Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாயமான ராணுவ விமானம்... எந்த தடயமும் கிடைக்கவில்லை!

சென்னை: மாயமான ராணுவ விமானம் பற்றிய எந்த தடயமும் இதுவரை கிடைக்காததால், அந்த விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு புறப்பட்டு சென்ற ஏ.என்–32 ரக ராணுவ சரக்கு விமானம், நடுவானில் திடீரென மாயமாகிவிட்டது. இந்த விமானம் கிளம்பிச் சென்ற 16வது நிமிடத்தில் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும், ரேடாரின் பார்வையில் இருந்து அது திடீரென மறைந்தாலும் அது கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.. மேலும், மோசமான வானிலை காரணமாக காற்றின் சுழற்சியில் சிக்கி விமானம் கடலில் விழுந்து இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த விமானம், சென்னைக்கு கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவில் 23 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது தான் திடீரென்று மாயமாகி உள்ளது. இதனால் அந்த இடத்தில் கப்பல்கள் தேடி வருகின்றன. தேடுதல் விமானங்களும் அந்த இடத்தில் வட்டமிட்டு பறந்தபடி, கடலின் மேற்பரப்பில் விமானத்தின் பாகங்கள் ஏதாவது மிதக்கிறதா? என்று தீவிரமாக கண்காணிக்கின்றன.

மாயமான ராணுவ விமானத்தில், விமானிகள் உள்ளிட்ட 6 சிப்பந்திகள், விமானப்படை, ராணுவம், கடற்படை, கடலோர பாதுகாப்பு படை ஆகியவற்றைச் சேர்ந்த 15 பேர் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் 8 பேர் என மொத்தம் 29 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்களுடைய கதி என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. இதையடுத்து, மாயமான விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் பணியில் 13 கடற்படை கப்பல்கள், கடலோர காவல் படையைச் சேர்ந்த 6 கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இதுபோக, விமானப்படைக்கு சொந்தமான நவீன தொலையுணர்வு கருவிகள் பொருத்தப்பட்ட சி–130 விமானம், கடற்படையின் பி–81 விமானம், டோர்னியர் விமானம் உள்பட 17 விமானங்களும் மாயமான விமானத்தை தேடி வருகின்றன. அத்துடன் அதிநவீன வசதி கொண்ட மேலும் ஒரு நீர்மூழ்கி கப்பலும் வரவழைக்கப்பட்டு உள்ளது. விமானம் மாயமாவதற்கு முன் கடைசியாக 8.46 மணிக்கு விமானி கட்டுப்பாட்டு அறைக்கு பேசியதாகவும், அப்போது, விமானம் நல்லபடியாக பறந்து கொண்டிருப்பதாக கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்ய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ஏ.என் 32 ரக விமானம், இரட்டை என்ஜீன்களை கொண்டது.  24 மீட்டர் நீளமும், சுமார் 30 மீட்டர் இறக்கையைக் கொண்டது. 16 ஆயிரத்து 800 கிலோ எடை கொண்ட இந்த விமானத்தில்  மொத்தம் 42 பேர் பயணிக்கலாம். 6.7 டன் சரக்குகளை கொண்டு செல்லும் திறன் கொண்டது. மணிக்கு 570 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இதில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 4 மணி நேரம் தொடர்ந்து பறக்க முடியும்.

இந்த விமானம் மேலெழும்ப குறைந்த தொலைவு கொண்ட ஓடுதளமே போதுமானது.  இதற்கு முன் 3 முறை இந்த விமானத்தில் சிறிய அளவிலான கோளாறுகள் ஏற்பட்டு, பின்னர் சரி செய்யப்பட்டுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

நேற்று 3–வது நாளாக மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது என்றாலும், மாயமான விமானம் பற்றிய எந்த தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. பரந்து விரிந்த கடல் பகுதியில் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளதாலும், வானிலை மோசமாக இருந்தபோதிலும் தேடும் பணி இடைவிடாமல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆனால் மாயமான விமானத்தை பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை. விமானம் மாயமானதாக கருதப்படும் பகுதியில் கடலின் ஆழம் சுமார் 3,500 மீட்டர் இருக்கும் என்பதால் தேடுதல் பணி மிகவும் சவாலாக இருப்பதாகவும், தேடுதல் பணிக்கு உதவும் வகையில் செயற்கை கோள் தகவல்களை பெற இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) உதவியை நாடி இருப்பதாகவும் விசாகப்பட்டினத்தில் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி பிஷித் தெரிவித்துள்ளார்.

மேகக்கூட்டங்களை ஊடுருவி படம் எடுக்கும் ‘ரிசாட்’ செயற்கை கோளின் படங்களை பயன்படுத்தி மாயமான விமானத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்தார். இதை தொடர்ந்து, இஸ்ரோ சார்பில் செயற்கைக்கோள் உதவியுடன் புகைப்படங்கள் எடுக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது. இதில் இஸ்ரோ பல்வேறு புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. ஆனாலும் அந்த புகைப்படங்களில் விமானம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது..

இது தொடர்பாக மூத்த பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''உள்நாட்டு செயற்கைக்கோள்கள் சில புகைப்படங்களை அளித்துள்ளன. ராணுவ விமானம் மாயமானதாக கருதப்படும் குறிப்பிட்ட இடத்தில் கப்பல்களும் தீவிரமான தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் இதுவரை மாயமான விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை" என்று கூறி உள்ளார்.

இதற்கிடையே, அந்தமான் சென்ற விமானம் மாயமானது பற்றி தாம்பரம் விமானப்படை அதிகாரிகள் சேலையூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, விமானப்படை அதிகாரிகளுடன் சேலையூர் போலீசார் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். மேலும், மாயமான விமானம் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மிகுந்த பரிதவிப்பில் உள்ளனர். அவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சந்தித்து, தேடுதல் பணிகள் குறித்து எடுத்துக்கூறியதோடு, நம்பிக்கையும், ஆதரவும் தெரிவித்து உள்ளனர்.

மாயமான விமானத்தில் பயணம் செய்த கடற்படை ஊழியர் பூபேந்திர சிங்கின் மகன் அசுதோஷ் சிங், விமானத்தில் பயணம் செய்த எனது தந்தையும், மற்றவர்களும் பத்திரமாக திரும்பவேண்டும் என்று பிரார்த்திக்குமாறு இந்தியர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்து உள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close