Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம்..! வைகோவுக்கு ஜி.கே.வாசன் பதில்!

மதுரை: 'மக்கள் நலக்கூட்டணி எங்களுக்கு எதிரிக் கட்சியல்ல. தேவைப்பட்டால் மீண்டும் இணைந்து செயல்படுவோம்' என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இதில் கலந்துகொண்டார். கூட்டத்திற்குப்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “ சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் நேரடியாக சந்தித்துப் பேசி வருகிறேன்.

தோல்விக்கான காரணம் குறித்தும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கலந்தாலோசித்து வருகிறேன். ஆந்திர அரசு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையில் தொடர்ந்து எதிராகவே செயல்பட்டுவருகிறது. ஆந்திர அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. இதை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ தமிழக மீனவர் பிரச்னையில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படவேண்டும். மேலும் கச்சத்தீவு பிரச்னையில், மறுபரிசீலனை செய்யவேண்டும். மதுரையில் பொறியியல் பட்டதாரி லெனின் என்பவர், ஸ்டேட் வங்கி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் கொடுத்த டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட செய்தி மிகவும் வேதனைக்குரியது. இதில் அரசு தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடங்குளம் அனல் மின்நிலையத்தில் இருந்து அதிகப்படியான மின் உற்பத்தியை தமிழகத்திற்கு வழங்கவேண்டும். மேலும் அணு உலைகள் இருக்கும் இடங்களில் முழுமையான பாதுகாப்பு அளிக்கவேண்டும்” என்றார்.

அப்போது மக்கள் நலக் கூட்டணிக்கு உங்களை வைகோ திரும்ப அழைத்திருக்கிறாரே எனக் கேட்டதற்கு, “ இந்தியாவில் இருக்கும் எந்தக் கட்சியும், ஒரு கூட்டணியில் இருந்து இன்னொரு கூட்டணிக்கு மாறாமல் ஒரே கூட்டணியில் இருந்துவிடுவதில்லை. அதைப்போலதான் நாங்களும். கூட்டணி என்பதைக் காலத்திற்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்கிறோம். மக்கள் நலக்கூட்டணி எங்களுக்கு எதிரிக் கட்சியல்ல தேவைப்பட்டால் மீண்டும் இணைந்து செயல்படுவோம்” என்றார்.

- சே.சின்னதுரை
படங்கள்: வீ.சதீஷ்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ