Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யானைகளை காக்க களமிறங்கிய வனத்துறை! - ஆப்ரேஷனில் சிக்கிய அடுக்குமாடிகள்

னப் பகுதிகளில், யானை வழித்தடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்துத் தள்ளுமாறு, உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது வனத்துறை. ' வரும் காலங்களில் ஒரு யானைகூட இறந்துவிடக் கூடாது என அரசு எச்சரித்துள்ளது. அதற்காகவே, ஆக்கிரமிப்புக் கட்டடங்களின் பட்டியலை அனுப்பி வைத்திருக்கிறோம்' என்கிறார் வனத் துறை அதிகாரி ஒருவர்.

கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து யானைகள் மரணமடைந்த நிகழ்வு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கவலையடையச் செய்துள்ளது. ரயில் தண்டவாளத்தைத் தாண்டியதால் மரணம்; ஊருக்குள் புகுந்த யானை மரணம்; வனத்துறையால் பிடிபட்ட யானை மரணம் என வெளியான செய்திகள் பொதுமக்களையும், விலங்குகள் நல ஆர்வலர்களையும் பெரிதும் கவலையடையச் செய்தது. அதிலும், மதுக்கரையில் பிடிபட்ட யானையின் மரணம் தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில், யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைப் பட்டியல் எடுத்து, இடித்துத் தள்ள உத்தரவிட்டுள்ளது தமிழக வனத்துறை.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், " நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளின் எல்லைகளில் இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் வசிக்கின்றனர். இதுதவிர, ஆதிவாசி மக்கள் வசிக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஷெட்டில்மெண்ட் குடியிருப்புகள் உள்ளன. வனப் பகுதிகளில் கல்வி நிறுவனங்கள், ரிசார்ட்டுகள், முதியோர் காப்பகங்கள், ஆயுர்வேத மையங்கள், தொழில் நிறுவனங்கள் என ஏராளமான கான்கீரிட் காடுகள் உருவாகிவிட்டன. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போவதற்கு முக்கியக் காரணமே, அரசின் உயர் பதவிகளில் அங்கம் வகிப்பவர்களின் ஆசிர்வாதத்தோடுதான் கட்டடம் கட்டப்படுகிறது என்பதால்தான்.

 

வனத்துறை சட்டப்படி, வன எல்லைப் பகுதியில் அடுக்குமாடி கட்டங்கள் கட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 300 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் இரண்டு மாடி கட்டடம் கட்ட வேண்டும் என்றால், மலைப் பகுதி பாதுகாப்புக் குழுமமான 'ஹாகா'விடம் அனுமதி பெற வேண்டும். இந்தக் குழுவின் ஒப்புதல் பெறாமல் கட்டப்படும் கட்டங்களை முழுமையாக இடித்துத் தள்ள உள்ளூர் திட்டக் குழுமத்திற்கு அதிகாரம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அனுமதி பெறாமல் நூறுக்கும் மேற்பட்ட அடுக்கு மாடி கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. இந்தக் கட்டடங்கள் அனைத்தும் யானைகளின் வழித்தடத்திலேயே அமைந்திருப்பதை, எங்களுடைய ஆய்வின் மூலம் உறுதி செய்தோம். இவற்றை இடித்துத் தள்ள வனத்துறைக்கு அனுமதி கிடையாது.

'ஹாகா' குழுவில் வனத்துறையின் பங்கு மிக முக்கியமானது. எனவே, ஆக்ரமிப்புக் கட்டடங்களை இடிக்குமாறு உள்ளூர் திட்டக் குழுமத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். தவிர சிறுவாணி ரோடு, பூண்டி ரோடு, நரசீபுரம், ஆனைக்கட்டி ரோடு, குருடம்பாளையம், நரசிம்மநாயக்கன் பாளையம், பெரியநாயக்கன் பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில், விதிமுறைகளை மீறியுள்ள 42 அடுக்குமாடி கட்டடங்களை இடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளோம். அனுமதியில்லாமல் கட்டடம் கட்டும் இவர்களுக்கு குடிநீர் வசதி, மின் இணைப்பு வசதி ஆகியவை கிடைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகள் உதவி செய்கின்றன. எங்களுடைய முயற்சிக்கு அரசின் பிற துறைகள் ஒத்துழைப்பு அளித்தால் போதும். யானை வழித்தடங்களை மீட்கும் முயற்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம்" என்றார் உறுதியாக.

வனத்துறையின் முயற்சி பற்றி நம்மிடம் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் தமிழ்மறை, " ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடித்துத் தள்ளுமாறு மாவட்ட வன அலுவலர் பெரியசாமி கடிதம் அனுப்பியிருக்கிறார். வரவேற்கக்கூடிய முயற்சிதான். தனியாரின் கட்டடங்களுக்கு இணையாக அரசு நிர்வாகமும் ஏராளமான கட்டடங்களை எழுப்பியிருக்கிறது. உதாரணமாக, குருடம்பாளையத்தில் பாதி மலையை வெட்டி எடுத்து மத்திய ரிசர்வ் போலீஸ் மையம் அமைந்திருக்கிறது. இவை அனைத்தும் யானைகள் செல்லும் பாதைகள்தான். எவ்வளவோ இடங்கள் இருக்கும்போது, இவ்வளவு பெரிய வனப்பகுதியை அழிக்க வேண்டிய அவசியம் என்ன?

அதேபோல், மாங்கரை செல்லும் வழியில் 'சலீம் அலி பறவைகள் சரணாலயம்' அமைந்திருக்கிறது. மத்திய அரசின் இந்தக் கட்டடம் முழுக்க வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது. ஈஷா, காருண்யா உள்ளிட்ட மத நிறுவனங்களின் கட்டடங்களால், மிகப் பெரிய பாதிப்புக்கு யானைகள் ஆளாகின்றன. பட்டா நிலங்களில் அவர்கள் மதக் கூட்டங்களை வைத்தாலும், அதன் மூலம் வன உயிரினங்கள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகின்றன. இவற்றின் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தனியார் ஆக்கிரமித்துள்ள கட்டடங்களின் பட்டியலில் அரசு கட்டடங்களை இணைக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், யானைகளின் வாழ்விடத்தை முழுமையாகக் காப்பாற்ற முடியும்" என்கிறார் தெளிவாக.

-ஆ.விஜயானந்த்
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close