Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கார்கில் நினைவு தினம்...நேற்று அரசு மரியாதை, இன்று அவமரியாதை!

கார்கில் நினைவு தினத்தை நாடே கொண்டாடிக்கொண்டிருக்கிறது இன்று. ஆனால்  திருச்சியில் அந்த நினைவு தினத்தை ஆட்சியாளர்கள் மறந்துபோனதான் வேதனை.

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது.  அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் அவர்களை அடித்து விரட்டி மீண்டும் கார்கிலைக் கைப்பற்றி வெற்றிக் கொடி நாட்டிய தினம் இன்று.  கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றாலும் விலைமதிக்க முடியாத  பல ராணுவ சகோதரர்களின் உயிரை இழந்தது தேசம். நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜூலை 26ம் தேதி, கார்கில் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.  

இந்த கார்கில் போரில்  போரிட்டு வீரமரணம் அடைந்தவர்களில் திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன் ஒருவர்.  கார்கில் போர் உக்கிரத்தில் இருந்த, 1999  மே 29ந்தேதி பீகாரின் முதல் படைப்பிரிவில் பணிபுரிந்த மேஜர் சரவணனுக்கு கார்கில் அருகே உள்ள பதாலிக் பகுதியில் தாக்குதல் நடத்த உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். தனது குழுவினருடன் அன்று அதிகாலை 4.00 மணியளவில் ஜுபர் மலைப்பகுதியில் உள்ள எதிரிகளின் மறைவிடமான பங்கரை நோக்கி ராக்கெட் லாஞ்சரை சரவணன் ஏவ, அந்த தாக்குதலில் எதிரிகள் இருவர் இறந்தார்கள். தொடர்ச்சியாக எதிரிகள் அதிகம் பேர் இருந்தாலும் வீரத்துடன் அவர்களின் மறைவிடங்களை நோக்கி ஆவேச தாக்குதல் நடத்தியவாறு முன்னேறிக்கொண்டிருந்தார் சரவணன்.  இதை பார்த்த எதிரிகள் கோபமடைந்ததுடன் தங்கள் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தினர். 

பதிலுக்கு அவர்களின் தாக்குதலை முறியடித்தபடி முன்னேறிக்கொண்டிருந்தார் சரவணன். அப்போது திடீரென சரவணனின் அருகில் வெடிகுண்டு வெடித்ததில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், மேலும் அவரது அடிவயிற்றையும் துப்பாக்கி குண்டு பதம் பார்த்தது என சொல்லப்படுகிறது. அப்போதும் கூட ராக்கெட் லாஞ்சர் கொண்டு தொடர்ந்து எதிரிகளை மறைவிடங்களை தாக்கினார்.  அந்த நிலையிலும் பாகிஸ்தானின் வலிமையான பிடிமானம் கொண்ட பகுதிக்குள் நுழைந்தார்.

அப்போது எதிரிகளின் தீவிரமான தாக்குதலில் சரவணன் தீடீரென மடிந்து வீழ, எதிரிகள் எல்லாம் முடிந்தது என்று கருதி சரவணனுக்கு அருகில் வந்தனர். அவர் இறந்திருப்பார் என்று நினைத்து எதிரிகள் இருவர் அவர் அருகே வந்தபோது, வாழ்வின் இறுதி கட்டத்தில் இருந்த நிலையிலும் கூட அவர்கள் இருவரையும் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.

இந்த போரில் மேஜர் சரவணன் உள்பட பலர் இறந்தனர்.  வீரமரணமடைந்த மேஜர் சரவணன் நினைவாக திருச்சி வெஸ்ட்ரி பள்ளி எதிரே உள்ள ரவுண்டானாவில் மேஜர் சரவணன் படத்துடன் நினைவு ஸ்தூபி எழுப்பப்பட்டது. ஆண்டு தோறும் அவர் வீரமரணமடைந்த தினமான மே 29ம் தேதி அரசு மரியாதையுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இவையெல்லாம் கடந்த வருடம்வரை நடந்தவை. இன்று நாடுமுழுக்க கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் திருச்சியில் அப்படி ஒரு நிகழ்வுகள் அரசாங்கத்தால் நடத்தப்படவில்லை என்பதுதான் வேதனை.

இன்று திருச்சியின் பல்வேறு அமைப்புகளும், மேஜர் சரவணன் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினர்.  மரியாதை செலுத்தவந்த பள்ளி மாணவர்களுக்கு, கார்கில் போரைப் பற்றியும் மேஜர் சரவணன் பற்றியும் விவரித்துக்கொண்டிருந்த பால் குணாவிடம் பேசினோம்.

" 1999ம் ஆண்டு நடந்த போரில் இளம்வதில் களமாடிய சரவணன் திருச்சிக்கு பெருமை சேர்த்தார். அவருக்கு   இந்திய அரசு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவப்படுத்தியது. அவரது அம்மா அமிர்தவள்ளிக்கு  மதர் ஆப் த நேசன் விருது வழங்கினார்கள்,  ஆனால் இங்கு வந்த மாணவர்கள் பலருக்கு கார்கில் போர் பற்றியே தெரியவில்லை. இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. கார்கில் போரின் நினைவு குறித்து ஒரு விளம்பரத்தட்டிகூட இந்த நினைவிடத்தில் வைக்கவில்லை.  இந்த போரில் 523பேர் பலியானதாக அரசு அறிவித்துள்ளது. இவ்வளவு பேர் தன்னுயிர் தந்து பெற்ற கார்கில் வெற்றி இது.  கார்கில் போரின் 17-வது நினைவு தினத்தையொட்டி போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கர் மற்றும் ராணுவத் தளபதிகள் அஞ்சலி செலுத்தினர்.

ஆனால் நம் ஊரில் இப்படி தேசத்துக்கு உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், திருச்சியில் உள்ள 17 பிரதேச ராணுவ படை அதிகாரிகள் யாரும் நடத்தவில்லை. திருச்சியில் கார்கில் போர் நினைவுச்சின்னம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த சரவணன் நினைவிடத்திலாவது மலர் வளையம் வைத்திருக்கலாம். அப்படி செய்வதனால் அடுத்த தலைமுறைக்காவது கார்கில் போர் பற்றியும் இந்த நாட்டை காப்பாற்ற இப்போதும் ரத்தம் சிந்தும் வீரர்களின் நாட்டுப்பற்றையும் புரிந்து தேசத்தின் மீதான நேசத்தை வளர்த்துக்கொள்வார்கள். ஆனால் அரசு அதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டது ” என்றார் வருத்தத்துடன்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “ கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் சரவணனுக்கு எப்போதும் அரசு மரியாதை என்ற அளவில் எந்த சம்பிரதாயங்களும் இங்கு நடத்தப்படவில்லை. அவர்களது குடும்பத்தார்தான் இதுநாள்வரை அதை செய்துவந்தனர். பள்ளிக் குழந்தைகள், மற்ற அமைப்புகளை அவர்கள் அழைத்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியை நடத்துவர்.  மரியாதை நிமித்தமான அழைப்பின்பேரில் மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள். இந்த முறை அவர்களும் அனுசரிக்கவில்லை. அதனால் எங்களுக்கும் அழைப்பு இல்லை. இதுதான் காரணம்” என்றார் அந்த அதிகாரி.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்:
என்.ஜி.மணிகண்டன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ