Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நாலு பரோட்டா ஒரு ஆம்லேட் பார்சல்!' - ஓசி கொடுக்க மறுத்த மாஸ்டரை லாடம் கட்டிய காவலர்

'காவல்துறை உங்கள் நண்பன்' என்று வீதி வீதியாக விளம்பரங்கள் செய்தாலும், கடைசியில் காக்கியை கண்டாலே அதிகாரத்தில் உள்ளவர் முதல் சாமான்யன் வரை பலபேருக்கு பிடிக்காமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. கடமையில் சில அதிகாரிகள் நேர்மை தவறாமல் இருக்கிறார்கள். ஆனால் சில காக்கிகள் கடமையை தவிர மற்ற அனைத்து வேலைகளையும் செய்து கல்லாகட்டி வருகிறார்கள். இவர்களைப்போன்றவர்களால்தான் காவல் துறைக்கு களங்கம் உண்டாகிறது.

அப்படியான ஒரு களங்கம் ஏற்படுத்தும் சம்பவம்தான்  மதுரையில் நடந்திருக்கிறது.
 
மதுரையை சேர்ந்த சோமசுந்தரம், காவல் பணியில் சேர்ந்து பின்னர் அது பிடிக்காமல்,  வேலையில் இருந்து வி.ஆர்.எஸ் வாங்கி விட்டு,  கிங்ஸ் உணவகம் என்கிற பெயரில் ஹோட்டல்  நடத்தி வருகிறார். இவரது கடை மதுரை கூடல்புதூரில் இயங்கி வருகிறது. இவரது மகனான கார்த்திக் என்பவர்தான், கிங்ஸ் ஹோட்டலின் பிரதான தோசை மற்றும் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

கடந்த திங்கள் கிழமை இரவு 11 மணிக்கு மேல், கடையை அடைத்து எல்லா பொருட்களையும் எடுத்து வைக்கும் தருவாயில் கார்த்திக் இருந்தபொழுது, கூடல் புதூர் காவல் நிலைய காவலர் எம்.ஆர்.சாமி என்பவர் இரண்டு சக்கர வாகனத்தில் ரோந்து பணிக்கு அவ்வழியாக வந்துள்ளார். அப்போது அவர் கார்த்திக்கிடம், நாலு பரோட்டோவும் ஒரு ஆம்லேட்டும் பார்சல் கேட்டுள்ளார். பார்சல் கட்டிய கார்த்திக், காசு கேட்டுள்ளார்.

அடுத்து என்ன நடந்தது, என்பதை கார்த்திக்கே சொல்கிறார்.

"நல்லா குடிச்சிட்டு டூட்டிக்கு வந்தவர், கடையை எடுத்து வைக்கும் நேரம் என்பதால்,  சாப்பிட நாலு பரோட்டோவும் ஒரு ஆம்லேட்டும் பார்சல் கேட்டார். நான் பார்சல் கட்டி விட்டு, ஐம்பது ரூபாய் பணம் கேட்டேன். உடனே அவர், "பணமா... யாரிடம் பணம் கேட்கிறாய்? நான் போலீஸ். அதுவும் லோக்கல் போலீஸ். என்னிடமே பணம் கேட்டால் கடையை எப்படி நடத்துகிறாய்.." என்று பார்ப்போம், என்றபடியே தெருவில் நின்று அசிங்கமாக கத்தினார். அதற்கு,''நான் சார் நானும் போலீஸ்காரர் மகன்தான். இந்த கடையும் போலீஸ்காரர் கடைதான்'' என்றேன். ''என்னடா எதிர்த்து பேசுகிறியா...'' என்று கடைக்குள் புகுந்து அடித்து எட்டி உதைத்தார்.

 

பின்னர், 'வாடா உன்ன இங்கு வச்சு அடிச்சா அடிக்க முடியாது.  மாட்டை தொழுவத்தில் கட்டி அடிப்பது போல லாடம் கட்டி அடிக்கணும்..' என்றபடியே என்னை தரதரவென்று இழுத்தார். நான் பக்கத்தில் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டு நகரவே இல்லை. அடுத்து இரண்டு போலீசார்களை போனில் அழைத்து ஹோட்டலுக்கு வரச்சொன்னார். ஐந்தே நிமிடத்தில் அவர்களும் வரவே, என்னை அங்கிருந்து தூக்கிச் சென்றனர். கடையில் சப்ளையர்கள் மட்டும் இருந்தனர். ஓனர் இல்லாததால் யாரும் தடுக்கவில்லை.
நேராக கூடல் புதூர் காவல் நிலையம் கொண்டு சென்றார்கள். அங்கு போனதும் காவலர் சாமி, என்னை அசிங்கமாக திட்டிக்கொண்டே  எட்டி உதைத்தார். நான் கீழே விழுந்து எழும் முன்பே அருகில் இருந்த  லத்தியால் என்னை  தாக்கினார். நான் வலியால் துடித்து கத்தினேன். அருகில் இருந்த ரைட்டர், இன்னொரு போலீஸ்காரர்களிடம், 'நான் தப்பு செய்யவில்லை. என்னை அடிக்க வேண்டாம்' என்று சொல்லுங்கள் எனக்  கெஞ்சினேன். அவர்கள் எதுவுமே நடக்காதது போல அமைதி காத்தனர்.

காவலர் சாமி கோபத்தின் உச்சிக்கே சென்று பூட்ஸ்காலால் என் நெஞ்சில் ஏறி மிதித்தார். என்னால் வலி தாங்கவில்லை. அய்யோவென்று கத்தினேன். அவர்களும் என்னை விடவில்லை. தொடர்ந்து ஒரு மணி நேரமாக கொடூர சித்ரவதை செய்தார் சாமி. பிறகு என் அப்பாவுக்கு நடந்த சம்பவத்தை கடையில் வேலை பார்த்தவர்கள், போனில் சொன்னதும் அவர் பிரச்னையை சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனையடுத்து  எஸ்.ஐ.குணசேகரன் ஸ்டேஷனுக்கு வந்து என்னிடம்,  என்னை யாரும் தாக்கவில்லை என்றும், சந்தேகத்தின் பெயரில்  விசாரணைக்கு அழைத்து வந்ததாகவும் பொய்யாக எழுதி வாங்கிக்கொண்டு வெளியே விட்டார்.

காவலர் சாமி கடையில் வந்து தகராறு செய்த காட்சி சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருக்கிறது. என்னை அடிக்கும் காட்சிகள், வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் காட்சிகள் என்று அனைத்தும் அதில் பதிவாகி உள்ளன. அடித்த அடியில் உடம்பெல்லாம் காயம். வரிக்குதிரையின் உடலைப்போல லத்தியின் தழும்பு இருக்கிறது என்று உடம்பை காட்டியவர், தொடர்ந்து, " நெஞ்சு வலி தாங்க முடியல,நெஞ்சில் பூட்ஸ்காலால் எட்டி மிதித்த இடம் வலியால் எலும்பு வரை பாதித்து இருக்கிறது. ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும். ஹாஸ்பிட்டலில் எம்.எல்.சி போட்ட பிறகும், இதுவரை சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் கொடுத்து புகார் அப்படியே கிடப்பில் கிடக்கிறது." என்றார் வேதனையுடன்.

இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் ரெஜினாவிடம் கேட்டோம். "அவர்கள் திரித்து சொல்லுகிறார்கள். விசாரணை நடந்து வருகிறது" என்று முடித்துக் கொண்டார்.

இது குறித்து பேசிய மதுரை ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர்,"தினசரி இதே வேலைதான் போலீசார்களுக்கு. வருவார்கள், சாப்பிடுவார்கள். பார்சல் வாங்கிக்கொண்டு பணம் கேட்டால், சண்டை போடுவார்கள். பிசினஸ் நேரத்தில் சண்டை போட்டால் கஸ்டமர்ஸ் சாப்பிட வரமாட்டார்கள். அதனால் பொறுமையாக மதுரை போலீசார் செய்யும் இது போன்ற செயல்களுக்கு பல்லை கடித்துக்கொண்டு பொறுமையாக இருந்தோம். எப்பொழுது உணவை சாப்பிட்டு விட்டு அடித்தார்களோ, இனி பொறுமையாக இருக்க முடியாது. நீதிமன்றம் சென்று முறையிடுவோம்.

காக்கி சட்டை என்பது தவறு செய்யும் பொது மக்களிடம் கறாராகவும், ஏழை எளியவர்களிடம் மாண்பாக நடந்து கொள்ளவும்தான் காக்கி உடுப்பு வழங்கப்படுகிறது. அப்பாவிகளை ஏறி மிதிக்கவும், பிச்சை எடுக்கவும், லஞ்சம் வாங்கவும், அதிகார துஷ்பிரயோகம் செய்யவும் அல்ல என்பதை எப்பொழுது புரிந்து கொள்வார்கள், தமிழக காவல் துறையினர்" என்று கொதித்தார்கள்.

- சண்.சரவணக்குமார்
படம் ஈ.ஜெ நந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ