Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கபாலி டிக்கெட்டுகள்: அள்ளிச் சென்ற கார்ப்பரேட் நிறுவனங்கள்... கடுப்பாகிப்போன ரசிகர்கள்!


ந்த திரையரங்கின் முகநூல் பக்கத்தை திறந்தாலும், 'கபாலி புக்கிங் எப்போது தொடங்கும்?' என்ற கேள்வி பல ரஜினி ரசிகர்களால் அவற்றின் கமெண்ட் பாக்ஸில் கேட்கப்படுகிறது. இந்த கேள்விகளுக்கு பதிலும் இல்லை. அந்த திரையரங்குகளில் டிக்கெட்டும் இல்லை.

பொதுவாக, ஆன்லைனில் புக்கிங் தொடங்கும் சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று, இருக்கைகள் சிவப்பு நிறமாகிவிடும். ஆனால், கடந்த சில தினங்களில், கபாலி படத்தின் புக்கிங் ஓப்பன் ஆகும் போதே, இருக்கைகள் சிவப்பு நிறத்துடன்தான் காட்சியளித்தன. பல திரையரங்குகள் ஆன்லைன் புக்கிங்கையே புறக்கணித்துவிட்டன.

புக்கிங் ஓப்பன் செய்யும் போதே இருக்கைகள் ஃபுல் ஆகி இருப்பதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த திரையரங்குகள் டிக்கெட்களை கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்றுவிட்டதுதான். நேற்று வெளியான ஒரு மீம், ஏ.ஜி.எஸ் திரையரங்கம் ஒரு ஷோவையே முழுமையாக காக்னிஸான்ட் நிறுவனத்திற்கு விற்ற ரசீதை உள்ளடக்கியிருந்தது.

இப்படி பல திரையரங்குகளும் ஞாயிற்றுக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வரை தங்கள் ஷோக்கள் முழுவதையும் புக்கிங் ஓப்பன் செய்வதற்கு முன்னதாகவே ஃபுல் செய்து விட்டன. மைலாப்பூரில் இருக்கும் ஒரு மல்டிப்ளெக்ஸ் திரையரங்கிற்கு போன் செய்து, புக்கிங் எப்போது ஓபன் ஆகும் என கேட்டதற்கு, செவ்வாய் கிழமை வரை அத்தனை ஷோக்களும் ஃபுல் என்கிற பதிலே கிடைத்தது.

ஆலந்தூரில் இருக்கும் ஒரு திரையரங்க ஊழியரிடம் பேசியபோது, காலை 5, 8 மற்றும் 11 மணி காட்சிகளை ஐடி நிறுவனங்களுக்கு முழுமையாக விற்றுவிட்டதாகவும், ஒவ்வொரு டிக்கெட்டையும் 300 ரூபாய்க்கு மேல் என்கிற விலையில் விற்றதாகவும் கூறினார். இப்படி பல திரையரங்குகளில் டிக்கெட் இல்லாத விரக்தியில், ரசிகர்கள் ஒரு டிக்கெட்டுக்கு 5000 ரூபாய் கூட தர முன்வருகின்றனர்.

உதாரணத்திற்கு, முகநூலில் "என்னிடம் சத்யம் திரையரங்கில் கபாலி திரைப்படத்திற்கு 25 டிக்கெட்டுகள் உள்ளன" என ஒருவர் பதிவிட, தனக்கு அந்த டிக்கெட்டுகள் வேண்டும் எனவும், ஒரு டிக்கெட்டிற்கு 5000 ரூபாய் தர தயாராக உள்ளதாகவும், ஒருவர் கமெண்ட் செய்தார். இன்னொருவர் 8000 ரூபாய் தருகிறேன் எனவும் கமெண்ட் செய்திருந்தார். இப்படி ஏலம் கேட்பது போல், 120 ரூபாய் டிக்கெட்டிற்கு 8000 ரூபாய் வரை தருவதாக மக்கள் முன்வருகின்றனர்.

ஒரு தரப்பினர் இப்படி இருக்க, சிலர் டிக்கெட் கிடைக்காத விரக்தியில், "தமிழ் ராக்கர்ஸாய நமஹ" என டொரண்டின் மேல் பாரத்தை போட்டுவிட்டனர். இதற்கு நடுவில் கபாலியில் இன்ட்ரோ சீன் லீக் ஆகியது. இன்று வேறு ஒரு இணையதளத்தில் முழு படமே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது, அந்த இணையதளத்தை இனி தடை செய்வதிலும் பலன் இல்லை எனுமளவுக்குப் பலரும் பேஸ்புக்கில் முழுபடத்தையும் அப்லோட் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

- ஜெ. விக்னேஷ்                 

 

Save

எடிட்டர் சாய்ஸ்