Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துகிறார் ஜி.கே.வாசன்!' -'அ.தி.மு.க ஞானசேகரன்' அதிரடி

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன். " இனியும் த.மா.காவில் எங்களால் நீடிக்க முடியாது. அவர் என்ன எங்களை நீக்குவது? அ.தி.மு.கவில் எங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்" என்கிறார் ஞானசேகரன்.
 
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து தேர்தலை சந்தித்தது த.மா.கா.

ஜி.கே.வாசனின் இந்த முடிவை எதிர்த்துக் கட்சியில் இருந்து விலகினார் பீட்டர் அல்போன்ஸ். அவரையடுத்து, அ.தி.மு.கவில் ஐக்கியமானார் த.மா.காவின் மூத்த துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். அ.தி.மு.கவில் சேர்ந்த சில நாட்களிலேயே, எஸ்.ஆர்.பிக்கு ராஜ்யசபா எம்.பி சீட்டை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா. இதை த.மா.காவினர் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில், த.மா.காவின் மகளிரணித் தலைவி மகேஸ்வரி, வேலூர் ஞானசேகரன் உள்ளிட்டோர் முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். இன்று காலையில் த.மா.காவைச் சேர்ந்த 70 பேர், ஞானசேகரன் தலைமையில் அ.தி.மு.கவில் இணைந்தனர். இதை அறிந்த ஜி.கே.வாசன், " பதவிக்காக போகிறவர்கள் போகட்டும். அதைப் பற்றி எங்களுக்குத் துளியும் கவலையில்லை. உண்மையான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள்"  எனப் பேசியிருக்கிறார்.

' தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து அ.தி.மு.கவில் ஐக்கியமாக என்ன காரணம்?' என்றோம் ஞானசேகரிடம்.

" இந்த முடிவை முன்பே எடுத்துவிட்டோம். சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணியை உருவாக்காமல், வெற்றுக் கூட்டணியை உருவாக்கினார் ஜி.கே.வாசன். கட்சியில் உள்ள அனைவரிடமும், ' அ.தி.மு.கவோடு கூட்டணி வைக்க இருக்கிறோம். இந்தத் தேர்தலில் நாம் வெற்றிக் கூட்டணியில் இருப்போம்' என்றார். அதை நம்பித்தான் தீவிரமாக வேலை பார்த்தோம். அ.தி.மு.கவில் 15 சீட்டுகள் வரையில் பேச்சுவார்த்தை நடந்தது. முடிவில், ' அ.தி.மு.கவில் நம்மை அடமானம் வைக்க முடியாது' என மக்கள் நலக் கூட்டணியின் பக்கம் போனார். ஒன்பது மாத காலமாக, ' அ.தி.மு.க அணி' என்று சொல்லிக் கொண்டே, தொண்டர்களின் மனதில் ஆசை வளர்த்து ஏமாற்றிவிட்டார். தேர்தல் தோல்விக்குப் பிறகு, மக்கள் நலக் கூட்டணிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார். இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்போதும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியில் வந்துவிட்டதாக உறுதியாக அறிவிக்கவில்லை. தொண்டர்களின் மனநிலைக்கு ஏற்ப, கட்சியை வளர்க்கும் நிலையில் அவர் இல்லை. கூட்டு முயற்சியாக யாரிடமும் கலந்து பேசவும் அவர் விரும்பவில்லை".

மக்கள் நலக் கூட்டணி வேண்டாம் என்றால், சட்டப் பேரவைத் தேர்தலில் நீங்கள் போட்டியிட்டது ஏன்?

" தலைமை சொன்னதால்தான் போட்டியிட்டேன். த.மா.கா போட்டியிட்ட தொகுதிகளிலேயே நான்தான் அதிக ஓட்டு வாங்கினேன். அதிக செலவும் செய்தேன். பதவி இருந்தால்தான் சிறப்பாகச் செயல்பட முடியும். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகாவது, ' கூட்டணியை மறுபரிசீலனை செய்வார்' என நம்பினோம். ஜி.கே.வாசன் நடத்திய ஆறு கூட்டங்களிலும், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறும் அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. ' தேர்தல் நேரத்தில் செய்யப்பட்ட தொகுதிப் பங்கீடு' என்ற வார்த்தையோடு முடித்துக் கொண்டார். தலைவர் மூப்பனாரைப் போல கட்சியை நடத்தாமல், பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றிவிட்டார் ஜி.கே.வாசன். நாங்கள் என்ன சாமியார் மடத்திலா இருக்கிறோம்? எல்லாற்றையும் இழந்து துறவறம் போவதற்கு".

பீட்டர் அல்போன்ஸைப் போல, காங்கிரஸ் கட்சியை ஏன் தேர்வு செய்யவில்லை?

" காங்கிரஸின் நிலைமை மிகுந்த பரிதாப நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. அங்கு செல்வது அர்த்தமற்றது. மக்கள் பணிக்கான திட்டங்களை முன்னெடுப்பதில் அ.தி.மு.கவுக்கு நிகராக வேறு எந்தக் கட்சியும் கிடையாது. எனவேதான், முழு மனதோடு அ.தி.மு.கவில் ஐக்கியமானேன்".

முதல்வர் என்ன சொன்னார்?

" அவர் எங்களிடம், 'மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்' என்றார். முதல்வர் கொடுத்த உறுதியால் எங்களோடு வந்தவர்கள் மகிழ்ச்சிடைந்தார்கள். த.மா.காவில் மிச்ச மீதியிருக்கின்ற நிர்வாகிகளும் விரைவில் எங்களுடன் வருவார்கள். என்னுடைய ஒரே கேள்வியெல்லாம், ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆத்திக் கொண்டிருக்கிறார் ஜி.கே.வாசன்?"

-ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ