Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'போராட்டம் தொடரும்!' வழக்கறிஞர்கள்: 'கடும் நடவடிக்கை தொடரும்!' பார் கவுன்சில்

ஞ்சாவூர்: வழக்கறிஞர்கள் சங்கங்களின் போராட்டம் நீடித்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகில இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வழக்கறிஞர்களுக்கு எதிரான புதிய சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி, வழக்கறிஞர்கள் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பும், ஆர்ப்பாட்டம், நகல் எரிப்பு, மனித சங்கிலி, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். கடந்த 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, வழக்கறிஞர்களுக்கு எதிரான புதிய சட்ட திருத்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்து தஞ்சையில் பொதுக்குழுவை கூட்டி தங்களது முடிவை அறிவிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் அறிவித்தனர். அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறும்போது, 'வழக்கறிஞர்களுக்கு எதிரான புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாங்கள் போராடி வரும் சூழ்நிலையில், உயர்நீதிமன்றத்தின் 3 உத்தரவுகள் எங்களை திருப்தி செய்யவில்லை. அது, ஏமாற்றும் விதமாக உள்ளது. அதை ஏற்க மறுத்துவிட்டோம். ஏற்கனவே 43 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது, இல்லாத சட்டத்தை உபயோகப்படுத்தி 126 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த உத்தரவை திரும்பப் பெறும் வரையிலும், மேலும் பல்வேறு வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்பப் பெறும் வரையிலும் எங்களின் போராட்டம் தொடரும். ஏற்கனவே எங்களுடன் பேச்சு நடத்த 5 நீதிபதிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவில் உள்ள 3 நீதிபதிகள் வழக்கறிஞர்களுக்கு எதிரான புதிய சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தவர்கள். அவர்களை குழுவில் நியமித்தால் எங்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்.

தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் பிரச்னைக்கு அகில இந்திய பார் கவுன்சில் துணைத்தலைவர் பிரபாகரன், தமிழக பார் கவுன்சில் தலைவர் செல்வம்தான் காரணம்.

வழக்கறிஞர்கள் மீதான இடைநீக்கம் உத்தரவை வாபஸ் பெறாவிட்டால் அனைத்து வழக்கறிஞர்களும் லைசென்சை திரும்ப ஒப்படைக்க தயார் நிலையில் உள்ளோம். இதற்காக இந்த கூட்டத்தில் 1,000 வழக்கறிஞர்கள் லைசென்சை ஒப்படைக்க தயார் என கையெழுத்திட்டு உள்ளனர். எனவே தமிழகம் முழுவதும் உள்ள 65 ஆயிரம் வழக்கறிஞர்களும் லைசென்சை திரும்ப ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம்.

எங்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் வருகின்ற 5-ம் தேதி வரை நடைபெறும். அதன் பின்னரும் எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 6-ம் தேதி போராட்டக்குழுவின் செயற்குழு கூட்டத்தை கூட்டி முடிவு செய்ய உள்ளோம். தமிழக அரசு இந்த பிரச்னையில் 2 தரப்பினருக்கும் பொதுவாக உள்ளது" என்றார்.

அகில இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை...

இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா, ''சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 126 வழக்கறிஞர்களை இந்திய பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

சட்டத் திருத்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்த பின்னரும், அதற்காக ஒரு குழுவை அமைத்த பின்னரும், பேச்சுவார்த்தை மூலமாக சுமுகத் தீர்வு காண முன்வந்த பிறகும் போராட்டங்கள் தொடர்கின்றன. போராட்டத்திற்கு காரணமான வழக்கறிஞர்கள் குறித்து பட்டியல் தயாரிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அப்படி பெறப்படும் பட்டியலில் ஆயிரம் பேர் இருந்தாலும், தேவைப்பட்டால் அவர்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்ய இந்திய பார் கவுன்சில் தயங்காது. ஏனென்றால், நீதித்துறையின் மாண்பு காக்கப்பட வேண்டும்.

இந்த போராட்டத்தினால் சட்டக்கல்வி பயிலும் மாணவர்கள், சட்ட சேவை செய்ய விரும்பும் வழக்கறிஞர்கள், அப்பாவி மக்கள் போன்றோர் பாதிக்கப்படுகின்றனர். வழக்கறிஞர்களின் கல்விச் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், 30 சதவீதம் பேர் வழக்கறிஞர்களே இல்லை. அவர்கள் போலிச் சான்றிதழ்கள் மூலம் வழக்கறிஞர்களாக சேர்ந்து உள்ளனர். வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.

பார் கவுன்சில் செயற்குழு தலைவர் அபூர்ப குமார் மிஸ்ரா தலைமையில் 7 பேர் கொண்ட கமிட்டி அமைத்து, அடுத்த வாரம் தமிழகம் செல்ல உள்ளனர். பார் கவுன்சிலின் தலைவர்களையும், மாவட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து பேசி, அதன்பின் உயர் நீதிமன்ற நிர்வாகத்திடம் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறுவது குறித்து பேசுவோம். ஆனால் சட்டத் திருத்தத்திற்கு எதிராக எதிர்ப்பை காட்டுவதற்கு போராட்டம் என்பது சரியான முறையல்ல" என்றார்.

படங்கள்: கே.குணசீலன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ