Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனிமரம் தோப்பாகவில்லை; அதிமுகவில் ஐக்கியமானார் முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன்!

சென்னை: த.மா.கா.வில் இருந்து நீக்கப்பட்ட ஞானசேகரன், தனது ஆதரவாளர்களுடன் இன்று ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார்.

காங்கிரசில் இருந்து விலகி ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கியபோது, மூத்த தலைவர்களும் ஆதரவாளர்களும் அவருடன் சென்றனர். ஆனால் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஜி.கே.வாசன் எடுத்த நிலைப்பாட்டுக்கு எதிராக, அக்கட்சியின் மூத்த தலைவர்களே போர்க்கொடி உயர்த்தினர். பீட்டர் அல்போன்ஸ் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி விட்டார். எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்து வந்தவர் சி.ஞானசேகரன். கடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட த.மா.கா., படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து, தேர்தல் கூட்டணி தொடர்பாக ஜி.கே.வாசன் எடுத்த நிலைப்பாடு தொடர்பாக கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி.ஞானசேகரனும் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஞானசேகரனை கட்சியின் மாநில துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தும், வேலூர் மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாச காந்தி  ஆகியோரை அவர்கள் வகித்த கட்சிப் பொறுப்பிலிருந்தும் நீக்கம் செய்து ஜி.கே. வாசன் அறிவித்தார்.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஞானேசேகரன், தனது ஆதரவாளர்களுடன் இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து,  தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

இதேபோல் திமுக தலைமையுடன் முரண்பட்டிருந்த முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியனும் ஜெயலலிதாவை இன்று சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ