Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெட்ரோ ரயிலுக்கு தி.மு.க. அரசைவிட அ.தி.மு.க. அரசு அதிக நிதி ஒதுக்கியது! - முதல்வர் ஜெயலலிதா

சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தி.மு.க. அரசைவிட, அ.தி.மு.க. அரசு அதிகமாக நிதி ஒதுக்கி பணிகளை விரைவுப்படுத்தியது என்று முதல்வர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் அடுத்தக்கட்டமாக எழும்பூரில் இருந்து சென்ட்ரல் வரை சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டித்து, ரூ.3,770 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இதற்கு நிலம் கையப்படுத்தும் பணி நிறைவடைந்து, சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை, மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்புக்கான அடிக்கலை நாட்டி, முதல்வர் ஜெயலலிதா இன்று அத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.  இந்த விழாவில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே 8 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, ''சென்னை மெட்ரோ ரயில் முதல் வழித் தடத்தை, வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை நீட்டிக்கும் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த வழித் தடத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுத் தருவதில் முக்கியப் பங்காற்றியவர் வெங்கையா நாயுடு. தமிழகத்தின் உற்ற நண்பர் வெங்கையா நாயுடு. தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்றுத் தருவதில் முன்நிற்பவர் வெங்கையா நாயுடு என்று சொன்னால் அது மிகையல்ல. மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் அவர் பெரும் பங்காற்றி உள்ளார். வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி பெற்று தந்தவரும் அவரே.

பிரதமர் மோடி மற்றும் வெங்கையா நாயுடு ஒத்துழைப்பால் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு பற்றிய ஆய்வு, கடந்த 2003-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில்தான் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித் தடம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித் தடம் என இரு வழித் தடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எனது தலைமையிலான அப்போதைய அரசு வித்திட்டது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. அரசால் 1,103 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. அரசால் அதைவிட 5 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

2011 ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் கடந்த ஜுன் மாதம் வரை 11,596 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு தேவையான நிதியை ஒவ்வொரு ஆண்டும் முழுமையாக ஒதுக்கி, திட்டப் பணிகள், குறித்த காலத்தில் முடிவுறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

இத்திட்டத்திற்காக இதுவரை தமிழக அரசு 2,383 கோடி ரூபாயை பங்கு மூலதனமாகவும், 1,854 கோடி ரூபாயைச் சார்நிலைக் கடனாகவும், 82.51 கோடி ரூபாயை மானியமாகவும் வழங்கியுள்ளது. மத்திய அரசு 1,950 கோடி ரூபாயைப் பங்கு மூலதனமாகவும், 365 கோடி ரூபாயைச் சார்நிலைக் கடனாகவும் வழங்கியுள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் மூலம் 7,095 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு உள்ளது. 

அடுத்த மாதத்திலும், அக்டோபர் மாதத்திலும், அடுத்தடுத்த கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன. மெட்ரோ ரயில் பணிகள் குறித்த காலத்தில் முடிய நடவடிக்கை எடுக்கப்படும். 2017 ம் ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ பணிகள் அனைத்தும் முடிவடையும்." என்றார்.

வெங்கையா நாயுடு

இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பு மலரை வெளியிட்டு,  மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உரையாற்றும்போது, ''இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது. இந்தியப் பொருளாதாரத்தில் தமிழகம் மிக முக்கிய இடத்தில் உள்ளது.

மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம், தமிழகத்தில் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். வடசென்னையில் வசிக்கும் மக்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் பெரும் உதவியாக இருக்கும். வடசென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இது உதவும்.

முதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. நாட்டின் பல்வேறு நகரங்களில் இதுவரை 316 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரயில் பணி நடந்து முடிந்துள்ளது. இன்னும் 553 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரயில் பணியை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது" என்றார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close