Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தென்னந்தோப்பு, ஊரணி, குஸ்தி பயிற்சி... மதுரையில் ஓர் இயற்கை ஜிம்!


ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வரவேற்பறையில இருப்பதைப்போன்ற நீர் திவலைகளாலான பெரிய ஊரணி. அதனை ஒட்டினார் போலவே அமைந்திருக்கும் பசுமையான தென்னந்தோப்பின் நிழலில் இருக்கிறது நம்ம இயற்கை ஜிம். மதுரையின் பிஸியான பகுதியில் ஒன்றான பழங்காநத்தம் அருகே அமைந்திருக்கும் அந்த ஜிம்முக்குள்ள நுழைந்த உடனேயே, " அத அப்படி பண்ணுடா, இத இப்படி பண்ணுடா..!" னு சொல்ற மெல்லிய குரல் ஒண்ணு கேட்டுச்சு. ஆனா அவர் நீங்க நினைக்கிறமாதிரி கோயில் படத்தில வர்ற வடிவேலு மாஸ்டர் இல்ல, உண்மையான ஜிம் மாஸ்டர் பழனி. 92வயதிலும் சளைக்காமல் உடற்பயிற்சி செய்கிறவர்.

அவரிடம் பேசினோம்.

''நாங்க இந்த தேகப் பயிற்சி சாலையை ஆரம்பிச்சு 72 வருசம் ஆச்சு. நாங்க இதை ஆரம்பிச்சப்ப 5 பேர் தான் இருந்தோம். அதுல நானும் ஒருத்தன். இப்ப அதுல நான் மட்டும்தான் இருக்கேன். அப்போ இந்த இடத்தை  சுற்றிலும் விவசாயம் நடக்கும். வரப்பு வழியாதான் நாங்க இந்த இடத்துக்கு வருவோம்.  இப்பலாம் சுற்றிலும் வீடுக வந்திருச்சு. இந்த 'புதுயுக வாலிப தேகப் பயிற்சி சாலை' யில், பலரோட உழைப்பு அடங்கியிருக்கு. பல ஆயிரம் பேர இந்த பயிற்சி சாலை பாத்திருக்கு. பல போலீஸ்காரர்ளையும், ராணுவ வீரர்களையும் கொடுத்துருக்கு. கட்டுமஸ்தான உடல் அழகைப் பெறவும், உடல் ஆரோக்கியத்திற்கும், பொழுதுப் போக்கு இடமாகவும் பலருக்கும் பல கண்ணோட்டத்தில் பயன்பெற்றிருக்கிறது, இந்த தேகப் பயிற்சி சாலை. ஆரம்ப காலகட்டத்தில எந்த ஒரு உபகரணமும் இருக்காது. நாங்களாதான் உடலை வளைத்து புல் அப்ஸ், தண்டால் னு எடுப்போம். சில ஆண்டுகளிலேயே கோதா அமைச்சு, அதுல மல்யுத்தம் நடத்தினோம். இப்ப எனக்கு அதிக வயசாயிருச்சு. அதனால இங்க  சின்னச் சின்ன உடற்பயிற்சி செஞ்சுக்கிட்டு ,இளைஞர்களுக்கும் சொல்லிக்கொடுக்கிறேன்'' என்றார் பழனி.

மேலும் ஆர்வமா உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த பொய்யா மொழியிடம் பேசியபோது, "நான் இந்த ஜிம்முக்கு 20 வருடமா வந்து உடற் பயிற்சி செய்றேன். நான் ஒரு இன்ஜினியர். போலீஸ், மிலிட்ரினு போக ஆசை. இல்லாட்டியும் இங்க வந்து ஒர்க் அவுட் பண்றத என் ஹாபியாதான் வைத்திருக்கேன்.  என் ஆபீஸ், வீட்டுக்கு அடுத்தபடியா  நான் நேரத்த அதிகமா செலவு பண்றது, இந்த ஜிம்லதான். இங்க வர்றவங்க எல்லாரும் இதை கலையாகத்தான் நினைப்பாங்க. அப்படி நினைக்காதவங்க சில நாட்களுக்கு அப்புறம் தொடர்ந்து வரமாட்டாங்க.

இந்த ஜிம்ல சேரணும்னா முக்கியமான கண்டிஷன் மது அருந்துபவர்களாகவோ, புகைப்பிடிப்பவர் களாகவோ இருக்கக்கூடாது. அதுபோன்ற விஷயங்கள் தெரிய வந்தால் உடனடியாக ஜிம்மில் இருந்து நீக்கப்படுவார்கள். ஒரு வேலை யாருக்கும் தெரியாமல் அப்படி செய்பவர்கள் அவர்களே, அவர்களைத் திருத்திக்கொள்வார்கள். தற்போது ஜிம்மிற்கு சேருவதற்கு மாத சந்தா 50  ரூபாய். ஆண்டு முழுவதும் ஜிம் இயங்கும். தீபாவளி, பொங்கலுக்கு கூட நம்ம ஜிம்ல ஒர்க் அவுட் நடக்கும்.

ஜிம் இயற்கையான சூழலில்  அமைந்துள்ளது, எங்களுக்கு முக்கியமான பிளஸ்.

ஜிம்மில் நடக்கும் பயிற்சிகள்:

வண்டல் மணல், கரம்பை மணல், வேப்பங்கொட்டை, நல்லெண்ணை, வேப்பமரத்தூள் எல்லாத்தையும் நல்லா சேர்த்து, நல்ல இலகுவாக்கி மாவு மாதிரி நைசா ஆக்கிருவோம். அந்த மணல ஒரு பெரிய வயல் பாத்தி மாதிரி வெட்டி, அதுல போட்ருவோம். அந்த மணல்லதான் பயிற்சி எடுப்போம். மண்வெட்டிய வைத்து வெட்டி, வெட்டி, மீண்டும் மணல சரிப்படுத்துவோம். அதனால உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையும் ரத்த ஓட்டம் இருக்கும்.  நரம்புகளுக்கு அதிக வேலை இருக்கும். பார்க்கும் போது விளையாட்டுத்தனமா இருக்கும். ஆனால் செய்யும்போதுதான் அதன் முழு பலன் தெரியும். நாம தினமும் வேகமா வாக்கிங் போன அனுபவம் அதில ரட்டிப்பாக கிடைக்கும். மேலும் அந்த கோதா மணல்லதான் குஸ்தி பயிற்சி எடுப்போம். பிறகு விரல்களுக்கு வலு கிடைக்க அதில் விரல் பயிற்சி எடுப்போம். எல்லா பயிற்சியும் முடிந்தவுடன் மறுபடியும் கோதா மணல்ல வந்து படுத்திருவோம். தலை மட்டும் தெரியும் அளவிற்கு மூழ்கிடுவோம். அதனால உடலுக்கு மிகுந்த ஓய்வு மற்றும் குளிர்ச்சியும் கிடைக்கும்.

எட்டுவடிவ வாக்கிங் பயிற்சி

ஜிம்ல எட்டுவடிவ பாதை பயிற்சி இருக்கு. சுற்றியும் புல் இருக்கும். அதற்குள்ள நடக்கும் பாதை இருக்கும். எட்டு போட்டு அதன் மேல் கால்களை எட்டி வைத்து நடக்கவேண்டும். பார்க்க சிரிப்பாத்தான் தெரியும். ஆனால் சித்தர் காலத்து பயிற்சி முறையில இதுவும் ஒண்ணு. இது மறைமுக மூச்சுப் பயிற்சியாகும். கிழக்கு மேற்காகதான் இந்த நடைபாதை அமைந்திருக்கும். இந்த பயிற்சியால மூட்டுவலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்த நோய் போன்ற பல வியாதிகளை கட்டுப்படுத்துகிறது.

மேலும் ஜிம்மில் தென்னை மரம் ஏறுதல், தேங்காய் உரித்தல், அதிக எடை கொண்ட கல் தூக்குதல், கயிறு ஏறுதல், சங்கிலியால் சுழலுவது போன்றவற்றிற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இரும்பு உபகரணம் கொண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு குஸ்தியும், குட்டி கர்ணம் அடித்தல் போன்று அவர்களின் வயதிற்கு ஏற்றால் போல் கற்றுத்தரப்படுகிறது. வாரம் ஒரு முறை மலை ஏறும் பயிற்சிக்காக,  பக்கத்துல இருக்குற கபாலீஸ்வரர் மலையில் உள்ள 540 படிகளை ஏறி இறங்குவோம்.

காலையில் வேப்பங்குச்சியால் பல் துலக்குவது முதல் கரம்பைக் குளியல் செய்வது வரை வசதி, எங்க ஜிம்ல கிடைக்குது. எங்களுக்கு எலக்ட்ரானிக் பொருள் தேவையில்ல இந்த சுத்தமான சொகுசு போதும்ங்க…" என்றார்.

- சே.சின்னதுரை

படங்கள்: நா.ராஜமுருகன்  

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close