Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் பெண் மாவோயிஸ்ட்டுகள் 3 பேர் கைது; ஆள் சேர்க்கும் திட்டம் முறியடிப்பு!

சென்னை: சென்னை மற்றும் கரூரில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்த பெண் மாவோயிஸ்டுகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது...

சென்னையை, அடுத்த படப்பை எருமையூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் மாவோயிஸ்டு  அமைப்பைச் சேர்ந்த பெண் வேலை செய்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, கியூ பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அங்கு சோதனை நடத்தி ரீனா ஜாய்ஸ் மேரி (36) என்ற பெண்ணை கைது செய்தனர். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2002-ம் ஆண்டு நடந்த ஊத்தங்கரை காவல் நிலைய தாக்குதலில் இவர் சம்பந்தப்பட்டவர் என்பதும், இந்த தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2  சந்திரா (50), கலா (52) ஆகியோர் கரூரில் தங்கியிருந்து டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரியவந்தது.

இந்த தகவலை சென்னை போலீசார் கரூர் மாவட்ட போலீசாருக்கு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கோவை, கரூர் கியூ பிரிவு போலீசார்,  கரூர் அருகே உள்ள வெங்கமேடு கணக்குபிள்ளை தெருவில் ஒரு வீட்டில் தங்கியிருந்த சந்திராவையும், கலாவையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஊத்தங்கரை காவல் நிலைய தாக்குதல் வழக்கில்  கண்ணன் என்பவர் அப்போதே கைது செய்யப்பட்டார். கண்ணனின் மனைவிதான் சென்னை படப்பை அருகே தற்போது கைதான ரீனா ஜாய்ஸ் மேரி ஆவார். கரூரில் கைதான கலாவும், சந்திராவும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள். இவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து தகவல் தருவோருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததது.


போலீசார் விசாரணை முடிந்து,  ரீனா ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,  நீதிமன்ற காவலில், வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சந்திரா, கலா ஆகியோர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

 
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் கியூ பிரிவு போலீசார் விடிய விடிய நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "  மாவோயிஸ்டு இயக்கத்தின் தலைவர்கள் தமிழகத்திலும், ஒரு பெரிய தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த முயற்சியை ஏற்கனவே தமிழக போலீசார் பலமுறை முறியடித்து உள்ளனர். 2008-ம் ஆண்டு கொடைக்கானல் மலைப்பகுதியிலும், வருசநாடு மலைப்பகுதியிலும் அவர்கள் முகாம் அமைத்தபோது முக்கியமான  மாவோயிஸ்டுகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 மாவோயிஸ்டுகள் குண்டு காயத்துடன் பிடிபட்டார்கள்.

2002-ம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இதுபோல் பயிற்சி முகாம் அமைத்தபோது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி 29 பேரை கைது செய்தனர். இதில் பார்த்திபன் என்ற மாவோயிஸ்டு கொல்லப்பட்டார். இதுபோல் அவர்கள் முளைவிட முயற்சிக்கும்போதெல்லாம் கிள்ளி எறியப்படுகிறார்கள். சமீபத்தில் கோவையில் 5  மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில், தமிழகத்தில் மீண்டும் மாவோயிஸ்டுகள் தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அதை அடிப்படையாக வைத்து, கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பெண்களும் துணி ஏற்றுமதி நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்துள்ளனர். கல் குவாரிகளில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்துள்ளனர். இதுபோல் வேலை பார்த்துக்கொண்டே ‘மாவோ’ இயக்கத்திற்கு சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கரூர், நாமக்கல் ஆகிய பகுதிகளில் ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பாவி இளைஞர்களையும், இளம்பெண்களையும் மூளைச்சலவை செய்து மாவோயிஸ்டுகளாக மாற்றும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

ஆட்கள் சேர்க்கும் பணி முடிந்தவுடன் அடுத்த மாதம் நீலகிரி மாவட்டத்திலுள்ள மலைப்பகுதியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களின் எல்லைகள் சந்திக்கும் இடமான ‘முச்சந்திப்பு’ என்ற இடத்தில் பெரிய அளவில் பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டு இருந்துள்ளனர். இந்த பயிற்சி முகாமில் ஆந்திராவிலிருந்து பத்மா உள்ளிட்ட ‘மாவோ’ தலைவர்கள் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த 3 பெண்களும் கைது செய்யப்பட்டதன் மூலம் மேற்கண்ட பயிற்சி முகாம் நடத்தும் முயற்சியும், ஆள் எடுக்கும் பணியும் முழுவதுமாக முறியடிக்கப்பட்டுள்ளது" என்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close