Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கமிஷனருடன் பேசக்கூடாதாம்' - மதுரை போலீஸ் திடீர் தடா!

ரு செய்தி நமக்கு வந்தால் இருதரப்பினரிடமும் கருத்து கேட்டபிறகுதான் கட்டுரை ஆக்குவது விகடன் வழக்கம். ஆனால், செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களை மிரட்டினால் எப்படி இருக்கும்? அதுவும் ஒரு உயர் அதிகாரியே மிரட்டினால் எப்படி இருக்கும்?

நமது மதுரை நிருபர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே எழுதுகிறார்...

 மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் பகவத்சிங் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருபவர். அவர் நம்மை தொடர்புகொண்டு ஒரு தகவலைச் சொன்னார்...

'ஒரு பிரச்னை தொடர்பாக புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றால்  புகாரை வாங்காமல் இழுத்தடிக்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியாதைக் குறைவான வார்த்தைகளில் பேசுகிறார். சீனியர் கவுன்சில் நான்கு பேர் வந்தும் அவர்களை இருக்கையில் கூட அமர வைக்க மறுத்தார். காவல் நிலையங்கள் மிகவும் மோசமாக இருக்கின்றன. அதனால் சக வழக்கறிஞர்கள் புதூர் காவல் நிலையம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த இருக்கிறோம்' என்று சொன்னார்.

இதுபற்றி போலீஸ் தரப்பு கருத்தை அறிய, மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டோம். மறுமுனையில், அவரிடம் நாம் கேள்விப்பட்ட தகவலை சொல்லி முடிப்பதற்குள்...திடீரென போன் இணைப்பை துண்டித்து விட்டார். அடுத்த இரண்டு நிமிடங்களில் ஒரு போன் நமக்கு வந்தது. எதிர் முனையில் "நீங்கதான் கமிஷனர்கிட்ட பேசியவரா" என்றது ஒரு குரல்.

கமிஷனரிடம் சொன்ன அதே விஷயத்தைப் பற்றி கேட்டார். நாம் சொல்லிமுடித்துவிட்டு, 'நீங்கள் யார்' என்று கேட்டோம். 'மதுரை உளவுப்பிரிவு உதவி கமிஷனர்' என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார்.

அடுத்த அரை மணி நேரத்தில் மதுரை கமிஷனர் ஆபீஸ் உளவுப் பிரிவிலிருந்து, கோபாலகிருஷ்ணன் என்பவர் தொடர்பு கொண்டு, 'உதவிக் கமிஷனர் உங்களை வரச் சொல்கிறார்' என்றார். மறுபடியும் போன் வந்துகொண்டே இருந்தது.

மாலையில் உளவுப்பிரிவு உதவிக் கமிஷனர் முத்துசங்கரலிங்கத்தை சந்தித்தோம்.

" மதுரையில் தினசரி எவ்வளவோ விஷயம் நடக்குது.. எல்லாத்துக்கும் கமிஷனரை நீங்க தொடர்பு கொண்டு பேசுவது சரியில்லை. கமிஷனர் உங்க எடிட்டரிடம் பேசச்சொன்னார். நான்தான் பேசவில்லை. எல்லா இடத்திலும் வைலேஷன் நடக்குது. அதுக்கு நாங்க போக முடியுமா? மூவாயிரம் போலீஸ்காரங்களை கன்ட்ரோல் பண்ணுவதில் இருந்து சட்டம், ஒழுங்கு பிரச்னை வரை எல்லாத்தையும் கமிஷனர் ஒருவரே எப்படி பார்ப்பார்? அவரிடம் நீங்கள் போனில் தொடர்புகொண்டு பேசுவதுக் கூடாது. நான் சொல்வது புரிகிறதா?' என்று அதட்டலான குரலில் பேசினார்.

அவரே தொடர்ந்து, 'கமிஷனர் உங்களைப் பார்க்கவேண்டுமாம்... அவரது அறை வாசலில் வெயிட் பண்ணுங்கள்' என்று சொல்லிவிட்டு, கமிஷனர் அறைக்குள் போனார் முத்து சங்கரலிங்கம். கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தார். 'கமிஷனர் உங்களை சந்திக்க விருப்பம் இல்லை' என்று சொல்லிவிட்டர் எனச் சொன்னார். மீண்டும் அதே மிரட்டல் தொனியில், 'இனி எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசுங்க. உயர் அதிகாரிகளை தொந்தரவு செய்ய வேண்டாம்' என்றார்.

அந்த இறுக்கமான சூழ்நிலையை சமாளித்தபடி, 'மதுரைக்கு யார் கமிஷனர்?' என்கிற குழப்பத்துடன் கிளம்பினோம்.

- நமது நிருபர்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ