Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நெல்லு விதைக்கலாமா... கரும்பு போடலாமா?' விவசாயத்துக்கு ஜோசியம் பார்க்கும் விசித்திர கிராமம்

ன்றைய, ‘போக்கிமான் கோ’ உலகத்தில், நம்ம ஊரில் ஜோசியமும், ஜாதகமும் இன்னமும் பலரது வாழ்க்கையில் விளையாடிக்கொண்டிருக்கிறது, என்பதை ஜீரணித்துக்கொள்வது கஷ்டமாகத்தான் உள்ளது.  பிள்ளைக்கு பேர் வைப்பது, பள்ளியில் சேர்ப்பது, திருமணம் செய்வது, தொழில் தொடங்குவது, உள்ளிட்டவைகளுக்கு ஜாதகம் பார்த்திருக்கிறோம் அல்லது பார்ப்பதாக  கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், "கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு அடுத்துள்ள பெரமனூர் என்கிற கிராம மக்கள்,  விவசாயத்துக்கு ஜோசியம் பார்க்கிறார்கள். பொருத்தம் சரி இல்லையென்றால், அந்தப் பயிரையே பயிர் செய்ய மாட்டார்கள்... அப்படி மீறி செய்தால், அவர்கள் குடும்பத்தில் உயிர்பலி வரைக்கும் நடக்கும் என்பது அவர்களது நம்பிக்கை" என்று நண்பர் ஒருவர் சொல்ல, பெரமனூருக்கு புறப்பட்டோம்...

பச்சைப்பசேல் வயல்வெளிகளில், செழித்து நின்ற பயிர்கள் நம்மை வரவேற்றன. ஊருக்குள் நுழைந்ததும் எதிர்பட்டார், ராமலிங்கம். அவரிடம் விவசாய ஜோசியத்தை பற்றி விசாரித்தோம்.

படபடவென பேச ஆரம்பித்தவர், ''ஆமாங்க நீங்க கேள்விபட்டது உண்மைதான். எங்க ஊர்ல என்ன பயிர் பண்ணாலும் 'குறி' ( ஜோசியம்) பார்த்துதான் செய்வோம். குறிப்பா மஞ்சள், கரும்பு, எள் இந்த மூன்றையும் சாமிகிட்ட 'குறி' கேக்காம பயிர் பண்ணவே மாட்டோம். இந்த ஊர்ல விவசாயம் பண்ற எல்லாருமே அப்படித்தான். எங்க ஊர்ல சம்பத்னு ஒரு சாமியார் இருக்கார். அவர்கிட்ட 'குறி' கேட்டுதான் இந்த முறை என் தோட்டத்துல நான்  வாழை போட்ருக்கேன். நல்லா வந்துருக்கு.

'நீ இந்த வருஷம் மஞ்சள் போட்டா சரி வராது' னு சாமி சொல்லிட்டாருன்னா, அதை பயிர் பண்ணக்கூடாது. ஒண்ணு விளைச்சல் இல்லாமப் போயிடும்... இல்ல நம்ம வீட்ல, ஆடோ மாடோ ஏதாவது உயிர்ப் பலிகள் ஏற்பட்டுடும். அதற்கு பிறகு நாம மீள்றது கஷ்டம். ஏன்... சமயத்துல மனுஷங்களே செத்துப் போயிடுவாங்க. எங்க குல தெய்வத்துக்கு கருப்பு ஆகாது. அதையும் மீறி ஒரு வருஷம் எள் பயிர் பண்ணோம்.  அறுவடை சமயத்துல எங்க அப்பா செத்துப் போயிட்டாரு. அதுல இருந்து சாமிக்கிட்ட குறி கேக்காம எதையும் செய்யுறது இல்லை.

எந்த பயிர் பண்றமோ அந்த பயிர் நம்ம பேருக்கு ஒத்துவருமானு பாக்கணும். நம்ம பேருக்கு ஒத்து வராட்டியும் நம்ம வீட்ல யாருக்காவது ஒத்து வந்தாக்கூட பயிர் பண்ணலாம். ஒருமுறை எங்க வயல்ல நெல் போடலாமானு சாமிகிட்ட கேட்டேன். என் பேருக்கு ஒத்துவரல... என் பொண்டாட்டி பேருக்கும், ஒத்துவரல... பொறந்து ஒரு வருஷமான என் மகனுக்கு ஒத்து வந்துச்சி. அதனால கைக்குழந்தையை தூக்கிக்கிட்டு போய், அவன் கையால முதல் விதையை போட்டோம். நல்ல விளைச்சல் அந்த வருஷம். வைக்கோல் மட்டும் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆச்சி. நான் முற்போக்குவாதிதான். ஆனா, இந்த விஷயத்துல இப்படி பண்ணினாதான் சரியா வருது''. (நமக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. ஆனாலும், ராமலிங்கம் சளைக்காமல் தொடர்ந்தார்...)

''அவ்வளவு ஏன்... அந்த சம்பத் சாமியவே எடுத்துக்கோங்க. அவர் வயலும் அவங்க அண்ணன் வயலும் பக்கத்து பக்கத்துலதான் இருக்கு. ஒரே தண்ணி ஒரே மண்ணுதான். சம்பத் சாமிக்கு மஞ்சள் ஒத்துவரும். ஆனா, அவங்க அண்ணனுக்கு ஒத்து வராது. அவங்க அண்ணன் காய்கறி மட்டும்தான் பயிர் பண்ணுவார். இந்த ஊர்ல எல்லாருக்குமே அவங்க அவங்களுக்கு  நம்பிக்கையான சாமியாருங்க இருக்காங்க. அவுங்ககிட்ட ரகசியமா குறி கேட்டுத்தான் பயிர் பண்ணுவாங்க. வெளில யாருக்கிட்டயும் சொல்ல மாட்டாங்க.'' என்று நிறுத்தினார்.

" நாங்க சம்பத் சாமியை பார்க்கலாமா...?" என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் நம்மை அழைத்துச் சென்றார்.

சம்பத் சாமியிடம் பேசினோம். ''நான் 8 வருஷமா குறி பாக்குறேன். இந்த ஊர்ல இருந்து நிறைய பேர் என்கிட்ட பார்ப்பாங்க. அவங்கவங்க பேருக்கு இன்ன பயிர் ஒத்து வருமானு பொருத்தம் பார்த்து சொல்லுவேன். அதுபடிதான் கேப்பாங்க. நானே பொருத்தம் பார்த்துதான் இந்த முறை மஞ்சள் போட்ருக்கேன்'' என்றார்.

திரும்பும் வழியில் ரவி என்பவரிடம் பேசினோம். ''நான் இந்தமுறை மஞ்சள் போடலாம்னு இருந்தேங்க. எங்க வீட்ல யாரு பேருக்குமே ஒத்து வரல. அதான் என்ன பண்றதுனு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்... பார்ப்போம்'' என்று நடையைக் கட்டினார்.

என்னத்த சொல்ல..?

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: க.தனசேகரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ