Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிக கட்டணம்... அனுமதி இல்லாமல் ஓட்டம்... அலறும் ஆட்டோ பயணிகள்!

தமிழகத்தில் ஆட்டோ போக்குவரத்து மக்களை பெரும் அல்லலுக்குள்ளாக்கி வருகிறது. சூடு வைத்த மீட்டர்கள், பயணிகளிடம் வசூலிக்கும் கூடுதல் கட்டணம் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து பொதுமக்களிடம் புகார்கள் வந்தபடி இருக்கின்றன.

ட்டோவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், கட்டணம் நிர்ணயிப்பதில் ஒரு ஒழுங்கு முறையை ஏற்படுத்தக் கோரியும், கோவை 'கன்ஸ்யூமர் வாய்ஸ்' அமைப்பைச் சேர்ந்த லோகு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். ‘ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றத்துக்கு ஏற்ப 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்’ என்று அந்த வழக்கில் உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

இந்த வழக்கின் பின்னணி தமிழக அரசின் அறிவிப்பு.  "ஆட்டோ கட்டணம் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 25 ரூபாய்; ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கும் 12 ரூபாய் கட்டணம். இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கூடுதலாக 50 சதவிகிதம் இரவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். காத்திருப்புக்கட்டணம் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் 3 ரூபாய் 50 காசாகும். பயணிகளுக்கு எவ்வளவு தூர பயணம், எவ்வளவு கட்டணம் என்ற ரசீது எலக்ட்ரானிக் மீட்டர் மூலம் வழங்கப்படும். 80 கோடி ரூபாய் செலவில் இலவசமாக அரசே இந்த இயந்திரத்தை பொருத்தும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது ஓட்டுநர் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். வாகனமும் பறிமுதல் செய்யப்படும்" என அரசு 2013 ம் வருடம் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் காகிதத்தோடு இந்த அறிவிப்பு முடங்கிவிட்டது. இந்நிலையில்தான் லோகு மேற்சொன்ன வழக்கை தாக்கல் செய்து உத்தரவு பெற்றார். ஆனால், நீதிமன்ற அறிவுரைக்குப்பிறகும் அரசு செயல்படவில்லை என, "ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை" என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது லோகு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். அதில்," போக்குவரத்து விதிமீறல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் லோகு கூறியிருந்தார்.

தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், " போக்குவரத்து விதிமீறல்கள் அதிகம் நடைபெறுவதாகவும், போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு சிங்கப்பூரில் விதிக்கும் அபராதத்தைப்போல கூடுதல் அபராதம் விதிக்கலாம். குறிப்பாக ரூ.1,500 வரை அபராதம் வசூலிக்கலாம். அது அதிமாக இருந்தால், அதற்கு தகுந்தார்போல் அரசு முடிவு செய்யலாம். ஆட்டோ கட்டணம் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி வசதி செய்து தரவேண்டும். எஸ்எம்எஸ் மூலமும் புகார் தெரிவிக்க வகை செய்ய வேண்டும்" என்று சொல்லி,  இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 18 ம் தேதிக்கு  தள்ளிவைத்து உத்தரவிட்டனர். 

இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

"நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களில் எலக்ட்ரானிக் மீட்டர் இயந்திரங்கள் பொருத்த நடவடிக்கை எடுத்துவருகிறோம். விரைவில் இது முடிவடையும். அதுவரை புதிய கட்டண விகிதத்தை சொல்லி வசூலிப்பதற்கு வசதியாக கட்டண விவர அட்டைகளை ஆட்டோ உரிமையாளர்களுக்கு கொடுக்க உள்ளோம். அங்கீகாரம் பெற்ற ஆட்டோக்களுக்கு அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் கட்டண விவர அட்டைகள் வழங்கப்படும்.

இந்த கட்டண விவர அட்டையை ஆட்டோவில் தொங்கவிட வேண்டும். பயணிகள், தாங்கள் எவ்வளவு கி.மீ. தொலைவு பயணம் செய்துள்ளோம் என்பதை அருகில் உள்ள பழைய கட்டணத்துடன் ஒப்பிட்டு, புதிய
கட்டணத்தின் அடிப்படையில் கட்டண தொகையை கொடுக்க வேண்டும். புதிய கட்டண விவர அட்டையை ஆட்டோவில் தொங்கவிடாமல் இருந்தாலோ, கூடுதல் கட்டணம் கேட்டாலோ, பயணிகள் உடனே புகார் செய்யலாம்” என்றனர்.

வட்டாரப் போக்குவரத்து இணை கமிஷனரான வீரபாண்டியன், " நாங்கள்
கொஞ்சமும் தொய்வில்லாமல் வேலை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதிகமான பள்ளிப் பிள்ளைகளை ஆட்டோவில் ஏற்றும் நபர்களை எச்சரித்தும், அதிக கட்டணம் குறித்து வரும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டும் வருகிறோம். மேலும் பறக்கும் படையினரும் துரிதமாகச் செயல்பட்டு வருகின்றனர்" என்றார்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் உயரதிகாரியிடம் கேட்டதற்கு, " போக்குவரத்து
விதிமுறைகளை மீறுதல், அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் அளிக்கும் போது முறைப்படி நடவடிக்கை எடுத்தல் போன்றவைகளை நாங்கள் கவனிக்கிறோம். கண்ணெதிரே குழந்தைகளை அதிகளவில் ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களை நிறுத்தி எச்சரிப்பதோடு, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தகவலைக் கொடுக்கிறோம். சம்பந்தப்பட்ட ஆட்டோக்காரர்கள் மீது தவறாமல் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

" ஷேர் ஆட்டோ டிரைவர்கள், முதல் சவாரியின்போதே தங்கள் இருக்கைக்கு இரண்டு பக்கமும் ஆட்களை ஏற்றிக் கொள்கிறார்கள். பிடிபட்டு, போக்குவரத்து போலீஸாரிடம் 100 ரூபாய் அபராதம் விதித்தாலும் கவலைகொள்வதில்லை. அந்த அபராத சீட்டைக் காட்டியபடியே அன்று முழுவதும் கூடுதல் பயணிகளை தைரியமாக ஏற்றிக்கொண்டு அன்றைய பொழுதை ஓட்டிவிடுவர். இப்படித்தான் போக்குவரத்து விதிமுறைகளும், நடவடிக்கைகளும் இருக்கின்றன.

தற்போதுள்ள புதிய ஷேர் ஆட்டோவுக்கு 5 பேரை ஏற்றிச் செல்ல மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால், அதில் குறைந்தது 10 பேருக்குமேல்தான் ஏற்றப்படுகின்றனர். 'அபே' என்ற ஆட்டோ வாகனத்தில் மூன்று பேரை ஏற்ற மட்டுமே அனுமதி. ஆனால் அதிலும் இதே கதைதான். கடந்த சில வருடங்களுக்கு முன், இந்த மாடல் ஆட்டோவில்தான் 18 பேரை ஏற்றிச் சென்று, காஞ்சிபுரத்தில் விபத்து ஏற்பட்டதில் அதில் பயணித்த 18 பேரும் இறந்தனர். ஆனால் இன்றளவிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 'அபே' ஆட்டோவில் 20 முதல் 25 பேர் வரை ஏற்றப்படுகின்றனர்.

சென்னையில் தி.நகர், அடையாறு, பாரிமுனை, வேளச்சேரி போன்ற முக்கியமான இடங்களில் குறிப்பாக கிண்டி தொழிற் பேட்டை வளாகத்தில் அதுவும் கிண்டி காவல் நிலையம் எதிரேயே கூடுதல் பயணிகளை ஏற்றும் அவலம் நடக்கிறது. இங்கே பேருந்தும் பயணிகளும் நகரமுடியாதபடி மேஜிக் ஆட்டோக்கள் புழங்கும். இந்த வகை ஆட்டோக்களுக்கு 'டாட்டா மாஜிக் ஆட்டோ' என்று பெயர். ஆனால், இதற்கு கொடுக்கப்பட்டிருப்பது சுற்றுலா வாகனத்துக்கான டூரிசம் லைசென்ஸ். இந்த டாட்டா மாஜிக் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கியது முந்தைய திமுக அரசுதான்.

தமிழகம் முழுக்க மொத்தமே 300  ஷேர் ஆட்டோக்களுக்குதான் அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சாலைகளில் ஓடிக்கொண்டிருப்பவை ஆயிரத்துக்கும் மேலானவை. இது அதிர்ச்சிக்குரிய விஷயம். இதற்கான அனுமதியைக் கொடுத்தது யார், சட்டவிரோதமாக இவை இயங்குவது எதனால் என்ற அத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் அரசியல்வாதிகள். ஆம்...தமிழகத்தில் பெரும்பாலும் ஆட்டோ தொழிலின் மறைமுக உரிமையாளர்களாக இருப்பவர்கள் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல் அரசியல்வாதிகள்தான். இதனால்தான் அரசும் அதிகாரிகளும் வெளிப்படையாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை " என்று இந்த பிரச்னை குறித்து விரிவாக பேசினார்,  ஏஐடியூசி தொழிற்சங்க நிர்வாகி ஏழுமலை.

ஆட்டோ அதிக கட்டணம் குறித்த புகார்களை தெரிவிக்க, போக்குவரத்துத் துறை வடக்கு மண்டலம்: 044 - 26744445 மற்றும் தெற்கு மண்டலம்: 044 - 24749002 என்ற தொலைபேசி எண்களில் 24 மணி நேரமும் புகார் தெரிவித்தால் அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ