Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோர்ட் உத்தரவிட்டும் காத்திருக்கும் 88 உதவி காவல் ஆய்வாளர்கள்: தமிழ்நாடு போலீசில் ஒரு சோகம்!

மிழ்நாடு காவல்பணிக்கு உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான தேர்வுகள், ஒவ்வொரு பருவத்திலும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப் படுவது வழக்கம். அந்த வகையில் (1997-98 பேட்ஜ்) 1999-ம் ஆண்டு, "தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வான ஆணையும், அறிக்கையும் போலீஸ் டி.ஜி.பி.யாக எஃப்.சி.சர்மா இருந்த போது (7.3.1999) வெளியிடப்பட்டது.

டி.ஜி.பி. வெளியிட்ட அந்த அறிக்கையில். "தமிழகக்  காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கு 881 மனுதாரர் அடங்கிய பட்டியல் ஒன்று பெறப்பட்டுள்ளது. இவர்கள் இரண்டு குழுக்களாகப்  பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள். இட ஒதுக்கீடு மற்றும் அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி பெற்ற 500 மனுதாரர்கள் முதல்குழுவாகப் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்" என்கிறது அந்த அறிக்கை.

இதில் தேர்வான பலர், காவலர்களாக இருந்தபடியே தேர்வெழுதி நேரடி உதவி. ஆய்வாளர்களாகத்  தேர்வானவர்கள். எஞ்சிய 331 பேர் இந்த 17 ஆண்டுகளாக கோர்ட், தீர்ப்பு, மாறி, மாறி வரும் அரசுகளுக்கு மனு என்று போராடி, எஸ்.ஐ. ஆகியவர்கள் போக இன்னும் 88 பேர் மிச்சமிருக்கிறார்கள். அவர்கள் தற்போது சத்தமில்லாமல் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்து விட்டு எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.

"என்னதான் பிரச்சினை, சொல்லுங்களேன்" என்று காத்திருக்கும் 88 பேரில் சிலரிடம் கேட்டேன்

"போலீஸ் டி.ஜி.பி.அறிக்கையின் படி நடக்க வேண்டியவை நடக்கவில்லை. அதற்கடுத்து நடந்த பல மாற்றங்கள், சிலரை மட்டும் நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களாக்கி விட்டது. காவல் அதிகாரிகளாக வேண்டிய பலர் அதில் விடுபட்டு விட்டதால் ஆரம்பித்த இடத்திலேயே காவலர்களாக காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கான நியாயத்தைத்  தேடி சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றவகையில் (25.2.2005-ல்) எங்களில் 51 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும் இந்தத் தேர்வில், முறைகேடு நடந்ததைச்  சுட்டிக்காட்டிய வகையில் உச்ச நீதிமன்றத்தால் (7.8.2014-ல்) மேலும் 11 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப் பட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பினைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதி மன்றத்தால் எஞ்சியோர்க்கும் (88 பேர்கள்) பணி நியமனம் வழங்கிடும்படி கடந்த 27.1.2016 அன்று தீர்ப்பு வந்துள்ளது. இதில் முக்கியமாகக்  குறிப்பிடப்படவேண்டியது  என்னவென்றால் இந்த 88 பேருமே தமிழ்நாடு காவல் துறையில் காவலர்களாகவும், தலைமைக் காவலர்களாகவும் பணியில் இருக்கிறவர்கள் என்பதுதான்.

இப்போது கோர்ட் உத்தரவிட்ட பின்னரும், கடந்த 6 மாதகாலமாக, நேரடி சப்.இன்ஸ்பெக்டர் பதவிக்கான ஆர்டர் என்று கைக்கு வருமோ என்று காத்துக் கிடக்கிறோம். முதல்வர் மனது வைத்தால் எங்கள் கோப்புகள் விரைவில் கவனிக்கப் பட்டுவிடும்" என்கின்றனர் எதிர்பார்ப்புடன்!

ந.பா.சேதுராமன்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ