Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரபிக் கடல் மீன்பிடித் தடைக்காலம் முடிவு:கடலுக்குள் செல்ல தமிழக மீனவர்கள் தயார்!

ந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் விதிக்கப்பட்டிருந்த 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று (ஞாயிறு)  நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனையடுத்து இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில், ஜூன் 14 தேதி நள்ளிரவு முதல், ஜூலை 31 நள்ளிரவு வரை மீன்பிடித்தடை  அமல்படுத்தப்பட்டது.

தற்போது அரபி கடலோரப் பகுதிகளான, கன்னியாகுமரி முதல் குஜராத் வரையிலும், இந்த மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதை அடுத்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் மராமரத்துப் பணிகளை முடித்து, நாளை(திங்கள்) அதிகாலை முதல் கடலுக்கு செல்ல ஆர்வமுடன் தயாராகிறார்கள்.

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள வங்காள விரிகுடா கடல் பகுதியில் உள்ள கிழக்குக் கடற்கரை பகுதிக்கு ஏப்ரல்15 முதல் மே29 வரையும், கன்னியாகுமரியில் இருந்து குஜராத் வரை உள்ள அரபிக் கடல்  பகுதியிலுள்ள மேற்குக்  கடற்கரைப்  பகுதிக்கு ஜூன்15 முதல் ஜூலை31ந்தேதி வரை உள்ள 45 நாட்கள் மீன்பிடித்  தடைக் காலமாக அறிவிக்கப்படுவது வழக்கம்.

பொதுவாகக்  கிழக்குக்  கடற்கரையான வங்காள விரிகுடா கடலோர பகுதிகளில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரிவெயில் காலங்களில் தான் மீன்கள் இனப் பெருக்கத்தில் ஈடுபடும். இதனால் இந்தக்  கால கட்டத்தில் ஆழ்கடலில் இயந்திரப்  படகுகளில் சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருக்கும்.இந்த மீன் பிடித் தடைக்  கால கட்டத்தில் மீனவர்கள், மீன்வலைகள், படகுகள், இயந்திரங்கள் ஆகியவற்றைப் பழுதுபார்த்து தயார் நிலைக்குக் கொண்டுவந்து மீன் பிடிப்பில் ஈடுபடுவர். மீன்பிடித்  தடைக் காலத்தில் கட்டுமரம், பைபர் படகுகளில் 20 கிலோ மீட்டர் கடல் பகுதியில் சென்று மட்டும் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மாறாக விசைப்படகுகள், இழுவைக்  கப்பல்களில் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மீன்பிடித் தடைகாலங்களில் மீன் சந்தைகளில் மீன்வரத்துக்  குறைந்து விலையும் அதிகரித்துக் காணப்பட்டது. மீன்பிடித் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான மீனவ குடும்பத்தினர் உள்ளனர்.

இவர்களுக்குத்  தடைக்  காலங்களில் அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசைப்படகுகளில் கடலில் சென்று மீன் பிடிக்கின்றனர். குமரி மாவட்டத்தில் இருந்து பல மீனவர்கள் கேரள மீன் பிடித் துறைமுகங்களில் தான் மீன் பிடித் தொழில் செய்கிறார்கள்.

அவர்களும், தடைக் காலம் இன்றோடு  நிறைவடைந்ததால் நேற்று நள்ளிரவு முதல் கேரளாவிற்குச்  சென்று கொண்டிருக்கிறார்கள். முட்டம் ஜேப்பியார் மீன் பிடித் துறை முகத்திலும் அனைத்து மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்க மகிழ்ச்சியுடன் செல்ல தயாராகிறார்கள். இனி தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டலத்திற்கு மீன் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

த.ராம்
படங்கள்.ரா.ராம்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ