Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'புள்ளிராஜாவும் தில்லுதுரையும் எங்கே?' -ஆயிரம் கோடியை முடக்கிய அரசு!

புள்ளிராஜா விளம்பரமோ தில்லுதுரை பிளக்ஸ் போர்டுகளோ இல்லாமல் சுகாதாரத் துறை அலுவலகங்கள் சோர்ந்து போயுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக எய்ட்ஸ் தடுப்பு பிரசாரங்களைக் காண முடியவில்லை. ' சுகாதாரத்திற்கான நிதியில் முப்பது சதவீதத்தை மத்திய அரசு குறைத்துவிட்டது. மாநில அரசின் நிதியில் திட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை' என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த பிரசாரங்களைத் தீவிரமாக முன்னெடுத்தது எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம். மாநில சுகாதாரத் துறையின்கீழ் இயங்கும் இந்த வாரியம் முன்னெடுத்த பிரசார யுக்திகள், பாமர மக்களை எளிதில் சென்றடைந்தன. 'புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?,  தில்லுதுரை'  என விதம்விதமான பிரசாரங்களைப் புகுத்தினர். இதன் மூலம் எய்ட்ஸ் நோயின் அபாயத்தையும், பாதுகாப்புச் சாதனங்களை அணிய வேண்டிய கட்டாயத்தையும் மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்தனர். இதன் விளைவாக எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தமிழகம் இறங்கியது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இயங்குவதாகவே தெரியவில்லை. பெயரளவில் அதிகாரிகள் வந்து போகின்றனர். 'நிதி இருந்தால்தானே ஆக்கப்பூர்வமாக செயல்பட முடியும்' என்கின்றனர் அதிகாரிகள்.

அவர்கள் நம்மிடம், " தமிழ்நாட்டில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட எய்ட்ஸ் நோயாளிகள் வசிக்கின்றனர். இதில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் எட்டாயிரத்தைத் தாண்டிவிட்டது. எங்கள் வாரியத்தின் மூலம் எய்ட்ஸ் நோய் பாதித்த குழந்தைகளுக்கு என தனியாக அறக்கட்டளையை உருவாக்கினோம். தற்போது இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை போதிய அளவில் வழங்க முடியவில்லை. ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் மருந்து பற்றாக்குறை நிலவி வருகிறது. நோயாளிகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை" என ஆதங்கப்பட்டனர்.

" மத்தியில் பா.ஜ.க தலைமையிலான அரசு பதவிக்கு வந்த நாளில் இருந்து சுகாதாரத்திற்கான நிதியில் கை வைக்க ஆரம்பித்துவிட்டது. சுகாதாரம், நோய் தடுப்பு போன்றவற்றைச் செயல்படுத்துவதில் 30 சதவீதத்தை மத்திய அரசு முடக்கிவிட்டது. இதன்மூலம் ஆறாயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தினார்கள். எய்ட்ஸ் நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கான நிதியில் இருந்து தமிழகத்திற்கு வந்து சேர வேண்டிய 1,300 கோடி ரூபாயை மத்திய அரசு அளிக்கவில்லை. இதன்மூலம் நோய் பரவுதல் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது" என வேதனைப்பட்ட சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், தொடர்ந்து,

" சுகாதாரத்திற்காக அதிகம் செலவு செய்யும் நாடுகளில் இந்தியா பின்தங்கியுள்ளது. நமது பக்கத்து நாடுகளான சீனாவிலும் இலங்கையிலும் சுகாதாரத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படுகின்றன. ஆனால் நம் நாட்டில் இதுவரை அளித்து வந்த நிதியைக் குறைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கினர் ஏழைகள்தான். அவர்கள்  அரசு மருத்துவமனைகளை நம்பிதான் சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்நிலையில் பொது சுகாதாரத்தில் கை வைப்பது என்பது, நோய்களின் பெருக்கத்தை தீவிரப்படுத்தவே வாய்ப்பு அதிகம். எனவே, கூடுதல் நிதியை வலியுறுத்திப் பெற வேண்டிய அவசியம் மாநில அரசுக்கு இருக்கிறது. எய்ட்ஸ் நோய் தடுப்பு பிரசாரங்களுக்கு மாநில அரசும் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்" என்றார் உறுதியாக.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவியோடு இயங்கி வந்த தன்னார்வக் குழு ஒன்றின் நிர்வாகி நம்மிடம், " வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் அமரும் சமூக அக்கறையுள்ள அதிகாரிகளால் தினம்தோறும் பல கிராமங்களுக்குப் பயணித்து வந்தோம். தில்லுதுரை, புள்ளி ராஜா விளம்பரங்களைத் தாண்டி, 'இளவட்டம் கொடிகட்டும்' என்ற பிரசாரத்தைப் புகுத்தினோம். இதன்மூலம் எய்ட்ஸ் நோய் பாதிப்படைந்த கிராமங்களுக்குச் சென்று, ' நல்லா இருந்து பத்துப் புள்ள பெத்தெடுத்தது அந்தக் காலம், தாறுமாறான துணையைத் தேடி ஹெச்.ஐ.வி வாங்குவது இந்தக் காலம்' எனப் பாட்டு பாடி,  மக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தினோம். இளவட்டக் கல்லை தூக்குவது, உரியடித்தல், கம்பு சுற்றுதல் என ஆண்களுக்கு ஆரோக்கியத்தை உணர்த்தும் போட்டிகளை நடத்தி பரிசு கொடுப்போம். பாதுகாப்பான உறவு குறித்து நாள் முழுக்க நாடகம் நடத்துவோம். இதற்காக தினமும் நூறு ரூபாய் வரையில் ஊக்கத் தொகை கொடுத்து வந்தனர். இரண்டாண்டுகளாக எங்களைப் போன்ற கலைக் குழுக்களுக்கு எந்த வேலையும் இல்லை. மாநில அரசைத்தான் நம்பியிருக்கிறோம்" என்கின்றனர்.

-ஆ.விஜயானந்த்

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ