Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் தொடர்கிறது யானை கொலைகள்... யானைகளைக் கொல்லவா வனத்துறை?

கோவையில் கடந்த சில தினங்களுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கியிருக்கிறது, யானைகள் இறப்பு. அதுவும் ஒரே நாளில் இரண்டு யானைகள் இறந்திருக்கின்றன. இரு யானைகளின் இறப்பு இயற்கையாக நிகழ்ந்தவை இல்லை. இரண்டுமே மனிதத் தவறுகளால் நிகழ்ந்தவை.

கோவை பகுதியில் இதுவரை இல்லாத அளவு அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன, யானைகளின் மரணங்கள். ஜூன் மாத இறுதி வாரத்தில் தொடங்கி ஜூலை முதல் வாரம் வரை இறந்த யானைகளின் எண்ணிக்கை மட்டும் எட்டு. இந்த மரணங்கள் வன உயிரின ஆர்வலர்களை மிகுந்த கவலைக்குள்ளாகச் செய்தது. அதற்கு மிக முக்கிய காரணம், இறந்த யானைகளில் பெரும்பாலனவை இயற்கை மரணங்கள் அல்ல, என்பது தான். ரயிலில் அடிபட்டு... பஸ்சில் அடிபட்டு... வனத்துறையின் அலட்சியத்தால்... வேட்டையாடும் முயற்சியில் என நிகழ்ந்த  யானைகளின் மரணங்கள் வன ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்தச்  சூழலில் தான் 20 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர், இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து பலியாகியுள்ளன இரு யானைகள். இந்த இரு யானைகளும் இயற்கையாக மரணிக்கவில்லை. ஒரு யானை ரயிலில் மோதி இறந்தது. மற்றொரு குட்டி யானை வெடி வைக்கப்பட்டதில் இறந்தது. மீண்டும் தொடரும் யானைகளின் கொலைகள் வன உயிரின ஆர்வலர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏன் தொடர்கிறது யானை கொலைகள்,என்ன செய்கிறது, வனத்துறை, இந்த இரு சம்பவங்களிலும் வனத்துறையின் அலட்சியம் பிரதானமானது. இந்த இரு சம்பவங்களைப் பற்றித்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

அலட்சியத்தால் குட்டி யானையைக் கொன்றதா வனத்துறை?

முதலில் குட்டி யானை வெடி வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம். குட்டி யானைக்கு வெடி வைத்தவர்கள் ஒரு காரணம் என்றால், இந்த குட்டி யானையைக் காப்பாற்ற கடந்த 15 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்த வனத்துறையின் அலட்சியமும், மிக முக்கிய காரணம்.

கடந்த 13ம் தேதி கோவை அருகே பொன்னூத்து என்ற பகுதியில் காட்டுப்பன்றிக்கு வைத்த நாட்டு வெடி காயைக் கடித்தததில் குட்டி யானையின் வாய், தும்பிக்கையில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால் அதை கடைசி வரை வனத்துறை உறுதிப்படுத்தவில்லை. ஊடகங்களிலும் இது செய்தியானது. ஆனால் அந்தச்  செய்தியில் உண்மையில்லை என மறுத்தது வனத்துறை. வனத்துறையால் உறுதிப்படுத்த முடியாத ஒன்றை ஊடகங்கள் எப்படி உறுதி செய்தது? என கேள்வி எழுப்பினார், மாவட்ட வன அலுவலர் பெரியசாமி. குட்டி யானைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என அவர் விளக்கமும் சொன்னார்.

வனத்துறை கண்டுகொள்ளாத அந்த 16 நாட்கள்!

சம்பவம் நடந்து 16 நாட்கள் கழித்து, கோவையை அடுத்த மாங்கரை பகுதியில் தாடை, வாய், பல், நாக்கு என முழுவதும் சேதமடைந்த நிலையில் பரிதாபமாய் குட்டி யானை ஒன்று நின்றிருந்தது. பல நாட்கள் உணவு உட்கொள்ள முடியாமல் பரிதாபமாய் காட்சியளித்தது அந்தக் குட்டி யானை. இந்த யானை தான் கடந்த 13ம் தேதி நாட்டு வெடியில் படுகாயமடைந்த யானை. யானையைக் கண்டறிந்து சிகிச்சை அளித்திருக்க வேண்டிய வனத்துறை, 16 நாட்கள் யானையைப் பற்றி கவலை கொள்ளாமல் அலட்சியம் காட்டியதன் விளைவு கிட்டத்தட்ட உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

அதன் பின்னரும் கூட வனத்துறையின்  அலட்சியம் தொடரவே செய்தது. குட்டி யானை அதிகாலை முதல் இருந்த இடத்தை விட்டு நகரமுடியாமல் இருந்த நிலையில், யானையை மீட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய வனத்துறை மிகுந்த அலட்சியம் காட்டியது. குட்டி யானையின் அருகே தாய் யானை நின்றிருந்த நிலையில், தாய் யானையை திசை திருப்பியோ, விரட்டியோ சிகிச்சை அளித்திருந்தால் குட்டி யானை உயிர் பிழைத்திருக்கக் கூடும். ஆனால் மதியம் வரை குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்க முற்படவே இல்லை. மெதுவாக நகர்ந்த குட்டி யானை பின்னர் நகர முடியாமல் ஒரே இடத்தில் நின்றது. சிறிது நேரத்தில் நிற்க கூட முடியாமல் தரையில் படுத்தது. இதற்கு ஓரிரு மணி நேரங்களுக்குப் பின்னர் தான் யானையை மருத்துவர்கள் சோதித்தனர். ஆனால் அதில் பலனேதும் இல்லை. குட்டி யானை இறந்து விட... உடனடியாகத் தாய் யானையைத் திசை திருப்பி... குட்டி யானையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்குக் கொண்டு சென்றனர்.

மீண்டும்... மீண்டும்... ரயிலில் மோதி இறக்கும் யானைகள்!

அடுத்து யானை மோதி பெண் யானை இறந்த சம்பவம். யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது என்பது கடந்த 2008ம் ஆண்டுதொடங்கியது. 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி ரயில் பாதையைக் கடக்க முயன்ற கர்ப்பிணி யானை உள்ளிட்ட 3 யானைகள் ரயில் மோதி இறந்தன. அதன் தொடர்ச்சியாக கடந்த 2011ல் இன்னுமொரு யானை ரயில் மோதி இறந்தது. யானைகள் ரயில் மோதி இறப்பதால், அதிர்ந்து போன விலங்கின ஆர்வலர்கள், குரல் கொடுக்க...யானைகளைக் காப்பாற்ற ரயில் வேகம் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் தான் கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி ரயில் மோதி பெண் யானை ஒன்று பரிதாபமாக இறந்தது. அந்தக் கவலை மறைவதற்குள் ஜூலை 9ம் தேதி மற்றுமொரு யானை, ரயில் மோதி இறந்தது. இந்தச்  சூழலில் தான் மீண்டும் இதே மாதத்தில் ரயில் மோதி மற்றுமொரு யானை பலியாகியுள்ளது. நேற்று (வெள்ளி) காலை 6.10 மணிக்குக் கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த வெஸ்ட் கோஸ்ட் ரயில் மோதி பரிதாபமாக இறந்தது. இன்னுமொரு மரணம், என கடந்து விட முடியாதபடி யானைகள் அடுத்தடுத்து ரயிலில் அடிபட்டு இறப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அலட்சியம் காட்டும் வனத்துறையும், ரயில்வேயும்

ரயிலில் அடிபட்டு இறப்பது என்பது இன்று நேற்றல்ல... கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்னர்  தொடங்கியது. அதுவும் இந்த 40 நாட்களில் ரயிலில் அடிபட்டு இறந்த யானைகளின் எண்ணிக்கை மட்டும் மூன்று. ஆனால் இன்னும் இந்த விஷயத்தில் ரயில்வே துறையோ, வனத்துறையோ கவனம் செலுத்தியபாடில்லை. வனத்துறை ரயில்வே மீதும், ரயில்வே வனத்துறை மீதும் குற்றஞ்சொல்கிறதே தவிர, யானைகள் இறப்பைத்  தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வனத்துறையின் மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "யானைகள் தொடர்ச்சியாக இறக்கின்றன. வனத்துறை அலட்சியம் தான் காரணம் என சொல்வது முட்டாள் தனமானது. ரயில் மோதி யானைகள் இறப்பதைத்  தடுக்க முடியாது. ரயில்வே தான் கவனமாக ரயிலை இயக்க வேண்டும். ஆனால் ரயில் பாதையைக் கடக்கும் யானைகள் மீது மோதி விட்டு, வனத்தில் இருக்கும் யானைகள் ரயில் பாதைக்கு எப்படி வந்தது என கேள்வி எழுப்புகின்றனர்," என்றார் ஆவேசமாக.

"யானைகளைக் கண்ட உடன் ரயிலை நிறுத்துவது என்பது மிகவும் சிரமம். 40 கி.மீ வேகத்தில் ரயில் வந்தால் கூட உடனடியாக நிறுத்த முற்பட்டால் 500 மீட்டரை கடந்து தான் ரயில் நிற்கும். எனவே யானைகள் மீது மோதுவதைத் தவிர்ப்பதில் சிக்கல் உள்ளது. யானைகள் வனத்தை விட்டு வெளியே வருவதால் தான் இந்த விபத்து நடக்கிறது. வனத்தை விட்டு வெளியே வருவதற்கான காரணத்தைக் கண்டறிந்து இதற்கு தீர்வு காண வேண்டும், என்றனர். ஆனால் இன்று வரை எதுவும் நடக்கவில்லை. ஆனால் ரயில் மோதி யானை இறக்கும் சம்பவங்கள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.அதன் தொடர்ச்சி தான் இந்த சம்பவம்.

மக்களின் பேராசை தான் காரணமாம்!

இது போன்ற இறப்புகளைத் தடுக்க முடியாது. யானைகள் இறக்கத்தான் செய்யும். மனிதர்கள் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் வரை இந்த மரணங்கள் நிகழும். ரயிலில் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க நகரம் விரிவாக்கப்பட வேண்டும், என மக்கள் நினைத்தால் யானைகள் இறப்பைத் தடுக்க முடியாது. வளர்ச்சி தேவையில்லை என மக்கள் நினைத்தால் தான் இதைத் தடுக்க முடியும். மக்களின் பேராசை தான் யானைகளின் மரணத்துக்குக் காரணம்," என மக்கள் மீது பழியைத் தூக்கி போட்டார் வன அதிகாரி ஒருவர். இதே அதிகாரி தான் வனத்தையொட்டிய கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளால் எந்த பிரச்னையும் இல்லை என்றும் சொன்னார். வனத்தையொட்டிய பிரம்மாண்ட கட்டடங்களால் எதுவும் பிரச்னை இல்லை. மலை கிராமங்களில் பெருகும் குடியிருப்புகள் தான் காரணம் என்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்களைக் காக்கும் வேலையை மட்டுமே வனத்துறை செய்கிறது.

வனத்தையும், வன உயிரினங்களையும் காப்பது தான் வனத்துறையின் முதல் முக்கிய பணி. யானைகள் அழிவு, என்பது வன உயிரின அழிவு மட்டுமல்ல. வனத்தின் அழிவும் கூடத்தான். வனங்களைப் பெருக்கும் பேருயிரான யானைகளைக் காக்க வேண்டிய வனத்துறை, யானைகள் தொடர் மரணங்களுக்குக் காரணமாகி வருவது தான் பரிதாபம்.

இனியாவது அலட்சியங்களைக் கைவிட்டு, யானைகளைக் காக்க ரயில்வே துறையும் வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்கட்டும்.

- ச.ஜெ.ரவி,
படங்கள்: தி.விஜய்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ