Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆயிரக் கணக்கானோர் குவிந்த திருச்சி வேலைவாய்ப்பு முகாம்: ஒரு நேரடி ரிப்போர்ட்!

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியொன்றில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு முகாம் நேற்று(சனி) நடைபெற்றது. அதில் பொறியியல் பட்டதாரிகள் உட்பட ஆயிரக் கணக்கானோர்  கலந்துகொண்டனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு, திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சேலம், கோவை தஞ்சாவூர் உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்தும் பட்டதாரிகள் வந்து குவிந்தனர். காலை எட்டுமணிக்கு எம்.எல்.ஏ.  அன்பில் மகேஷ், குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். பிரபல தனியார் நிறுவனங்களான  ஹெச்.சி.எல், ஒமேகா ஹெல்த்கேர், கெவின்கேர் ஆகிய நிறுவனங்கள் உட்பட 26 நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றன.

காலை 11மணிக்கெல்லாம் பட்டதாரிகள் கூட்டம் பல்லாயிரக்கணக்கில் குவியத்தொடங்கியது. சில கம்பெனிகள்  அறிவியல் விருப்பப் பாடம் எடுத்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தினார்கள். சில நிறுவனங்கள், பட்டதாரிகளிடம் கடமைக்கு பயோடேட்டாக்கள் வாங்கிக்கொண்டதோடு அனுப்பி வைத்தார்கள். சில நிறுவனங்கள், பட்டதாரிகளின் வேலையில்லா திண்டாட்டத்தைப்  பயன்படுத்திக் கொண்டு எங்கள் நிறுவனத்தில் முதலில் ஒரு வகுப்பெடுக்கிறோம். நீங்கள்  50 ஆயிரம், 25 ஆயிரம் கட்டினால் உங்களுக்கு பயிற்சி  கொடுப்போம். பிறகுதான் வேலைக்கு சேர்ப்பது குறித்து முடிவெடுப்போம் என்றார்கள்.

இன்னொரு நிறுவனம்  2லட்சம் வரை வங்கிக் கடன் வாங்கி கொடுக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து 6 மாதம் படித்தால் உங்களுக்கு வேலை கொடுக்கிறோம் என்றார்கள்.  சில நிறுவங்கள் தங்களுக்குத்  தேவையான பட்டதாரிகளைத்  தேர்வு செய்தார்கள்.  இப்படியிருக்க, ஒருகட்டத்தில் பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகமாக,  பதிவு முடிந்து விட்டதாக 'ஓப்பன் மைக்கில்' அறிவித்தார்கள். அடுத்ததாக, சில நிறுவனத்தினர் பொறியியல் படித்தவர்கள்,  எம்.சி.ஏ படித்தவர்களுக்கு வேலையில்லை,அவர்கள்  போகலாம் என அறிவித்தார்கள். வேலை தேடி வந்தவர்களில் இருந்த பொறியியல் பட்டதாரிகள்,  'நாங்க வந்துட்டோம், எங்க பையோடேட்டாவுல சீல் வைச்சிட்டாங்க. இதையாவது வாங்கிக்கோங்க, பிறகு போன் பண்ணி சொல்லுங்க' என கோரிக்கை வைத்தனர்.

வேலை வாய்ப்பு முகாமிற்கு வந்த பட்டதாரிகளிடம் பேசினோம்.

'இதுபோன்ற முகாம்கள் நடப்பது சரிதான். ஆனால் எங்களைப் போன்ற பொறியாளர்களுக்கு தமிழகத்தில்  வேலையில்லாத நிலை அதிகரித்து இருக்கு, சில மாதங்களுக்கு முன் சென்னைக்கு வேலை தேடி அலைந்து அலைந்து வேலை கிடைக்கல, சின்ன அறை எடுத்து தங்கி வேலை தேடினோம். 8 ஆயிரம் தருகிறோம், 7 ஆயிரம் தருகிறோம்னு சொல்லுறாங்க. சில இடங்களில் செக்யூரிட்டிக்கூட மதிக்கமாட்டேங்குறாங்க. இப்படிப்பட்ட படிப்பை லட்சக்கணக்குல கட்டி படிச்சிருக்கோம்.  இந்த எம்.எல்.ஏ வேலைவாய்ப்பு முகாம் நடத்துறாரு. வேலை கிடைக்க வாய்ப்பிருக்கான்னு வந்தால் இவ்வளவு கூட்டம் இருக்கு, வந்தவங்களில் குறைந்தபட்சமானவர்களுக்குத் தான் வேலை கொடுப்பாங்கன்னு தெரியுது. அப்புறம் ஏன் எல்லா இடத்திலும் விளம்பரம் பண்ணினாங்க. இந்த முயற்சி நல்ல முயற்சிதான். ஆனால் அவர் இந்த தொகுதி பட்டதாரிகளுக்கு என குறிப்பிட்டு இருக்கணும் அப்படி செய்திருந்தால் நாங்கள் வெளிமாவட்டங்களில் இருந்து இவ்வளவு பேர் வந்திருக்கமாட்டோம்ல, வந்தவங்களை இந்த கம்பெனிக்காரங்க மோசமாக நடத்துறாங்க. இதையெல்லாம் யார்க்கிட்ட சொல்வது என தெரியவில்லை' என கூறினார்கள் வேதனையோடு.

இது தொடர்பாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரப்பினரிடம் தெரிவித்தோம். அவர்கள் கூறுகையில்,

நீங்கள் சொன்னது உண்மைதான்.  இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் எதிர்ப்பார்த்த கூட்டத்தைவிட அதிகமானவர்கள் வந்துவிட்டார்கள். மிகுந்த சிரமப்பட்டுதான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். எதிர்க்கட்சியாக இருந்தும் எங்கள்  எம்.எல்.ஏ. இவ்வளவு நிறுவனங்களை அழைத்து வந்துள்ளார்  என்றால், இந்த இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக ஏதவாது செய்யலாம் என எண்ணித் தான்.  அழைத்து வந்த நிறுவனங்கள் தங்களுக்கு தேவையானவர்களைத்  தேர்தெடுப்பதில் வைத்துள்ள வரையறைகளுக்குள் நாம் போக முடியாது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்கிறோம்'. என்றனர்.


சி.ய.ஆனந்தகுமார், மு.ரஞ்சித்குமார் (மாணவ பத்திரிகையாளர்) படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ