Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்டை தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது புதிய படை...!

ல ஆளுமைகளை உருவாக்கி இருக்கிறது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்.  ஊடகம், சினிமா, ஆட்சிப் பணி எனப்  பல்வேறு துறைகளில் இன்று கோலோச்சுபவர்களில் பலர்,  விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் முன்னாள் மாணவர்கள்.  

ஆம். சாதிக்க துடிக்க காத்திருக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து,  அவர்களுக்கு போதுமான பயிற்சியையும் அளித்து, ஆளுமையை வளர்த்து, நம்பிக்கை ஊட்டி,  பரந்த வெளியை திறந்துவிட்டு, அவர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது வெள்ளி விழாவைத் தொட்டிருக்கும் இந்த திட்டம்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திட்டத்தின் மூன்று நாள் பயிற்சிப் பட்டறை இன்று துவங்கியது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் விஜய் மில்டனிடம், மாணவ பத்திரிகையாளர்கள் உரையாடினர்,

மாணவர்கள் கேட்ட சில கேள்விகளும், அவர் பதில்களும்...

தரமான தமிழ் சினிமா என்றால் என்ன?

"நான் எடுக்கற படம்தான் தரமான சினிமானு சொல்லுவேன். முதலில் நம்ம மேல நமக்கு நம்பிக்கை வேணும். அதுதான் முக்கியம். ஒரு படம் ரிலீஸ் ஆகி எல்லா தரப்பு மக்களுக்குமே பிடிச்சு இருந்திருந்தால்தான் அது தரமான சினிமா."

உங்க படத்துக்கு ஹீரோவை எப்படி செலக்ட் பண்ணுவீங்க?

"சினிமா ஹீரோ என்பது சினிமாவில் மட்டும் அல்லாமல் நிஜ வாழ்க்கையிலும், அவர் நேர்மையானவராக நல்லவராக இருக்கணும். அவர்களுக்கு இந்த சமூகம் எவ்வளவோ செய்து இருக்கு. அவர்கள் இந்த சமூகத்திற்கு என்ன திருப்பி செஞ்சாங்கன்னு நினைச்சு பார்த்துட்டுதான் அந்த நடிகரையே அணுகுவேன்." என்றார்.

பின்பு, மாணவர்களுடன் கலந்துரையாடிய பத்திரிகையாளர் மீரா,

 

"இந்த இடத்தில் இருந்துதான் என் பத்திரிகை பயணமும் தொடங்கியது. நான் ஒரு தினசரி பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர். ஒவ்வொரு நாளும் பல பிரேக்கிங் நியூஸ்களை பிரேக் செய்வதே விகடன் இணையதளம்தான். அதுதான் விகடன். நீங்க விகடனுக்குள் வந்திருக்கும் நேரம் மிகவும் முக்கியமான காலகட்டம். டிஜிட்டல் மீடியா வளர்ச்சியடைந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நீங்க செய்திகளைப் பல கோணங்களில் கொடுக்க முடியும்.” என்றார்.

குக்கூ இயக்குனர் ராஜுமுருகன் மாணவர்களுடன் பேசும் போது,  “விகடன்,  பல ஆளுமைகளை உருவாக்கி இருக்கிறது” என்றார்.

மேலும் அவர்,  “இன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய நெருக்கடி, நியாயமான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது. அதை விகடன் செய்கிறது. இந்தக் களத்தினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நான் வந்த புதிதில் செய்தித்துறை எனக்கு கடினமான ஒன்றாகத்தான் இருந்தது. அதிலிருந்து நான் வெளியே வர உதவியது விகடன். என்னுடைய ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களுக்கான கதைக்களங்கள், நான் விகடனில் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம்தான். பல சிறந்த இயக்குநர்கள் பத்திரிக்கையாளராக இருந்தவர்கள்தான்.

 

உலகளவில் செய்தியாளர்களால் மட்டும்தான், ஒவ்வொரு விஷயத்தையும் புதுப்புது பரிமாணங்களில் பார்த்து செய்தியாக உருவாக்க முடியும். அதை நீங்கள் இங்கே கற்றுக் கொள்ள முடியும். திறமைகளையும் வளர்த்துக் கொள்ள முடியும். நான் விகடனில் இருக்கும்போது ’லூஸு பையன்’ எழுதினேன். அதில் கிடைத்த அனுபவங்கள் எக்கச்சக்கம். கருணாநிதியை லூஸு பையனில் எழுதியபோது, அதற்கு கருணாநிதி ஒரு பக்க அளவில் ’ஏய்... லூஸு பையா’னு பதிலுக்கு முரசொலியில் கட்டுரை எழுதினார். இப்படி பல அனுபவங்கள் எனக்கு விகடனில் நிருபராக வேலை செய்யும்போது கிடைத்ததுதான். எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.”

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எழுத்தாளர் பிரபஞ்சன் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.



"விகடன் குழுமத்தில் கிட்டதட்ட 2 ஆண்டுகாலம் நானும் பணிபுரிந்திருக்கின்றேன் என்பதே மகிழ்ச்சியான விஷயம். இன்றைக்கு மாணவப் பத்திரிகையாளார்களாக அமர்ந்திருக்கும் நீங்கள் வெள்ளிவிழா நாயகர்கள். இது மாணவப் பத்திரிகையாளர்கள் திட்டத்தின் 25-வது வருடம் என்பதே விகடனின் வெற்றி. ஒரு பத்திரிகையாளனாக அழகான விஷயங்களைத்தான் சொல்ல வேண்டும் என்பது கட்டாயமில்லை. சாதாரண மொழியிலேயே ஒரு விஷயத்தை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்த்துவிட முடியும். இயல்பாக, இயற்கையாக இருக்கும் எழுத்துதான் எப்போதும் அழகு. ஒரு பத்திரிகையாளர் எப்போதும் உண்மையைத் தேடிக் கண்டறிய வேண்டும். எண்ணத்தில் நேர்மையும், எழுத்தில் சுத்தமும் இருந்தாலே சமூக மாற்றத்தினை ஏற்படுத்திவிட முடியும்.”

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உளவியல் நிபுணர் அபிலாஷா மாணவர்களுடன் கலந்துரையாடினார்.



"மீடியாவின் வளர்ச்சி சில வருடங்களாக மாறிக்கொண்டே வருகிறது. இந்த மாற்றத்திற்கு நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் எழுதுவதில் இந்த சமூகத்திற்கு சின்ன பலனாவது இருக்க வேண்டும். நீங்கள் எழுதும் ஒரு செய்தியை பல லட்சம் பேர் படிக்கிறார்கள். அதை கருத்தில் கொண்டு எழுத வேண்டும். உங்களது சொந்த கருத்துக்களை நீங்கள் தரும் செய்திகளில் திணிக்க கூடாது. முக்கியமாக உளவியல் சார்ந்த விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். இந்த வயதில் எல்லாருக்குமே தடுமாற்றம் வரும். நீங்கள் நம்பிக்கையாக இருந்தால், யாரும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. எதையும் செய்யும் முன் திட்டமிட்டு செய்யவேண்டும், அதேபோல டீம் வொர்க் முக்கியம். ஆல் தி பெஸ்ட்."

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.



"ஊடகத்துறையில் முதல்நாள் துவங்கி நான் தொலைக்காட்சி ஊடகத்தில்தான் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால், எனக்கு எழுதுதல் மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு பாடலைக் கேட்கும்போது இடையே வருகின்ற குரல் எதற்காக என்பதுபோலத்தான் ஒரு செய்தியை கூகுளிலேயே தேடிக் கொள்ளலாம் என்னும்போது செய்தியாளர் எதற்காக என்ற கேள்வியும். ஆனால், அந்த செய்தி உண்மையா, பொய்யா என்று செய்திக்குள் இருக்கும் கிளைத் தகவல்களையும், தீர்மானமான கூற்றுகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒரு பத்திரிகையாளன் அவசியம். எதையும் துணிவாக எதிர்கொள்ளும் தைரியமான குணாதிசயம் ஊடகவியலாளனுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. எந்த ஒரு செய்தியை அணுகும்போதும் அது சரியா, தவறா என்ற கேள்வி நமக்குள்ளேயே எழ வேண்டியது அவசியம். தயவுசெய்து கற்பனையான கருத்துக்களைத் திணிக்காதீர்கள். ஏற்கனவே பிரபலமான செய்தியைக் கொடுப்பதைவிட ஒரு சாதாரண செய்தியைக் கூட மக்களிடம் எளிதாக சென்றடையும் வகையில் எழுதப் பழகிக் கொள்ளுங்கள்.”

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊடகவியலாளர் கார்த்திகை செல்வன் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.



"கிட்டதட்ட 2500க்கும் மேற்பட்ட போட்டியாளர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நீங்கள் இங்கே மாணவப் பத்திரிகையாளர்களாக அமர்ந்திருக்கிறீர்கள். அதுவே உங்களிடம் திறமை இருக்கு என்பதற்கான தொடக்கம்தான். ஊடகம் என்பதே ’வாய்ஸ் ஆப் வாய்ஸஸ்’ அதாவது எங்கெல்லாம் மனித உரிமை மீறல்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் எளிய மக்களின் குரலாக இருந்து பிரச்னைகளுக்கு எதிராக போராடுவது. ஒரு செய்தியை பல்வேறு ஊடகவியலாளர்களும் தொடரும்போது அதில் நம்முடைய தனித்தன்மை எதுவோ அதை நிரூபிக்க முயற்சிக்க வேண்டும். ஒரு பத்திரிகையாளன் எப்போதுமே ஒரு வட்டத்திற்குள் அடங்கிவிடாமல் எல்லை தாண்டிய சிந்தனைகளையும், கோட்பாடுகளையும் கொண்டவனாக சிந்திக்க வேண்டும்.”

இந்த மூன்று நாள் முகாமில் மேலும் பல்துறை ஆளுமைகள் கலந்து கொண்டு, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். மேலும் பல ஊடகப் பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

புதிய படை, பட்டை தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது...!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் முன்னாள் மாணவர்கள் #VikatanStudentScheme என்னும் ஹாஷ்டாக்கில் விகடனுடனான தங்களது நினைவுகளைப் பகிரலாம்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ