Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'என்னை கைது செய்ய உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு நன்றி '- பியூஷ் மனுஷ்!

 

 ட்டு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் குடியேறிய நண்பன் அழைத்து, " யார் இந்த பியூஷ் மனுஷ், என்ன செய்தார் அவர்... ஏன் அவரை காவல் துறை கைது செய்தது... ஏன் சிறை காவலர்கள் அடித்தார்கள்..." என்று கேள்வியாக அடுக்குகிறான்.  சேலத்திலிருந்து பேசும் நண்பர்கள், “இந்த கைது பியூஷை மட்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. அவர் செய்த பணிகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறது. அவர் முன் முயற்சியால் புனரமைக்கப்பட்ட சேலம் மூக்கனேரி ஏரியை, அவரின் கைதுக்கு பின் பலர் வந்து பார்வையிடுகிறார்கள்.” என்றார்கள்.

பியூஷ், நிபந்தனை பிணையில் வெளியே வந்துவிட்டார். ஆனால், சிறையில் காவலர்கள் தன்னை  மோசமாக தாக்கியதாக கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பி இருக்கிறார்.  இந்த குற்றச்சாட்டுகள் குறித்தும், அவர் கைது செய்யப்பட்ட பின்னணி குறித்தும், அடுத்து அவர் மேற்கொள்ளப்போகும் பணிகள் குறித்தும் அவருடன் உரையாடினோம்.

அந்த உரையாடல்...



சிறையில் என்னதான் நடந்தது....?

நான் பல போராட்டங்களை முன்னின்று நடத்தி இருக்கிறேன். சில முறை அதற்காக கைதும் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் காவல் துறையும் சரி... சிறை துறையும் சரி... இவ்வளவு மோசமாக நடந்து கொண்டது இல்லை.  நாங்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ஜூலை 7 ம் தேதி, சிறை கண்காணிப்பாளர் தலைமையில் ஏறத்தாழ 30 பேர் என்னை தாக்கினார்கள். எனக்கு கால்களிலும், முதுகிலும், தலையிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. இதனை நான் சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை.  நான் மட்டும் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை, என்னுடன் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் முத்துவையும் அவர்கள் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.

'நீங்கள் இது குறித்து எழுத வேண்டும், சிறை காவலர்கள் மீது அவதூறு பரப்ப வேண்டும்' என்பது என் நோக்கமல்ல. நான் சொல்வதற்கு ஆதாரம் சிறைக்குள்ளேயே இருக்கிறது. ஆம், சிறை கண்காணிப்பாளர் அறையில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தாலே போதும். முழு உண்மையும் வெளி வந்துவிடும். 


நீங்கள் கைது செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. சிறைக்கும் சில முறை சென்று இருக்கிறீர்கள். ஏன் இந்த முறை மட்டும் சிறைத் துறை இவ்வளவு கடுமையாக நடந்து கொண்டது என்று நினைக்கிறீகள்...?

எனக்கு அவர்கள் மீது துளியும் கோபம் இல்லை. அவர்களுக்கு வெளியிலிருந்து அழுத்தம் வந்து இருக்கிறது. நாங்கள் முன்னின்று நடத்திய போராட்டத்தினால் சில பெரும் பணக்காரர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் காவல் துறைக்கு எதிராகவும் சில கேள்விகளை முன்வைத்து இருக்கிறோம். இவர்களின் அழுத்தம் காரணமாகதான் என் மீது தாக்குதல் தொடுத்து இருக்கிறார்கள்.

நான் இதை இத்துடன் விடப்போவது இல்லை. நிச்சயம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்; முழு உண்மையையும் வெளியே கொண்டு வருவேன். ஏனென்றால், இதை தனிமனிதனுக்கு ஏற்பட்ட பாதிப்பாக மட்டும் நான் இதை பார்க்கவில்லை.

'நமக்கு ஏன் இந்த வேலை... நாம் உண்டு, நம் தொழில் உண்டு என்று இருந்து இருக்கலாமோ' என்று சிறையில் இருந்த போது எண்ணி இருப்பீர்கள்தானே...?

நான் சாகசக்காரன் இல்லை. நானும் சாமான்யன்தான். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த எண்ணம் துளியும் வரவில்லை. அதற்கு என் குழந்தைகளும் ஒரு காரணம்.

புரியவில்லையே...?

எம் போராட்டங்கள் எல்லாம், வெளிப்படையான நிர்வாகத்திற்காகவும், சூழலைக் காக்க வேண்டியும் நடத்தப்படுபவை .ஒரு நிமிடம் உங்கள் விழிகளை மூடி கற்பனை செய்து பாருங்கள், வெளிப்படையான நிர்வாகம் இல்லாமல், எங்கும் ஊழல் மலிந்து போனால், நம் வளங்கள் எல்லாம் பெரு நிறுவனங்களால் சுரண்டப்பட்டால் என்ன நேரும்...? மோசமான கலகம் வெடிக்கும். நான் என் பிள்ளைகளை அத்தகைய சூழலில் விட்டுச் செல்ல விரும்பவில்லை. அதுதான் நான் நம்பிக்கையை இழக்காததற்கு காரணம் என்று நினைக்கிறேன்.


உங்கள் மனைவி இதனை எப்படி பார்க்கிறார்...?

என் மனைவி மோனிகா, இந்த கைதிற்கு முன்பு வரை, நான் முன்னெடுக்கும் போராட்டங்களில் இருந்து தள்ளியே இருந்தார். பெரிய எதிர்ப்பெல்லாம் காட்டியது இல்லை என்றாலும், ஆதரவும் கொடுத்தது இல்லை. ஆனால், நான் கைது செய்யப்பட்ட பிறகு, நண்பர்கள் ஒருங்கிணைத்த  கூட்டத்தில் பேசிய அவர், இனி தானும் மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபடப்போவதாக பேசி இருக்கிறார். உண்மையாக, நான் இதற்கு காவல் துறைக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.



இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மக்கள் உங்களுக்கு அளித்த ஆதரவை எப்படி பார்க்கிறீர்கள்...?

உண்மையில் நெகிழ்ச்சியாக இருக்கிறது. நான் சிறையில் இருந்த போது நூற்றுக் கணக்கான இளைஞர்கள் எனக்காக சேலத்தில் கூடி, விவாதித்து இருக்கிறார்கள். மூக்கனேரி ஏரியில் ஐம்பது மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.

அரசும், அதிகாரிகளும் இளைஞர்கள் அரசியல் இருந்து தள்ளி இருக்க வேண்டும். அவர்கள் வெறும் நுகர்வோர்களாக இருந்தால் போதும் என்று நினைக்கிறது. என்னைப் போன்றோர்களை கைதுசெய்வதன் மூலம் இளைஞர்களை அச்சுறுத்தலாம் என்பது அதிகாரிகளின் எண்ணம். ஆனால், அது ஈடேறவில்லை. இளைஞர்களை இவர்கள் இன்னும் அரசியல்படுத்தி இருக்கிறார்கள். அதற்காக, அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

- மு. நியாஸ் அகமது

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஜல்லிக்கட்டு கானா, விரட்டி பிடித்து கபடி, சுட்டிகளின் முழக்கம்... மெரினா போராட்டத்தின் நேற்றிரவு நிகழ்வுகள்
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close