Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' சுவாதி வழக்கும் ஐந்தாயிரம் பெண்களும்!' -அச்சத்தை அகற்றுவாரா முதல்வர்?

நுங்கம்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. ' தனிப்படை போலீஸார், உயர் காவல் அதிகாரிகள் தலையீடு என சுவாதி வழக்கிற்குக் காட்டிய வேகத்தை, ஐந்தாயிரம் பெண்களின் படுகொலையிலும் அரசு காட்டுமா?' எனக் கேள்வி எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

" டெல்லியை உலுக்கிய நிர்பயா வழக்கைப் போலவே, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் மரணமும் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சந்தேகப்படும் நபரை நெல்லையில் வைத்துக் கைது செய்தது காவல்துறை. ' சுவாதி வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்ட நாள் முதலாக, இந்த வழக்கை விரைந்து முடிக்கவே காவல்துறை விரும்புகிறது. சுவாதியின் தந்தை வாக்குமூலத்தையோ, பிலால் மாலிக் வாக்குமூலத்தையோ வெளியிலேயே சொல்லவில்லை. ஆனால், ராம்குமாரின் வாக்குமூலம் என சில தகவல்களை கசிய விடுகின்றனர். விசாரணை சரியான கோணத்தில் செல்லவில்லை என்பதை உறுதியாகவே கூறுகிறோம். கூடவே, இந்த வழக்கில் அரசு நிர்வாகங்கள் காட்டிய அவசரத்தைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறோம். அதோடு எங்களுக்கு சில கேள்விகளும் எழுகின்றன" என ஆதங்கத்தோடு தொடங்கினார் மதுரை எவிடென்ஸ் அமைப்பின் கதிர்.

அவர் நம்மிடம்,

" டெல்லி நிர்பயா, சென்னை சுவாதி என தலைநகரங்களை ஒரு படுகொலை உலுக்கும்போது, நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறிவிடுகிறது. வழக்கின் குற்றவாளிகள் என சந்தேகப்படும் சிலர் பிடிபடும்போது, பொதுவெளியில் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதுபோன்ற வழக்குகளுக்கு ஊடகங்களும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆனால், கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து இதுவரையில் 5,447 பெண்கள் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள் என்று யாருக்காவது தெரியுமா? படுகொலை செய்யப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் கிராமப்புறப் பெண்கள் என்பதுதான் அதிர்ச்சியான உண்மை. இவர்களைப் பற்றி யாராவது அக்கறை எடுத்துக் கொண்டார்களா? காவல்துறையின் எந்த உயர் அதிகாரியாவது அதிக சிரத்தையோடு இந்தப் படுகொலை வழக்குகளை அணுகினாரா என்றால், மிகப் பெரிய கேள்விக்குறியே மிஞ்சுகிறது.

எங்கள் அமைப்பு எடுத்த ஆய்வில், 2006-ம் ஆண்டில் 515 பெண்கள், 2007-604, 2008-624, 2009-587, 2010-629, 2011-625, 2012-622 2013-660, 2014-581 எனத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆண்டுவாரியாக, கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தே வந்திருக்கிறது. இதில், 30 சதவீத பெண்கள் பொதுஇடத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர் அளவிலான அதிகாரிகளே விசாரணை செய்திருக்கிறார்கள். சமூகத்தில் அந்தஸ்தில் உள்ளவர்களுக்காக அமைக்கப்படும் தனிப்படை விசாரணையோ, உயர் அதிகாரிகளின் தலையீடோ இந்த பாவப்பட்ட பெண்களின் பின்னால் அணிவகுக்கவில்லை. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களில் 15 சதவீதம் பேர் கூட தண்டனைக்கு ஆளாகவில்லை. அந்தளவிற்குத்தான் புலனாய்வின் வேகம் இருந்திருக்கிறது.

இதைவிடக் கொடுமை, இந்த வழக்குகளில் நீதிமன்றத்திற்கே போகாத பல வழக்குகள் காவல்நிலையத்தில் முடங்கிக் கிடக்கின்றன. ஒரு கொலை வழக்கை எடுத்துக் கொண்டால் புலன் விசாரணை என்பது வேறு, சட்டம்-ஒழுங்கு என்பது வேறு. இரண்டையும் வேறு வேறு அதிகாரிகள்தான் கவனிக்க வேண்டும். நமது மாநிலத்தில் இரண்டையும் ஒரே அதிகாரிகள்தான் கவனிக்கிறார்கள். இதனால் பல வழக்குகளில் நியாயமான புலன் விசாரணை நடப்பதில்லை. முன்பெல்லாம் ஒரு குற்றச் செயல் நடந்தால், காவலர்கள் நேரடியாகச் சென்று ஏராளமான ஆதாரங்களைத் திரட்டி வருவார்கள். இப்போது சி.சி.டி.வி, செல்போன் போன்ற டிஜிட்டல் ஆதாரங்களையே போலீஸார் நம்புகிறார்கள். இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவர் குற்றவாளி என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

பல நேரங்களில் இதுபோன்ற ஆவணங்கள் நீதிமன்றங்களில் செல்லுபடியாவதில்லை. சுவாதி படுகொலை வழக்கில் ஒருவர் பிடிபட்டவுடன், தனிப்படை போலீஸாருக்கு முதல்வர் பாராட்டு தெரிவிக்கிறார். அதேபோல், கடந்த பத்தாண்டுகளில் படுகொலை செய்யப்பட்ட ஐந்தாயிரம் பெண்களின் வழக்குகளையும் விரைந்து நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்வதை முதல்வர் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கேற்ப, அரசு வழக்கறிஞர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். ஒரு சுவாதி, ஒரு நிர்பயா போலத்தான், படுகொலையில் சிக்கும் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட பெண்களும். இவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது" என்றார் வேதனையோடு.

-ஆ.விஜயானந்த்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ