Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்! எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்றத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதை தொடர்ந்து, சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 16–ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு ஜூன் 23–ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து உரையாற்றினார்.
அதன்பின், தேதி குறிப்பிடாமல் சட்டமன்றம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டமன்றம் இன்று (ஜூலை 21) கூடுகிறது. காலை 11 மணிக்கு கூடும் கூட்டத்தில், நடப்பு நிதியாண்டுக்கான (2016–2017–ம்) திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

கடந்த 2011–ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வின் தொடர்ச்சியான ஆட்சியில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 7–வது பட்ஜெட் (இடைக்கால பட்ஜெட் உள்பட) இதுவாகும். நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பின், பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

துறை ரீதியான செலவினங்களுக்கு அவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்படும். இதற்காகவும் பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட உள்ளது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யமாட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே  கூறி இருப்பதால், சபையில் பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து ஆக்கபூர்வமான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் நிலவும் சட்டம்–ஒழுங்கு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் விவகாரம், உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எதிர்க்கட்சியான தி.மு.க. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கிளப்பும் என்று கூறப்படுகிறது.

இது வரி இல்லாத பட்ஜெட் ஆக இருக்குமா, வரிச்சலுகைகள் இருக்குமா அல்லது புதிய வரிகள் விதிக்கப்படுமா என்ற கேள்விகளுக்கு, இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது விடை கிடைத்துவிடும்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close