Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புலி... ஏன் வீரத்தின் அடையாளம்?

லகிலேயே அதிகளவில் புலிகள் வசிக்கும் நாடுகளில் இந்தியாவுக்குதான் முதலிடம். அண்மைக் காலத்தில், இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். கடந்த 2014 ம் ஆண்டு 2,226 புலிகள் இருந்தன. தற்போது அதன்  எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.   இதில் மூன்றில் ஒரு பகுதி புலிகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் வசிக்கின்றன. தமிழகத்திலும் புலிகளின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்திருக்கிறது.  2006ம் ஆண்டு கணக்கின்படி வெறும் 76 புலிகள்தான் தமிழகத்தில் இருந்தன. 2010 ம் ஆண்டு 163 ஆக அதிகரித்தது. 2014 ம் ஆண்டு 229 ஆக அதிகரித்து,  தற்போது அது இன்னும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலி... ஏன் வீரத்தின் அடையாளம்?

காட்டுக்கு அரசன் சிங்கம் என்றாலும், வனத்திற்குள் தனி ஆவர்த்தனம் நடத்தும் மற்றோர் இனம் புலி. உணவுச்சங்கிலியின் முக்கிய இனம். புலிகளை கூட்டம் கூட்டமாக காண்பது அரிது. 'சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்' என்ற டயலாக்குக்கு நேர் எதிர் புலி. சிங்கங்கள் குழுக்களாக வாழும். ஐந்து ஆறு சிங்கங்கள் சேர்ந்து, ஒரு விலங்கினை வேட்டையாடுவதைக் காண முடியும்.  ஆனால் ஆண் புலிகள் தனிமை விரும்பிகள். பெரும்பாலும் தனியாகத்தான்  வேட்டையாடும். அதனால்தான் வீரத்தின் அடையாளமாக புலிகளைக் கூறுவது உண்டு.  ஆண் புலிகள் எல்லை வகுத்துக் கொண்டு 'உன் ஏரியாவுக்கு நான் வரமாட்டேன் என் ஏரியாவுக்கு நீ வராதே'னு  கோடு போட்டுக் கொண்டு வாழும் தன்மையுடையவை. புலிகள் மரம் ஏறும். பிரமாதமாக நீச்சல் அடிக்கும். மான்கள் பிடித்த உணவு.

புலிகளின் கணக்கெடுப்பு எப்படி நடைபெறும்?

கால்தடம், எச்சம், மரங்களில் நகங்களால் கீறி வைப்பது போன்ற அடையாளங்களால் புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். நவீன காலகட்டத்தில் கேமராக்கள் வழியாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டு,  புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகின்றன. 'பக் மார்க்'  ( கால்தடம் ) மூலமாக புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது பழமையான பாணி. நம்பகத்தன்மை  குறைந்ததாக இருந்தது.  ஆனாலும் கேமரா வழியாக புலிகள் நடமாட்டத்தை கண்காணிப்பது  நம்பகத்தன்மையை அதிகரித்திருத்திருக்கிறது. இந்தியாவில்,  புலிகள் வசிக்கும் 18 மாநில வனச் சரணாலயங்களில் 9,730 கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முதல் புலிகள் காப்பகம் கேஎம்டிஆர்


இந்தியாவில், 49 புலிகள் காப்பகங்கள் உள்ளன. ஆந்திரத்தில் உள்ள நாகர்ஜுனாசாகர்- ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம்தான் மிகப் பெரியது. சுமார் 3 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு மேல், இந்த காப்பகம் அமைந்துள்ளது.  மேற்குத் தொடர்ச்சி மலையில், கேஎம்டிஆர் என அழைக்கப்படும் 'களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்'தான் தமிழகத்தின் முதல் புலிகள் சரணாலயம். கடந்த 1988 ம் ஆண்டு இந்த சரணாலயம் உருவாக்கப்பட்டது. களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்துக்குள் மட்டும் 14  நதிகள் சிறியதும் பெரியதுமாக ஓடுகின்றன. நதிகளின் சரணாலயம் என்றும் இதனை கூறலாம். சுமார் 895 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில்  கேஎம்டிஆர் அமைந்துள்ளது.

எதிர்ப்பை மீறி புலிகள் காப்பகமான முதுமலை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, கடந்த 2009 ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. தமிழகம், கேரளா, கர்நாடகா  என மூன்று மாநில எல்லைப் பகுதியில் முதுமலை சரணாலயம் அமைந்துள்ளது. இதனையொட்டி கர்நாடகப் பகுதியில் பண்டிப்பூரிலும், கேரளத்தில் வயநாட்டிலும் புலிகள் காப்பகங்கள் அமைந்துள்ளன. இந்த 3 வனச்சரணாலயங்களில் மட்டும் 600க்கும் மேற்பட்ட புலிகள் வசிப்பதாக புள்ளிவிபரம் கூறுகிறது. முதுமலையை  புலிகள் சரணாலயமாக மாற்ற கடும் எதிர்ப்பு கிளம்பியது. சூழலியல் ஆர்வலர்களின் தொடர் போராட்டம் காரணமாகவே, முதுமலையை புலிகள் காப்பகமாக மாற்றி  அறிவித்தது மத்திய அரசு. இந்தப் பகுதி சுற்றுலாவுக்குப் பெயர் போனது என்பதால்,  புலிகள் சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்டால், தங்கள் பிழைப்பு பாதிக்கப்படும் என உள்ளுர் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

உதகையில் இருந்து முதுமலைக்கு இரு வழிகளில் செல்லலாம். மசினகுடி வழியாக சென்றால் ஒரு மணி நேரத்தில் சென்று விட முடியும். கூடலூர் வழியாக சென்றால், இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாகும். புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு, செந்நாய், காட்டுப்பன்றி, தேவாங்கு, குரங்கு, மான்கள் போன்ற விலங்குகளுக்கும், பூர்வீக பறவை இனமான இருவாச்சி உள்ளிட்ட 200 வகையான பறவைகளுக்கும் முதுமலை  முக்கிய வாழ்வாதாரம்.

ஆனைமலை புலிகள் காப்பகம்

ஆனைமலை இந்திராகாந்தி  புலிகள் காப்பகம், கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், டாப்ஸ்லிப் என்ற இடத்தில் அமைந்துள்ளது.  அருகில் உள்ள கேரள மாநிலத்திற்குள், பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் இருக்கிறது. ஏராளமான தமிழ் திரைப்படங்கள், இந்தப் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் சத்தியமங்கலம் வனச்சரணாலயமும் இப்போது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு குறைந்தபட்சம் 50 புலிகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

வேட்டைத் தடுப்பு நடவடிக்கை

உச்ச நீதிமன்றம், புலிகள் சரணாலயப் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்த பிறகு, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து  அதிகரித்தே வந்திருக்கிறது. வேட்டையை கட்டுப்படுத்துவதே புலிகளின் எண்ணிக்கை  இன்னும் உயர வழிவகுக்கும்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ