Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாரம்பரியத்தை உணர்த்திய உணவுத் திருவிழா!

மிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் சார்பில், மாவட்டத்திற்கு நான்கு வட்டாரங்கள் வீதம், மாவட்டம் தோறும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இதைப்போல தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் அரங்கில் ஞாயிறு அன்று, மாவட்ட ஆட்சியர்  விவேகானந்தன் முன்னிலையில் உயர் கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றி உணவுத் திருவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது,

''தமிழக அரசு மற்ற மாநிலங்களில் இல்லாத அளவில் குழந்தைகள், பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அப்பகுதியின் ஒரு நிகழ்வாக இன்று நமது அழிந்து போன பாரம்பரிய உணவுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு இந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நடத்த உத்தரவு இட்டுள்ளது.

முந்தைய காலத்தில், ஆரோக்கியமான உணவுகளை உண்டு வாழ்ந்தனர். தற்போதைய காலத்தில் செயற்கை உணவுகளை உண்டு ஆரோக்கியமே இல்லாமல் வாழ்கிறோம். இவற்றையெல்லாம் உணர்த்தவே,  இந்த உணவுத் திருவிழா நடைபெறுகிறது'' என்று பேசினார். 

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்)   பத்மாசனி அவர்களிடம் பேசினோம்.

 ‘இந்த உணவுத் திருவிழாவின் முக்கிய நோக்கம் தாய், சேய் இறப்பு விகிதத்தை குறைத்தல், அனைவருக்கும் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்தல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்துதல் ஆகியவையே. நம் முன்னோர்கள் வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு முதலியவற்றை உண்டு நலமாக வாழ்ந்தனர். ஆனால் தற்போது அரிசி, மைதா, பீட்சா போன்ற உடலுக்கு ஒவ்வாத உணவு பொருட்களை உண்டு வாழ்கிறோம். இதனால், சில குழந்தைகள்  பிறக்கும்போதே சர்க்கரை வியாதியுடன் பிறக்கின்றன. அக்காலத்தில், மண்பானை, இரும்புப் பாத்திரங்கள், இரும்பு வாணலி, செப்பு பாத்திரம் பயன்படுத்தி உணவு சமைத்தனர். அதனால் அவர்களுக்கு தேவையான இரும்பு சத்து, பாஸ்பரஸ், துத்தநாகம் உள்ளிட்டவை அந்த சமையல் பாத்திரங்களில் இருந்தே கிடைத்தன. ஆனால் தற்போது நான்ஸ்டிக் தாவா போன்ற பொருட்களை பயன்படுத்துவதால் நம் உடல் ஆரோக்கியம் விரைவிலேயே பலம் இழந்து விடுகிறது’ என்று பாரம்பரிய உணவின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில், பல்வேறு விதமான பாரம்பரிய உணவுகள் கண்காட்சியில் வைக்கப்பட்டன. கேழ்வரகு (தாய்பாலை நிறுத்தும் போது, குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய சிறந்த இணை உணவு)  கம்பு (தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை பெருக்கும் மற்றும் ஜீரணசக்தியை அதிகரிக்கும்), சோளம் (வயிற்று புண், வாய் துர்நாற்றத்தை நீக்கும்),  வரகு (உடல் எடையை குறைக்க கூடியது; மாதவிடாய் கோளாறு உள்ள பெண்களுக்கு அதிக சக்தியை தரக் கூடியது)  உள்ளிட்ட நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுதானியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டன. அதேபோல, வேளாண்மை தோட்டக்கலை துறை, சுகாதாரத்துறை, உணவு மற்றும் பாதுகாப்புத்துறை, மகளிர் திட்டம் (புதுவாழ்வு) போன்ற துறைகளின் மூலம் அரங்குகள் அமைக்கப்பட்டு சிறுதானியங்கள், பருப்புவகைகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தன.

நிகழ்ச்சியின் இறுதியாக, அனைவருக்கும் குதிரை சக்தியை அளிக்கக் கூடிய குதிரைவாலி (வரகு பாயசம்), முளைகட்டிய கேழ்வரகு பானம், குதிரைவாலி அதிரசம், குதிரைவாலி முறுக்கு, வரகு தட்டுவடை ஆகியன வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று, அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை காரிமங்கலம் வட்டார, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் அலுவலர் சுகந்தபிரியா அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

- அ.பா.சரவண குமார்

(மாணவப் பத்திரிகையாளர்)

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ