Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நமக்குத்தான் வேண்டும் 'நமக்கு நாமே!' - ரிவர்ஸ் கியர் எடுக்கும் ஸ்டாலின்

ட்டமன்றத் தேர்தல் கொடுத்த தோல்வியை விடவும், கட்சிக்காரர்கள் நடத்திய உள்ளடி வேலைகள்தான் அறிவாலயத்தை அதிர வைத்தன. ' ஓரிரு நாட்களில் 5 மாவட்டங்களின் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள். மாநிலம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்திக்கும் திட்டத்தை முன்னெடுக்கப் போகிறார் ஸ்டாலின்' என்கின்றனர் தி.மு.கவினர்.

தேர்தலுக்கு முன்பாக, தமிழகம் முழுவதும் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திய 'நமக்கு நாமே திட்டம்' நல்ல வரவேற்பைப் பெற்றது. களத்தில் இருந்த மற்ற கட்சிகள் எல்லாம் யோசிக்கும் வகையில், பொதுமக்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அமையவில்லை. இதன்பிறகு, கட்சி நிர்வாகிகளுடன் நடந்த தலைமை செயற்குழு கூட்டத்தில், மாவட்ட மற்றும் பகுதிச் செயலாளர்களின் உள்ளடிகள் பற்றி பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர் தோல்வியடைந்த வேட்பாளர்கள்.

இதையடுத்து டாக்டர்.மஸ்தான், பூச்சி முருகன், சூர்யா வெற்றிகொண்டான், வழக்கறிஞர்கள் கண்ணதாசன், பரந்தாமன் ஆகியோர் தலைமையில் விசாரணைக் கமிட்டி ஒன்றை அமைத்தார் ஸ்டாலின். மாநிலம் முழுவதும் பயணம் செய்த இந்தக் குழு, ' ஒவ்வொரு தொகுதிகளிலும் வேட்பாளருக்கு எதிராக என்னென்ன சதி வேலைகள் செய்யப்பட்டன? கழகம் கொடுத்த பணத்தைக் களவாடியது யார்? எதிர்க்கட்சிகளோடு கூட்டணிச் சேர்ந்தவர்கள் யார் என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்து, பட்டியலை அறிவாலயத்தில் சமர்ப்பித்தனர். இதன்பின்னர் கோவை வடக்கு, தூத்துக்குடி உள்பட சில மாவட்டங்களின் செயலாளர்கள் மாற்றப்பட்டனர். " மாநிலம் முழுவதும் கட்சியை மறுசீரமைப்புக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் இருக்கிறார். சட்டமன்றக் கூட்டத் தொடருக்குப் பின் விரிவான பயணம் மேற்கொள்ளும் திட்டமும் இருக்கிறது" என்கிறார் தி.மு.க நிர்வாகி ஒருவர்.

அவரே தொடர்ந்து நம்மிடம், " ராமநாதபுரம், தேனி, மதுரை, திருவள்ளூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் இன்னமும் மாற்றப்படவில்லை. இவர்களை மாற்றிவிட்டு புதிதாக யாரை நியமிப்பது என்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிலும், ஈரோடு மாவட்டத்தில் என்.கே.கே.பி ராஜா மற்றும் அவரோடு நெருங்கிய தொடர்பில் உள்ள பகுதிச் செயலாளர்கள் அனைவரையும் கூண்டோடு கட்சியை விட்டு நீக்குவது பற்றியும் ஸ்டாலின் விவாதித்து வருகிறார்.

சமீபத்தில் திருப்பூருக்கு பயணம் செய்தார் ஸ்டாலின். அங்குள்ள நிர்வாகிகளிடம், " நான் வரும்போது ஆடம்பரம் காட்டுவது, மாலை மரியாதை அணிவிப்பது போன்றவற்றையெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. உங்களுக்குள்ளேயே குரூப்புகளை அமைத்துக் கொண்டு தோல்விப் பாதைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டீர்கள். தோல்வியை பரிசளித்துவிட்டு எனக்கு ஆடம்பர வரவேற்பு கொடுப்பதை நான் ரசிக்கவில்லை. கட்சியை வளர்க்கும் வேலையில் ஈடுபடுங்கள்" எனக் கொதிப்பைக் கொட்டியிருக்கிறார். இந்தக் கொதிப்புக்குக் காரணமே, கொங்கு மண்டலம் முழுவதிலும் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்விதான். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில்தான் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் கட்சியின் சரிந்த செல்வாக்கை நிலைநிறுத்தும் வகையில், பயணத்தை முன்னெடுக்க இருக்கிறார் ஸ்டாலின். அதற்கு முன்னோட்டமாக ஐந்து மாவட்டங்களின் செயலர்கள் மாற்றப்படுவார்கள்" என்றார் விரிவாக.

கட்சிக்குள் நடக்கப் போகும் ' நமக்கு நாமே' திட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

-ஆ.விஜயானந்த்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close