Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' இனி யானைகளுக்கு நாங்கள்தான் பாதுகாவலர்கள்!' -மாற்றத்தை விதைத்த மாங்கரை மக்கள்

வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை வழித்தடங்களை சுத்தம் செய்யும் பணியில் நேரடியாகக் களம் இறங்கியுள்ளனர் கோவை இளைஞர்கள். ' நேற்று ஒரேநாளில் மட்டும் 600 கிலோ உடைந்த மதுபாட்டில்களை அப்புறப்படுத்தியுள்ளோம். வனப்பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்' என்கின்றனர் கொதிப்போடு. 

கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் வழியில் உள்ளது மாங்கரை. இயற்கை எழில்சூழ்ந்த இந்தப் பகுதி முழுக்க முழுக்க யானைகளின் வலசைப் பகுதியாக உள்ளது. தமிழக வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தக் கிராமத்தில் அரசின் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆனைக்கட்டியில் உள்ள அரசு மதுபானக் கடை மூடப்பட்டதால், மாங்கரை டாஸ்மாக் கடைக்கு தினம்தோறும் 500-க்கும் மேற்பட்டவர்கள் மது அருந்த வருகின்றனர். வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கானோர் கூடுகின்றனர். ஆள் அரவமற்ற வனப்பகுதி என்பதால், சாலையின் ஓரத்தில் அமர்ந்தே மது அருந்துகின்றனர். பாட்டில்களையும் காட்டுப் பகுதியில் உடைத்துவிட்டுப் போவதால், அவ்வழியே நடந்து வரும் யானைகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றன. இதை புகைப்படங்களாக எடுத்துக் கொண்டு வன அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு போனார் புகைப்படக் கலைஞர் சூரஜ். இதற்கு வனத்துறை எந்த அக்கறையும் காட்டாததால், கோவையில் செயல்படும் சங்கமம் அமைப்போடு சேர்ந்து, ' யானை வழித்தடத்தை சுத்தம் செய்வோம்' என்ற முழக்கத்தை முன்னெடுத்தார் சூரஜ். நேற்று மட்டும் மாங்கரை வனத்தை சுத்தம் செய்யும் பணியில் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் களமிறங்கினர். பொதுமக்களே நேரடியாகக் களம் இறங்கியதை வனத்துறையினர் எதிர்பார்க்கவில்லை.

சங்கமம் அமைப்பின் சூரஜ், இதுபற்றி நம்மிடம் விளக்கினார். " தினம்தோறும் அந்த வழியாகத்தான் சென்று வருகிறேன். மாங்கரையைக் கடக்கும் யானைகளின் கால்களில் பாட்டில் துண்டுகள் சிக்கி காயத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் செப்டிக்  ஏற்பட்டு யானைகளின் இறப்பிற்கும் ஒரு காரணமாக அமைந்துவிடுகின்றன. காடுகளுக்குச் சென்று மது அருந்துபவர்கள் வனவிலங்குகளின் வாழ்விடத்தைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. இதுபற்றி வனத்துறையினர் கவனத்திற்குப் புகார் கொண்டு சென்றாலும், அவர்கள் கண்டுகொள்வதில்லை. இந்த பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே போலத்தான் வனவிலங்குகளுக்கும். அவற்றின் வலசைப் பாதையில் பாட்டில்களை வீசிச் செல்வதைவிட கொடூரமான ஒரு செயல் இருக்க முடியாது.

ஒவ்வொரு நாள் காலையிலும் மாங்கரை வனப் பகுதியில் சிதறிக் கிடக்கும் மதுபாட்டில்களைக் கண்டால் மனம் மிகுந்த வேதனைப்படுகிறது. இவற்றை அப்புறப்படுத்த நாங்கள் சில பேர்தான் களத்தில் இறங்கினோம். எங்களுடைய முயற்சியைப் பார்த்துவிட்டு நூற்றுக்கணக்கான மக்கள் எங்களுக்குத் தோள் கொடுத்தனர். இதற்குக் காரணம், கோவையில் தொடர்ச்சியாக யானை மரணங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்தான். நேற்று மட்டும் 600 கிலோ உடைந்த மதுபாட்டில்களை அப்புறப்படுத்தினோம். இன்று கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரனை சந்தித்து, ' மாங்கரை மதுபானக் கடையை அப்புறப்படுத்துங்கள்' எனப் புகார் மனு அளிக்க இருக்கிறோம். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களே திரண்டு அந்தக் கடையை இழுத்து மூடுவார்கள்" என்றார் கொதிப்போடு.

மாங்கரையில் மாற்றத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் மண்ணின் மைந்தர்கள். இதர வனப்பகுதிகளுக்கும் இந்த எழுச்சி பரவட்டும்.

-ஆ.விஜயானந்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ