Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வயதில் முதுமை, நம்பிக்கையில் இளமை... 'ஆயிரத்தில் ஒருத்தி' நீலவேணி பாட்டி!

சென்னை, ஆயிரம் விளக்கு பேருந்து நிறுத்தம் அருகே, பிளாட்பார ஓரத்தில் தமிழகத்தின் அத்தனை வார, மாத இதழ்கள், நாளிதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதனருகில் சோகமும், நம்பிக்கையும் கலந்த ஒரு முகபாவத்துடன்  வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார் அந்த மூதாட்டி. வாடிக்கையாளர்கள் புத்தகங்களை வாங்கிக்கொண்ட மறுவினாடி, அவர்களை கையெடுத்து கும்பிட்டு அனுப்பிவைக்கிறார். வாடிக்கையாளர்களை வணங்கும் இந்த நாகரிகம் வழக்கொழிந்துபோய்விட்ட இக்காலத்தில், அந்தப் மூதாட்டி மேல் மதிப்பை கூட்ட வைத்தது இந்த செயல்.

சில மணி நேர தொடர் அவதானிப்புக்குப்பின் அவரிடம் பேசினோம்...

எவ்வளவோ தொழில்கள் இருக்கும்போது இப்படி பாதுகாப்பற்ற சூழலில், பிளாட்பார ஓரத்தில் பத்திரிகை விற்கும் தொழிலை செய்வதற்கு என்ன காரணம்?

" என் பெயர் நீலவேணி. என் கணவர் பேரு ரங்கநாதன், 30 வருஷமா அவருதான் இந்த தொழிலை செஞ்சிக்கிட்டு இருந்தாரு. அவர் பெரியார் நடத்தின 'விடுதலை' பத்திரிகையில கம்போசிடரா வேலை செய்துட்டு இருந்தாரு. அப்போ இருந்து பேப்பர் போடுவதையும் ஒரு வேலையா பாத்தாரு. அப்படிதான் இந்த புத்தக விற்பனை தொழில் பழக்கம் ஆச்சு.

1970-ல மவுண்ட் ரோட்ல, நான் வேலை பார்த்த எஸ்.ஆர்.என் புத்தக கம்பெனியில வந்து ஜாய்ன் பண்ணாரு. அப்போதான் எங்களுக்குள்ள காதல் மலர்ந்துச்சு"  என வெட்கப்பட்டு சிரித்தபடி, தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

" எங்க காதலை பெத்தவங்ககிட்ட  சொன்னபோது பலமா எதிர்த்தாங்க. எதிர்பாராத எதிர்ப்பை எல்லாம் சந்திச்சோம். எல்லா எதிர்ப்புகளையும் மீறி பதிவுத் திருமணம்  செஞ்சுக்கிட்டோம். எங்களுக்கு இரண்டு ஆம்பள பிள்ளைங்க. எங்க இரண்டு பேருக்கும், எந்த சப்போர்ட்டும் இல்லாததால பொருளாதார ரீதியில் பல கஷ்டங்களை அனுபவிச்சோம். அந்த வறுமையால இரண்டு பசங்களையும் படிக்க வைக்க முடியலை. பெரிய பையன் செக்யூரிட்டியா வேலை பார்க்குறான். சின்னவன் பேப்பர் போட்டுட்டு ஏஜென்ட்டாவும் இருக்கான்.

எப்படியோ சிரமப்பட்டு இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டோம். என் கணவர் 8 வருஷத்துக்கு முன்னால இறந்துட்டார். போன 8 வருசமா, நானும் என்னோட சின்னப் பையனும் கடையை பார்த்துட்டு வந்தோம். எத்தனைக் கஷ்டம் வந்தபோதும், அது என்னமோ தெரியலை...எனக்கு வேறு எந்த வேலைக்கும் போக மனசு கேட்கலை. பத்திரிகை விற்கிறதுல அவ்வளவா லாபம் இல்லைன்னாலும், இதுல என்னமோ ஒரு மனதிருப்தி. திடீர்னு ஒருநாள் குடும்பத்துல பிரச்னை வந்து, அதனால் 3 மாசமா என்னை தனியா விட்டுட்டாங்க பசங்க. எனக்கு 70 வயது ஆகிறது. இனிமே நான் எங்க போய் என்ன வேலை பார்க்கிறது? அதோடு நம்மை ஒதுக்கின பசங்ககிட்டவும் திரும்பப் போய் சாப்பிட மனசு இடம்கொடுக்கலை. இருக்கவே இருக்கு கணவர் கற்றுத்தந்த தொழில்னுதான், தெரிஞ்ச தொழிலை தொடர்ந்து செய்துட்டு வர்றேன்.

இங்க தொழில் செய்றது பாதுகாப்பில்லைதான். வெயில் மழை பார்க்காம பேப்பர், வாரப்பத்திரிகைனு வித்துட்டு இருக்கேன். வெயில் வந்தா பரவாயில்லை. மழை வந்துட்டா அவ்ளோ சீக்கிரத்துல புத்தகங்களை பாதுகாக்க முடியாது. அன்னிக்கு கைகாசு போட்டுத்தான் ஏஜென்ட்டுக்கு காசு தரணும். காலை 6 மணிக்கெல்லாம் எந்திரிச்சு கடையை விரிப்பேன். ஒருநாள் வருமானம் வாய்க்கும், வயித்துக்குமே பத்த மாட்டேங்குது, என்ன செய்றது” என கண்ணீர் கலந்த சிரிப்போடு பேசினார், நீலவேணி மூதாட்டி

'பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு' னு சொல்றது மாதிரி, பிள்ளைகளுக்குனு குடும்பம் வந்ததும், என்னை தனியா விட்டுட்டுப் போயிட்டாங்க. அதுக்காக கொஞ்சமும் மனம் தளராம யார்கிட்டேயும் எதுவும் கேட்க விரும்பாம, இந்த புத்தகக் கடையை நடத்தி வர்றேன். ஒரு தனியார் லேடிஸ் ஹாஸ்டல் மொட்டை மாடியில நான் தூங்குவேன். தினமும் 6 மணிக்கு ஏஜென்டுக்கிட்ட டெய்லி பேப்பர், தமிழ், மலையாளம், இங்கிலீஷ் புத்தகங்களை வாங்கிட்டு வந்து விற்பேன். எனக்குனு தனி வாடிக்கையாளர்கள் இருக்காங்க. வர்ற வருமானம் என்னோட செலவுகளுக்கு சரியா இருக்குது.

ஆனாலும், நம்மளை விரட்டின பசங்கக்கிட்ட போய் கையேந்தாம, சொந்த உழைப்பில சாப்பிடறமேங்கற திருப்தி இருக்கு. சொந்த உறவுகள் விட்டுட்டுப் போன கவலை இருந்தாலும், பக்கத்துல இருக்குற பேக்கரிக்கு வர்ற குழந்தைங்க என்னைப் பார்த்து, "பாட்டி...' னு கூப்பிடும்போது, என்னோட பேத்திகளோட நினைவு வந்திடும். அப்போதான் பிள்ளைங்களோட சேர்ந்து பேரன் பேத்திகளை கொஞ்சி வாழற ஆசை வரும். அன்போட இப்போ வந்து கூப்பிட்டாலும் என் மகனோட போய் வாழ்ந்துருவேன்"  என கண்ணீர் விடுகிறார் நீலவேணி.

வயதான பெற்றோரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டியது, ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை. பிள்ளைகளுக்காக நாளும் பொழுதையும் செலவிட்டு ஆளாக்கிவிடும் பெற்றோர்கள் கடைசிக் காலத்தில் தனிமையில் தள்ளப்படுகிற இந்த நிலை கவலைக்குரியது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு நாள் முழுவதும் வெயிலில் நின்று கி்ன்னஸ் சாதனை செய்தவரை விட, வெயில், மழை பார்க்காமல் 70 வயதிலும் உழைக்கும் இந்த நீலவேணிப் பாட்டியை, பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரராகவே கருதலாம். கிளம்பியபோது கையிலிருந்த சிறுதொகையை கொடுத்தேன். உறுதியாக வாங்க மறுத்தார்.

'அந்தத் தொகைக்கு வாரப்பத்திரிகைகளை கொடுங்கள்' என வாங்கிக் கொண்டேன். மீண்டும் அந்தக் கரங்கள் என்னை நோக்கி கையெடுத்து கும்பிட்டது.

நீலவேணிப் பாட்டியிடம் வாங்கிய புத்தகங்களை முழுமையாக படிப்பேனோ இல்லையோ, ஆனால் நீலவேணிப்பாட்டியின் வாழ்க்கையை படித்தது, பெரும் படிப்பினையாக இருக்கிறது.

எழுபது வயதிலும் யாருடைய துணையையும் எதிர்பார்க்காமல், தனித்து வாழ்ந்து வரும் நீலவேணி பாட்டிக்கு ஒரு சல்யூட்!...

- ஆ.ஐஸ்வர்ய லட்சுமி
படங்கள்: அ.சரண்குமார்
(மாணவப் பத்திரிகையாளர்கள்)

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ