Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ்க் கவிதைகளின் தனிக் குரல்: ஞானக் கூத்தன் எனும் 'இளங்குயில்'

மிழ் நவீன கவிதையின் முன்னோடிகளில் ஒருவரும் தனித்துவமான கவிமொழிக்குச் சொந்தகாரரும் ஆன கவிஞர் ஞானக்கூத்தன் தமது 78வயது வயதில் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

ஞானக்கூத்தனின் இயற்பெயர் ஆர்.ரங்கநாதன். மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருஇந்தளூர் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர். பொதுபணித்துறையில் பணியாற்றிவர்.  தமிழ் மரபு இலக்கியத்திலும் சமஸ்கிருத இலக்கியக்கியங்களிலும் நல்ல புலமை உடையவர். ம.பொ.சி யின் தமிழரசுக் கழகம் போன்ற அரசியல் இயக்கங்களில் பணியாற்றியவர். தமிழ்நாடு பெயர் வைப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர். தமிழ் சிற்றிதழ் மரபில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 'கசடதபற' இதழ் இவரின் முன் முயற்சியினால் வெளிவந்தது என்பது இன்றைய இளம் தலைமுறை அறியாத தகவல். 

இளங்குயில், இளங்கம்பன் என்ற பல்வேறு புனைபெயர்களில் துவக்க காலத்தில் எழுதினார். திருமந்திரம் படித்த பிறகு அதன் தாக்கத்தில் தன் பெயரை ஞானக்கூத்தன் என்று மாற்றிக்கொண்டார். 'அன்று வேறு கிழமை', 'சூரியனுக்குப் பின்பக்கம்', 'கடற்கரையில் சில மரங்கள்', 'மீண்டும் அவர்கள்' போன்ற கவிதை நூல்களை எழுதியவர்.

பின்னர் இந்த கவிதைகள் எல்லாம் தொகுக்கப்பட்டு 'பென்சில் படங்கள்' என்ற தொகுப்பும் அதற்கு பிறகு எழுதப்பட்ட கவிதைகள், 'என் உளம் நிற்றி நீ' என்ற தொகுப்பாகவும் வெளிவந்துள்ளன. சாரல் விருது,  விஷ்ணுபுரம் அறக்கட்டளை விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.  இவரது, 'அன்று வேறு கிழமை' கவிதை நுால், தமிழ் இலக்கிய சூழலில் பரவலான கவனத்தைப் பெற்ற தொகுப்பு.

தமிழ் கவிதைகளில் மரபின் தொடர்ச்சியையும் நவீனத்தின் புதுமையையும் இணைத்த பெருமை ஞானக்கூத்தனுடையது. இவரது கவிதைகளில் உள்ள அங்கதம் மிகுந்த தனித்துவமானது.

தனது முகநுாலில் ஞானக்கூத்தனுக்கு புகழஞ்சலி செலுத்தி எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் இவ்வாறு எழுதியுள்ளார்...

“புதுக்கவிதைத் துறையில் மாபெரும் சாதனையாளராகவும் தனக்கென்று தனிப்பாணியை வகுத்துக் கொண்ட முன்னோடிப் படைப்பாளியாகவும் திகழ்ந்த ஞானக்கூத்தன் நேற்று காலமாகிவிட்டார்.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் நா.பா. வின் தீபம் இதழில் பணிபுரிந்த காலத்திலிருந்து அவரோடு நட்பு. நா.பா. பெரிதும் மதித்த கவிஞர்களில் அவரும் ஒருவர். தீபத்தின் தீபாவளி இதழ்களை அவர் கவிதை அலங்கரித்ததுண்டு.

ஞானக்கூத்தன் கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒரு கவிதை இங்கே....

*பவழமல்லி!*

கதைகேட்கப் போய்விடுவாள் அம்மா, மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா, சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும், சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்!

பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழமல்லி!

கதைமுடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழுநிலவில் அந்த நேரத்
தனிமையிலே என்நினைப்புத் தோன்றுமோடி...


- இளங்கோ கிருஷ்ணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ