Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிமுகவிலிருந்து சர்ச்சை எம்.பி., சசிகலா புஷ்பா நீக்கம்... ஜெயலலிதா அதிரடி!

சென்னை:  டெல்லி விமான நிலையத்தில், தி.மு.க எம்.பி திருச்சி சிவாவுடன் தகராறு செய்ததாக சர்ச்சைக்குள்ளாகிய அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

டெல்லியிலிருந்து சென்னைக்கு திரும்ப, தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவும் நேற்று பிற்பகல் டெல்லி விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒருவருக்கொருவர் அப்போது ஒருமையில் பேசிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.  இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விமான நிலைய காவலர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். டெல்லி விமான நிலையத்தில் இரண்டு பெரிய கட்சிகளின் எம்.பிக்கள் கை கலப்பில் ஈடுபட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக எம்.பியுடன் மோதலில் ஈடுபட்ட சசிகலா புஷ்பாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார்.

கழக கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால், அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சசிகலா புஷ்பா நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்று ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

இன்று காலை மாநிலங்களவை கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சசிகலா புஷ்பா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது பேசிய அவர், எனக்கு  பாதுகாப்பு இல்லை. இதனால் என் உயிருக்கு அச்சுறுத்தல் வரும் என அஞ்சுகிறேன். மேலும் நான் எனது பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தலுக்குள்ளாகியிருக்கிறேன். எனவே எனக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்” என்று பேசினார். மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா தன் பேச்சை நிறைவு செய்வதற்குள்ளாகவே கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அரசியில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close