Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயிருக்குப் போராடும் குட்டி யானை: தாய் யானையின் பாசப்போராட்டம்

கோவையில் படுகாயமடைந்த குட்டி யானையை அழைத்துச் செல்ல முடியாமல், குட்டி யானையோடு தாய் யானை நடத்தி வரும் பாசப்போராட்டம் காண்பவர்களை கலங்கச் செய்தது.

கோவை, மாங்கரை அருகே   தும்பிக்கை, வாயில் காயமடைந்த நிலையில் குட்டி யானை ஒன்று கடந்த சில தினங்களாக சுற்றித்திரிந்தது. பழத்தில் வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் குட்டி யானை காயமடைந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த குட்டி யானை இன்று மாங்கரை பகுதியில் உடல் நலிவுற்று நகர முடியாமல் நின்றது. வாயில் அடிபட்டதால் உணவு உட்கொள்ள முடியாமல், குட்டி யானை உயிருக்குப் போராடி வருகிறது.
உடன் வந்த தாய் யானை உள்ளிட்ட யானைகள் குட்டி யானையை சூழ்ந்து கொண்டு நின்றன. மக்கள் கூட்டம் அதிகம் கூடியதையடுத்து, யானைக்கூட்டம் கலையத்துவங்கியது. மற்ற யானைகள் சென்றாலும், தாய் யானை குட்டி யானையை விட்டுச் செல்ல மனமில்லாமல் விலகாமல் அங்கேயே நின்றது. குட்டி யானையை அழைத்துச் செல்ல தாய் யானை முயன்றபோதும், குட்டி யானையால் நகர முடியவில்லை. இதனால் பல மணி நேரமாக அந்த இடத்தை விட்டுச் செல்லாமல்  குட்டி யானையை சுற்றிச் சுற்றி அதை தன்னுடன் அழைத்துச் செல்லும் முயற்சியை தொடர்ந்து வருகிறது தாய் யானை.

யானையைக் காணும் ஆவலில் சுற்றி நிற்கும் பொதுமக்கள் கூட்டத்தால், குட்டி யானை மிரள்வதைக் கண்டு அவ்வப்போது, மக்கள் கூட்டத்தை தாய் யானை விரட்டி வருகிறது.

யானையை மீட்டு சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல அங்கு வந்த வனத்துறை அதிகாரிகளையும் தாய் யானை குட்டியானையின் அருகில் நெருங்கவிடவில்லை. இதையடுத்து யானையை மீட்க வனத்துறை கும்கி யானையை இந்த இடத்திற்கு வரவழைத்தனர். கும்கி யானையின் மூலம் குட்டியானையை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டுவருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

- ச.ஜெ.ரவி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ