக்கள் நலக்கூட்டணி இணைந்து தேர்தலைச் சந்திக்கும். மாவட்டம் தோறும் உள்ள 4 கட்சிகளின் நிர்வாகிகளும் இணைந்து தேர்தல் வேலைகளை கவனிப்பார்கள். உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி மேயரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் முறை குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். அதனால், மக்களால் தேர்ந்தெடுக்கும் முறைதான் கொண்டுவர வேண்டும்.

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். எங்களுக்குள் மனக்கசப்பு ஏதும் இல்லை. எனவே, உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட தே.மு.தி.க., த.மா.கா.வுக்கு அழைப்பு விடுப்போம்" என்றார்.

இதனிடையே, வைகோவின் முயற்சியால், தமிழர் முன்னேற்றப்படையும் மக்கள் நலக் கூட்டணிக்குள் அங்கம் வகித்தது. அதற்கு தேர்தலில், ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியை ஒதுக்கினார் வைகோ. பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி, 20 ஆயிரம் ஓட்டுக்களைப் பெற்று தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் வீரலட்சுமி தன்னுடைய முகநூல் பக்கத்தில், ''மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்" என அறிவித்திருக்கிறார்.

இது குறித்து வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழர் முன்னேற்றப்படை, கூட்டணியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வைகோ, அதற்கான காரணத்தைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close