Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரோஹித்தும்...கொஞ்சம் சாண்ட்விச்சும்...'மிஸ்டர் வேர்ல்ட் 2016' பட்டமும்!

ட்டப் படிப்பு முடித்து முதன்முதலில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றபோது அவருடைய எடை 85 கிலோ. அவ்வளவாக குண்டு உடம்பெல்லாம் இல்லை என்றாலும் சராசரியான உருவம்தான். இரண்டாவது முறை அவருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஒரு விமானப் பணியாளருக்கு தேவையான உடற்கட்டிற்காக அவர் உழைக்க ஆரம்பித்தார். அந்த கடமை ஒரு கட்டத்தில் அவருடைய கனவாகவும் மாறியது.

விமான நிறுவன வேலை, டெல் நிறுவன பணிக்குப் பிறகு தந்தையின் குடும்பத் தொழிலை கவனிக்கச் சென்றவர், பகுதி நேரமாக மாடலாகவும் மாறிப்போனார். கடின உழைப்பும், உடற்கட்டும், விடாமுயற்சியும் அவருக்கு டிவி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புக்களையும், விளம்பரப்படங்களையும் பெற்றுக் கொடுத்தது.

இன்னும்...இன்னும் வெற்றியைத் தேடிப் போனவரின் வாழ்க்கையில் பெரிய வெளிச்சமாக கிடைத்துள்ளது  ‘மிஸ்டர் வேர்ல்ட் 2016’ பட்டம். லண்டனில் 'மிஸ்டர் வேர்ல்ட் 2016' ஆக முடிசூட்டப்பட்ட ‘ரோஹித் கண்டேல்வால்’தான் அவர்.

ஹைதராபாத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஹித் அரோரா,  கல்லூரியில் பட்டப்படிப்பினை முடித்தவர். ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திலும், டெல் நிறுவனத்திலும் வேலை செய்தவரை குடும்பத் தொழில் கைநீட்டி அழைத்தது. தந்தையுடன் இணைந்து தொழிலை கவனித்தவருக்கு, ஃபிட்னஸ் மீது தீராத காதல் ஏற்பட்டது. படிப்படியாக குட்டிப் பையன் உருவத்தில் இருந்து உடற்பயிற்சிகள் மூலமாகவும், கட்டுப்பாடான உணவுப் பழக்கம் மூலமாகவும் சிக்ஸ் பேக்ஸ் கொண்ட 6அடி உயர அழகனாக மாறினார் ரோஹித்.

இந்தி சீரியல் உலகில் பல்வேறு வாய்ப்புகள், கரீனா கபூர் உள்ளிட்ட முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களுடன் விளம்பரப் படங்கள் என்று கேரியர் கிராப் எகிற ஆரம்பித்த நிலையில்தான்,  ரோஹித்துக்கு 'உலக அழகன்' பட்டம் மீது ஆசை வந்தது. அதற்கான தன்னுடைய பயணத்தை துவங்கிய ரோஹித்தின் மாடலிங் பாதையில், முதல் பரிசாகக் கிடைத்தது 2015 ம் வருடத்திற்கான ‘மிஸ்டர் இந்தியா’ பட்டம். மும்பையில் நடைபெற்ற அதே விழாவில், கூடுதலாக ’மிஸ்டர் ஆக்டிவ்’ மற்றும் ‘புரவோக் பர்சனல் கேர் பெஸ்ட் ஆக்டர்’ பட்டங்களும் அவருக்கு கிடைத்தன.

’எந்த இலக்கை அடைய வேண்டும் என்பதற்கான முதல் அடி என்பது, நீங்கள் எங்கு இருக்கின்றீர்களோ அந்த இடத்தைத் தாண்டிச் செல்ல வேண்டியதுதான்’ என்று ஒருமுறை தெரிவித்துள்ளார் 26 வயதான ரோஹித். ஒரே வருடத்தில் 85 கிலோவிலிருந்து 75 ஆகக் குறைந்து, மேலும் ஃபிட்டான ரோஹித்தாக மாறி நிற்பதற்கு அவருக்கு அந்த உத்வேகம்தான் கைக்கொடுத்தது.  

இன்று ரோஹித் ஏறி நிற்கும் இந்த உயரம் எளிதாகக் கிடைத்த ஒன்றல்ல. உணவுப் பிரியரான ரோஹித்,  'இதுதான் சாப்பிடுவேன்' என்றெல்லாம் கட்டுப்பாடுகள் வைத்துக் கொண்டதில்லை. ஆனால், மிஸ்டர் வேர்ல்ட்க்காக உழைக்க ஆரம்பித்த பின்னர்,  வெறும் புகைப்படங்களில் மட்டுமே தென்னிந்திய உணவுகளையும், நெய் சேர்த்த வட இந்திய பதார்த்தங்களையும் அவரால் பதிவிட முடிந்தது. பழங்கள், முட்டை சேர்த்த சாண்ட்விச், பழரசம்தான் பெரும்பாலும் உணவு. என்றேனும் எதிர்பாராமல் அதிகமாக சாப்பிட்டுவிட்டால், அதற்காக அவர் இன்னும் ஒருமணி நேரம் கூடுதலாக ஜிம்மில் கலோரிகளைக் கரைக்க வேண்டும்.

'மிஸ்டர் வேர்ல்ட்'  போட்டிக்காக கிட்டதட்ட 3 வருடங்களாக பல்வேறு பயிற்சிகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டுள்ளார் ரோஹித். முதல்கட்டமாக, உலகம் முழுவதிலும் இருந்து குவிந்த பலகோடிக் கணக்கான விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ரோஹித்தும் ஒருவர். பயிற்சிக் காலகட்டத்தில் கால்பந்து, சர்க்யூட் டிரெய்னிங் என்னும் உடல்கட்டுக்கான பயிற்சிகள், கோல்ப், நடனம் ஆகியவற்றையும் அவர் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இந்தப் போட்டிக்காக பலகட்ட கடுமையான பயிற்சிகளைக் கடந்து, கடைசி கட்டத்தில் மொத்தமாக தேர்வாகி நின்றவன்றவர்கள் 47 பேர். அதில் ரோஹித்தும் ஒருவர்.

'லண்டனில் நடைபெற இருந்த இறுதிப் போட்டிக்காக 12 நாட்கள், 47 பேரும் மிகக் கடுமையான உடலுழைப்பைக் கொட்ட வேண்டியிருந்தது' என்கிறார் ரோஹித். திறமைகளை வெளிப்படுத்தும் போட்டியில் ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தின் பாடலுக்கு நடனமாடி, பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கிறார். ‘ஷாருக்கானும் ரன்பீரும் என்னுடைய முன்னோடிகள்’ என்று சிலாகித்துள்ளார்.

ஜூலை 19 மாலை, லண்டனில் 47 போட்டியாளர்களும் பதட்டத்துடன் முடிவிற்காக காத்துக் கொண்டிருந்தனர். அந்த நட்சத்திர மேடையில் ‘மிஸ்டர் வேர்ல்ட் 2014’ நிக்லஸ் பீட்டர்சன்,  ரோஹித்தின் பெயரை ‘மிஸ்டர் வேர்ல்ட் 2016’ என்று அறிவித்ததும் ஒட்டுமொத்த அரங்கமும் கரகோஷத்தில் அதிர்ந்துதான் போனது. ரோஹித், 'உலக அழகனான முதல் இந்தியர்' என்பது மட்டுமல்லாமல், 'முதல் ஆசிய அழகன்' என்பதும் முக்கியமானது.

’டூக்ஸிடோ’ என்னும் கோட் சூட் உடையில் மேடையை அலங்கரித்திருந்த ரோஹித், " இன்னும் என்னால் இந்த வெற்றியை நம்ப முடியவில்லை. முதல் இந்தியனாக இந்தப் பட்டத்தை வென்றுள்ளதில் நான் பெருமை கொள்கிறேன். என்னுடைய பலநாள் கனவு நனவாகியுள்ளது. இந்தத் தருணத்தில் என்னுடைய தந்தை ராஜ்குமாருக்கும், குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வார்த்தைகளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

பட்டம் வென்ற ரோஹித்துக்கு 50,000 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 33 லட்ச ரூபாய் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. கூடவே சர்வதேச அளவில் மாடலாக பணிபுரிவதற்கான வாய்ப்புக்களும் குவிந்தவண்ணம் உள்ளன.

இந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தினை அமெரிக்காவின் பியர்டோரிகோவைச் சேர்ந்த ஃபெர்னாண்டோ அல்வாரேஸ் என்னும் 21 வயது இளைஞரும், மெக்சிகோவைச் சேர்ந்த ஆல்டோ எஸ்பர்ஸா என்னும் 26வயது இளைஞர் மூன்றாவது இடத்தினையும் தட்டிச் சென்றுள்ளனர்.

’பெரிய விஷயங்களை யோசிக்க ஆரம்பிக்கும்போதுதான் உங்கள் வாழ்க்கையில் பெரிய அங்கீகாரங்களும் கிடைக்க ஆரம்பிக்கும்.’ - ரோஹித்தின் இந்த வார்த்தைகள் இன்று அவருடைய வாழ்க்கையில் நிஜமாகியுள்ளது. ஒரு சாதாரண உடலமைப்பு கொண்ட இளைஞனாக இருந்த ஒருவரை அவருடைய இந்த தன்னம்பிக்கைதான் பெரிய தளத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளது. உடலால் மட்டுமல்லாமல் மனதாலும் உயர்ந்து நிற்கும் ரோஹித், ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு சத்தமில்லாமல் பலவருடங்களாக உதவி வருகின்றார். 

இன்று ‘மிஸ்டர் வேர்ல்ட் 2016’ஆக ஜொலிக்கும் ரோஹித், வாழ்க்கையின் உயரங்களைத் தொட விரும்பும்  இளைஞர்களுக்கு கண்டிப்பாக ஒரு வழிகாட்டி !

- பா. விஜயலட்சுமி

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close