Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வியாசர்பாடி டூ டெல்லி...! -மெலடி டார்கஸின் 'மெர்சல்' பாய்ச்சல்

டெல்லி தேசிய நாடகக் கல்லூரியில் படிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் வியாசர்பாடியைச் சேர்ந்த மெலடி டார்கஸ். 'அடிப்படையில் பாக்ஸராக இருந்தாலும், சிறந்த நாடக ஆளுமையாக வர வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்' என்கிறார் அவர்.

திரைத்துறையில் சிறந்த ஆளுமைகளை உருவாக்குவதில் மிகவும் புகழ்பெற்றது தேசிய நாடகக் கல்லூரி. மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கும் இந்தக் கல்லூரியில், நாடகக் கலை தொடர்பான படிப்பில் சேருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்திய நாடக உலகின் புகழ்பெற்ற ஆளுமைகளே மாணவர்களைத் தேர்வு செய்கிறார்கள். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து தேர்வான ஒரே ஒரு மாணவி மெலடி டார்கஸ். இறுதிச் சுற்று படத்தில் துணை நடிகையாக நடித்தவர்.

அவரிடம் பேசினோம்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

" நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் வியாசர்பாடி பகுதிதான். அம்மா கிறிஸ்தவ மத ஊழியராக வேலை பார்க்கிறார். வருமானம் என்று சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை. அப்பா இல்லாததால், மிகவும் சிரமப்பட்டுத்தான் அம்மா என்னை வளர்த்து வருகிறார். ' எதிர்காலத்தில் சிறந்த பாடகியாக வர வேண்டும்' என்பதற்காக மெலடி எனப் பெயர் வைத்தார்கள். அரசுப் பள்ளியில் படித்தபோது, மாநகராட்சி சார்பில் மே மாதம் விளையாட்டுப் பயிற்சிகளைக் கொடுப்பார்கள். அப்படித்தான் அறிமுகமானது பாக்ஸிங். ஸ்டேட் சாம்பியன் வரைக்கும் வளர்ந்தேன். அதன்பிறகு, விளையாட்டுப் பிரிவில் எத்திராஜ் கல்லூரியில் சீட் கிடைத்தது. பல்கலைக்கழக அளவில் ஏராளமான போட்டிகளில் பங்கெடுத்தேன். பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்தேன். பிறகு நாடக ஆசிரியர் பிரளயன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலமாக ஏராளமான நாடகங்களில் நடித்து வந்தேன். அப்போதுதான் இறுதிச் சுற்று படத்தின் இயக்குநர் சுதா, நான் பாக்ஸர் என்பதால் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார் . நாடகத்தில் இன்னும் பல உயரங்களுக்குப் போக வேண்டும் என்பதற்காக, பெங்களூரில் நடிப்பு தொடர்பான ஓராண்டு படிப்பையும் முடித்தேன்".

தேசிய நாடகக் கல்லூரிக்கு எப்படித் தேர்வு செய்யப்பட்டீர்கள்?

" தமிழ்நாட்டில் திரையில் ஆளுமைகளாக ஜொலிக்கும் பலர், தேசிய நாடகக் கல்லூரியில் படித்தவர்கள்தான். உலக அளவில் சிறந்த நாடக ஆளுமையாக வர வேண்டும் என்றால், தேசிய நாடகக் கல்லூரிதான் மிகச் சிறந்த தளம். அங்கு படிப்பதற்கு விண்ணப்பித்ததும், பெங்களூரு குருநானக் பவனில் முதல்கட்டத் தேர்வு நடந்தது. தென்னிந்தியாவில் இருந்து 86 பேர் கலந்து கொண்டார்கள். தமிழ்நாட்டில் இருந்து நான்கு பேர் பங்கேற்றோம். 27 நாடக புத்தகங்களைக் கொடுத்து ஆய்வு செய்யச் சொன்னார்கள். இந்தி நாடகம் ஒன்றையும் நடித்துக் காட்ட வேண்டியிருந்தது. எனக்கு இந்தி தெரியாது என்பதால், பயிற்சி எடுத்து நடித்தேன்.

அதன்பிறகு, இரண்டாம்கட்டத் தேர்வை டெல்லியில் நடத்தினார்கள். ஐந்து நாட்கள் நடந்த நேர்காணல் மிகுந்த போராட்டமாக இருந்தன. இந்தியா முழுவதிலும் இருந்து சிறந்த நாடக ஆளுமைகள் வந்திருந்தார்கள். நாடகத்தின் மீதான ஆர்வம், ரிதம் சென்ஸ், நாடக ஆக்கம் என பலகட்டத் தேர்வுகள் நடந்தன. அனைத்தையும் சிறப்பாகவே செய்து முடித்தேன். எனக்கு ஆங்கிலம் நன்றாக வரும். டெல்லியில் இந்தியை சமாளிப்பதே பெரும்பாடாகிவிட்டது. கடந்த 23-ம் தேதி நான் தேர்வு செய்யப்பட்டதாகக் கடிதம் வந்தது. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது".

தமிழ்நாட்டில் நாடகக் கலை என்பதே அரிதாகி வருகிறது. என்ன செய்ய முடியும் என நினைக்கிறீர்கள்?

" நமது பாரம்பர்யப் பெருமையே இயல் இசை நாடகம்தான். கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான நாடகக் குழுக்கள் செயல்படுகின்றன. ஒரு திரைப்படம் வெளியாகிறதோ இல்லையோ, வாரம்தோறும் ஏராளமான நாடகங்களைத் திரையிடுகிறார்கள். உழைக்கும் மக்களுக்கான பொழுதுபோக்காக நாடகக் கலை திகழ்ந்து வந்தது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாடகத்தின் மூலமே, தியாக உணர்வு ஊட்டி வளர்க்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் அதுபோன்ற சூழலை உருவாக்க முடியும்" என்றவர் இறுதியாக, " மிகுந்த வறுமையான சூழலில் வாழ்க்கை நடந்தாலும், நாடகக் கலையின் மீதான காதல் மட்டும் எப்போதும் குறையாது. மத்திய அரசு நடத்தும் மூன்றாண்டு நாடகப் படிப்பு என்பதால் கட்டணம் உள்பட பல சலுகைகளை அளிக்கின்றனர். டெல்லி சென்று வருவதற்கான செலவு, புத்தகம் வாங்கும் செலவு போன்றவற்றை நண்பர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒருநாள் தமிழ்நாட்டின் மிகச் சிறந்த நாடக ஆளுமையாக நான் வருவேன்" என நம்பிக்கையும், மகிழ்ச்சியுமாக சொல்லி முடித்தார் மெலடி டார்கஸ்.

வாழ்த்துக்கள் மெலடி...!

-ஆ.விஜயானந்த்


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close