Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முடிவுக்கு வந்த 'முச்சந்தி ஆப்ரேஷன்'! -மலைக்க வைத்த மாவோயிஸ்ட்டுகள்

மிழகத்தில் அடுத்தடுத்து பிடிபடும் மாவோயிஸ்ட்டுகளால் அதிர்ந்து போயிருக்கிறது மத்திய உள்துறை.  'கடந்த சில நாட்களில் மட்டும் மாவோயிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். எல்லையோர மாநிலங்களில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம்' என்கின்றனர் போலீஸார்.

வருஷநாட்டு மலைப் பகுதியில் தங்கியிருந்து, மாவோயிஸ்ட் இயக்கத்தை வலுப்படுத்தும் வேலையில் இறங்கியதாக, 2007-ம் ஆண்டு மகாலிங்கம் என்பவரைக் கைது செய்தது தேனி மாவட்ட க்யூ பிரிவு போலீஸ். சிறையில் அடைபட்டிருந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்பு ஜாமீனில் வெளியில் வந்தார். அதன்பிறகு எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. க்யூ பிரிவு போலீஸாரும் தேடுதல் வேட்டையை நிறுத்தவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சூரில் வைத்துக் கைது செய்யப்பட்டார் மகாலிங்கம். இதேபோல், காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ரீனாவையும், கரூரில் தங்கியிருந்து தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த சந்திரா, கலா ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நடந்தேறிய அடுத்தடுத்த கைதுகளைப் பற்றிப் பேசும் க்யூ பிரிவு போலீஸார்,

" தருமபுரி ஊத்தங்கரையில் 2002-ம் ஆண்டு நடந்த போலீஸ்-நக்சலைட்டுகள் சண்டையில் 29 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவான சந்திராவும் கலாவும் தற்போதுதான் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது புழல் சிறையில் உள்ள சுந்தரமூர்த்தியின் மனைவிதான் சந்திரா. இதன்பிறகு தொடர்ச்சியான கைதுகள் மூலம், அவர்களது நடவடிக்கைகளை ஒடுக்கினோம். எல்லையோரக் கிராமங்களில் கண்காணிப்பை பலப்படுத்தினோம். நீண்டகாலம் தலைமறைவாக இருந்த மகாலிங்கத்தை பத்து ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தோம். பிரசாரப் பாடல்கள் மூலம் உழைக்கும் மக்களை அணி திரட்டுவதில் அவர் வல்லவர். ஜாமீனில் வெளிவந்தவர் அப்படியே தலைமறைவாகிவிட்டார். இவர்களின் பிரதான நோக்கமே, மாநிலங்களின் எல்லையோரக் கிராமங்களில் ஆயுதப் போராட்டத்தை தூண்டிவிடுவதும் அதன்மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதும்தான்.

சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளக் கிராமங்களில், ஆட்சிக்கு எதிராக சில வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் எழுதப்பட்டிருந்தன. புதிய புதிய ஆட்களின் வருகையைப் பற்றியும் விரிவாக விசாரித்தோம். ஏற்கெனவே, தமிழ்நாட்டில் மாவோயிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாக இருந்த சிலரது செயல்பாடுகளைக் கண்காணித்தோம். அதனால்தான், ஓரிரு நாட்களில் நான்கு பேரை கைது செய்ய முடிந்தது. கடந்த ஆண்டு கோவை கருமத்தம்பட்டியில் வைத்து, ரூபேஷ்குமார் என்பவரோடு சேர்த்து, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் தளம் அமைக்க தீவிர முயற்சி செய்த சுந்தரமூர்த்தியும் விவேக்கும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுவிட்டனர்" என்கின்றனர்.

தமிழ்நாட்டில் மாவோயிஸ்ட்டுகள் தளம் அமைக்கும் முயற்சி பற்றி நம்மிடம் பேசிய, காவல்துறை அதிகாரி ஒருவர், " ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் செயல்படும் மாவோயிஸ்ட் அமைப்புகள், இந்தியாவில் மூன்று மாநிலங்கள் சந்திக்கும் எல்லையோரப் பகுதிகளில் 'முச்சந்தி' என்று பெயரிட்டு குழுக்களை உருவாக்குவார்கள். இவர்களுக்குப் பொருளாதார ரீதியாக எந்த உதவியும் கிடைக்காது. எங்கு தங்கியிருக்கிறார்களோ, அங்கிருக்கும் மக்களிடம் உதவிகளைப் பெற்று இயக்கத்தை வளர்த்து வருவார்கள். தமிழ்நாட்டில் மாவோயிஸ்ட்டுகளின் செயல்பாட்டுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதால், ஆயுதப் புரட்சி என்று கிளம்பியவர்கள் எல்லாம் அமைதியாகிவிட்டார்கள்.

தற்போது பிடிபட்டுள்ளவர்கள் காலம்காலமாக செயல்பட்டு வருபவர்கள். எல்லையோரப் பகுதிகளில், மக்களின் கோபத்திற்கு ஏற்ற வகையில் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பார்கள். போராட்டத்தின் வடிவம் தீவிரமானால் மட்டுமே, ஆயுதப் போராட்டத்தில் இறங்குவது அவர்களின் வழக்கம். மேற்குத் தொடர்ச்சி மலைகளை குறிவைத்து இந்தக் குழு இயங்கி வருகிறது. மக்களோடு மக்களாக இயல்பாக கலந்து, உழைக்கும் பணிகளில் ஈடுபடுவதால் இவர்கள் மீது யாருக்கும் எந்தவித சந்தேகமும் வருவதில்லை. அப்படித்தான் மகாலிங்கம் உள்பட பலர் இயங்கி வந்தார்கள். இன்னும் சிலர் பிடிபட்டுவிட்டால், மாவோயிஸ்ட் இயக்கத்தினர் என்று சொல்லிக் கொள்ள ஒருவரும்  இருக்கப் போவதில்லை" என்றார் விரிவாக.

மகாலிங்கம், கலா, சந்திரா உள்ளிட்டோர் பிடிபட்டதை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பவர்கள். ' பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்களைப் பார்த்தோம். கைதுக்குப் பிறகுதான் எங்கே இருந்தார்கள் என்பதே தெரிகிறது. நாங்கள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி வெகுநாட்களாகிறது" என்கின்றனர்.

-ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close