Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாலியல் 'ஷாக்' கொடுத்த அதிகாரி; அமைச்சர் கொடுத்த அதிர்ச்சி! -மிரள வைத்த மின்வாரிய ட்ரான்ஸ்பர்

பாலியல் புகாரில் சிக்கிய மின்வாரிய செயற்பொறியாளரை அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் மின்துறை அமைச்சர் தங்கமணி. ' மாற்றல் உத்தரவு வந்தும் அமைச்சர் பெயரைச் சொல்லி பதவியில் நீடித்தார். இதை அறிந்துதான் அதிரடியாக அவரை மாற்றியிருக்கிறார்கள்' என்கின்றனர் தொழிற்சங்க நிர்வாகிகள்.

தர்மபுரி, அரூர் மின்வாரியத்தில், செயற் பொறியாளர் கொளஞ்சி மீது இரண்டு பெண் ஊழியர்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். புகார் மனுவில், ' ஆய்வுக்குச் செல்ல வேண்டும் என அவருடைய ஜீப்பில் அழைத்துக் கொண்டு, காட்டுப் பகுதிச் சென்றார். ஜீப் டிரைவரை போகச் சொல்லிவிட்டு, என்னிடம் முறைகேடாக நடக்க முயன்றார். அவருடைய செயலுக்கு எதிர்ப்புக் காட்டியதால் காட்டுப் பகுதியிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல், மற்றொரு பெண் ஊழியரும் கொளஞ்சி மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இதையடுத்து, மின்வாரிய தலைவர் சாய்குமார் உத்தரவின் பேரில் அரூரில் விசாரணைக்கு வந்த அதிகாரிகளும், கொளஞ்சிக்கு ஆதரவாகவே  அறிக்கை கொடுத்தனர்.

இதற்கிடையில், பாலியல் மிரட்டலுக்கு ஆளான பெண்களின் உறவினர்களுக்கு விவரம் தெரியவர, நேரடியாக செயற்பொறியாளரிடம் தகராறில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த மத்திய மின் ஊழியர் கூட்டமைப்பினர், ' அதிகாரியை உடனே ட்ரான்ஸ்பர் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சாதிக் கலவரமாக வெடிக்க வாய்ப்பு இருக்கிறது' என எச்சரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, மின்வாரிய தலைவரை நேரில் சந்தித்தும் விளக்கம் அளித்தார் ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உ.வாசுகி. மின்வாரிய அதிகாரிக்கு எதிர்ப்பு வலுக்கவே, கும்மிடிப்பூண்டிக்கு மாற்றல் செய்து உத்தரவிட்டார் மின்வாரிய சேர்மன் சாய்குமார். ஆனாலும், கும்மிடிப்பூண்டிக்குச் செல்லாமல் அரூரிலேயே பணியைத் தொடர்ந்தார் கொளஞ்சி. இதனால் கடும் கோபமடைந்த தொழிற்சங்கத்தினர் மின்வாரிய உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினர். அவர்களோ, ' அமைச்சர் அலுவலகத்தில் இருந்து பிரஷர் வருகிறது. அதிகாரியை மாற்றுவது கடினம்' என கூறிவிட்டனர். இதுகுறித்து விகடன்.காமில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

'செயற்பொறியாளரைக் காப்பாற்றுவது ஏன்?' என அமைச்சர் தங்கமணி தரப்பில் விசாரித்தோம். " தவறு செய்த அதிகாரியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத் துளியும் இல்லை. அவர் மீதான புகாரை விசாரித்துக் கடும் நடவடிக்கை எடுங்கள் என்றுதான் கூறியுள்ளோம். அமைச்சர் பெயரைப் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது" என்றனர்.

தொழிற்சங்க நிர்வாகிகளின் அழுத்தம் காரணமாக, வேலூர் மண்டல மின்வாரிய அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினார் தலைமைப் பொறியாளர் எக்சலின் தெரசா. இதையடுத்து, செயற்பொறியாளர் கொளஞ்சியை கும்மிடிப்பூண்டிக்குச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளனர் உயர் அதிகாரிகள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மத்திய மின்ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுப்ரமணியன், " அரூர் மின்வாரியத்திற்கு புதிய செயற்பொறியாளராக செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய செயற்பொறியாளரின் செயல்பாட்டால், ஜாதிக் கலவரம் வரையில் பிரச்னை நீண்டது. ஏற்கெனவே கும்மிடிப்பூண்டிக்குச் செல்லுமாறு பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தியுள்ளனர் உயர் அதிகாரிகள். துறைரீதியான மாற்றம் என்பது சிறிய ஆறுதல் மட்டுமே. விசாரணை அறிக்கையின்படி, செயற்பொறியாளர் கொளஞ்சி மீது நிர்வாகரீதியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார் உறுதியாக.

-ஆ.விஜயானந்த்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ