Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஊர் கூடி கல்விச் சீர்வரிசை… கலக்கும் அரசுப்பள்ளி!


காஞ்சிபுரம் அருகே உள்ள முசரவாக்கம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் வருடந்தோறும் கிராம மக்கள் ஒன்றிணைந்து கல்விச் சீர்வரிசை கொடுக்கிறார்கள். இது அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலைய முதல்வர் சிவக்குமாரிடம் பேசினோம். “மாணவர்கள்,  சமுதாயத்திற்கு பயன்படக்கூடிய முறையில் உருவாக வேண்டுமெனில், பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ள உறவு வலிமை உள்ளதாக இருக்க வேண்டும். சாப்பிடும்போது தண்ணீர் எடுத்து வைப்பது, தாத்தா, பாட்டிக்கு மருந்து மாத்திரை கொடுப்பது என சிறுசிறு வேலைகள் மூலமாக குடும்ப உறுப்பினர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்று முதலில் கற்றுக் கொடுப்போம். இதனால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உள்ள உறவை வலிமைமிக்கதாக மாற்றுவோம். அப்போதுதான் குழந்தைகள் மீது பெற்றோர்களும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். நல்ல கதைகள், சமுதாய சிந்தனையுள்ள பாடல்கள் என மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும்படி ஆசிரியர்களுக்கு ஊக்கமளிப்போம்.

அரசுப்பள்ளிகளை பொருத்தவரை, பெரும்பாலான மாணவர்கள் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே கொடுக்கக் கூடிய வசதிபடைத்தவர்களாக இருப்பார்கள். ஊரில் பள்ளிகளுக்கு உதவக் கூடிய வகையில் உள்ளவர்களிடம் தலைமை ஆசிரியர், பள்ளிக்கு உதவி செய்ய சொல்லி கேட்பார். உதவி செய்பவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்ய மாட்டோம். பொருளாக கொடுப்பார்கள். பள்ளிக்கு இவ்வளவு கொடுங்கள் என்று யாரையும் கட்டாயப்படுத்துவது கிடையாது. மாணவர்களின் தரத்தையும், ஆசிரியர்களின் ஆர்வத்தையும் பார்த்து கிராம மக்களே விருப்பப்பட்டு பொருளுதவி செய்வார்கள். வருடந்தோறும் இதை ஒரு திருவிழா போல கொண்டாட ஆரம்பித்திருக்கிறோம்.

நோட்டு, பேனா, பென்சில், குடிநீர் ட்ரம், டாய்லெட்டிற்கு தேவையான மக், வாளி போன்றவற்றை வாங்கி வருவார்கள். திருமண வீட்டில் மணமகள் வீட்டிலிருந்து மணமகன் வீட்டிற்கு எப்படி சீர்வரிசை கொண்டு செல்வார்களோ, அதுபோல இவற்றைக் கொண்டுவருவோம். கோவிலில் வைத்து அங்கிருந்து மேளங்கள் முழங்க, ஒவ்வொரு வீதியின் வழியாகவும் பள்ளிக்கு கொண்டு வருவோம்.  சீர்வரிசையோடு வரும் ஊர் மக்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் அந்த சீர்வரிசையை ஒப்படைப்பார்கள்.” என்கிறார்.

அடுத்துப் பேசிய தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன். “கடந்த வருடம் சீர்வரிசையாக சார்ட், வரைபடத்தாள், படங்கள், விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை கொடுத்தார்கள். இந்த வருடம் தொடுதிரை கணிணி, 24 மணிநேரம் வைஃபை என இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்களை கொடுத்திருக்கிறார்கள். இந்த தொடுதிரையை இன்டர்நெட்டில் இணைத்து விடுவோம். வகுப்பறையில் தொடுதிரை மூலமாக பயன்படுத்தி பாடங்களை சொல்லிக் கொடுப்பார்கள். கரும்பலகையில் எழுதும் போது, எழுதியதை அழித்துவிடுவார்கள். ஆனால் இதில் எழுதியதை அப்படியே சேவ் செய்துவிடமுடியும். இதனால் மீண்டும் எழுதி நடத்த வேண்டிய அவசியம் இருக்காது. மாணவர்களும் தேவைப்படும் போது குறிப்பெடுத்துக் கொள்ள முடியும். ஸ்கைப் மூலமாக பிற மாவட்டங்களில் தொடுதிரை கணினி வசதி உள்ள மாணவர்களோடு தொடர்பு கொள்ள முடியும். வெளிமாவட்டத்தில் நடத்தும் பாடத்தை இங்கிருந்தே கவனிக்க முடியும். இங்கு நடத்தும் பாடங்களை மற்ற இடங்களில் உள்ளவர்கள் கவனிக்க முடியும். வெளி மாநிலம், வெளிநாடு என படிப்படியாக மாணவர்களின் தொடர்பை விரிவாக்குவோம். இங்கே செய்திதாள் படிக்கும் பழக்கத்தை உருவாக்கி இருக்கிறோம். பள்ளியில் குடிநீர் தொட்டி, கழிவறை போன்றவற்றை தூய்மையாக பராமரிப்போம். மாதம் ஒருமுறை பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெறும். இதனால் இப்பகுதி மக்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.” என்கிறார்.

வைஃபை வசதியை ஏற்படுத்திக் கொடுத்த ரமேஷ் என்பவரிடம் பேசினோம்.

“இந்த அரசுப்பள்ளியில்தான் நான் படித்தேன். சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பிராட்பேண்ட் இன்ஸ்டாலேஷன் டீமில் இன்ஜினியராக இருக்கிறேன். பெரிய பெரிய இன்டர்நேஷனல் பள்ளிகளில் இன்ஸ்டாலேஷன் செய்யும் போதெல்லாம், நான் படித்த பள்ளியில் இதுபோல வசதி இல்லையே என நினைப்பேன். இதனால் எங்க பள்ளி தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து பேசினேன். அவர் பள்ளி கமிட்டியில் பேசினார். ஊர்மக்களின் சேர்ந்து தொடுதிரையை வாங்கி கொடுத்தார்கள். 24 மணி நேர இலவச வைஃபை சேவை செலவை நான் கொடுக்கிறேன். அரசுப்பள்ளியில் படித்து பெரிய பதவியில் இருக்கும் சிலர், அவர்கள் படித்த பள்ளிக்கு சிறுதொகையை கொடுத்தாலே அரசுப் பள்ளிகளை மூடும் நிலை ஏற்படாது.” என்கிறார்.

“இந்தக் கல்வி முறை ரொம்ப நன்றாக இருக்கிறது. பாடங்கள் எளிமையாக புரிகிறது. ஈசியா மெமரி ஆகுது. சுட்டி விகடனை ஆன்லைனிலேயே பார்க்க ஆரம்பித்துவிட்டோம் தெரியுமா?” என குஷியாக சொல்கிறார்கள் அரசுப்பள்ளி மாணவர்கள்.  

- பா.ஜெயவேல்

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ