Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காசு கொடுத்தால் கவர்மெண்ட் வேலை..! - புதுக்கோட்டை மோசடி

புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில், பணியில் சேருவதற்காக நேற்று காலை 13 பெண்கள், 4 ஆண்கள் என்று 17 பேர், புதுக்கோட்டை மண்டலப் போக்குவரத்துக் கழக அலுவலகத்திற்கு கையில் ஆணையுடன் வந்து நின்றிருக்கிறார்கள். மேலும், 'காரைக்குடி போக்குவரத்துக் கழக மேலாளர், பணி ஆணை கொடுத்தாங்க வேலையில் சேரணும்'  என அவர்கள் சொல்ல, அந்த ஆணையை வாங்கிப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து பதறிப்போயிருக்கிறார்கள்.

காரணம், அவர்கள் வைத்திருந்த பணி ஆணை அனைத்தும் போலி என்பதுதான். இதைத் தொடர்ந்து, நடந்த சம்பவம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என நினைத்த அதிகாரிகள், பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததுடன், அலுவலக நுழைவாயில் கேட்டை இழுத்து பூட்டினர். இறுதியில், போலி பணி நியமன ஆணையுடன் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்ததாக கணக்கு காட்டப்பட்டது.

இது குறித்து அங்கிருந்த சில அதிகாரிகளிடம் கேட்டபோது, ''காரைக்குடியை சேர்ந்த  சுப்பையா என்பவர், அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை எழுத்தர் வேலைக்கு தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு முறையில் ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக, புதுக்கோட்டை, காரைக்குடியை சேர்ந்த சிலரிடம் கூறி இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து அவர்களிடம் சுப்பையா, 'உங்களுக்கு வேலை வாங்கித்தருகிறேன். ஆளுக்கு ரூ.2 லட்சம் வீதம் கட்டினால் அரசு வேலை உறுதி' என ஆசை வார்த்தை கூறி இருக்கிறர். இதைத் தொடர்ந்து அபிராமிநகர், ராஜகோபாலபுரம் உள்ளிட்ட சில பகுதிகளை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 9 பேர் சுப்பையாவிடம் வேலைக்காக ரூ.18 லட்சத்தை வங்கி மூலம் செலுத்தி இருக்கின்றனர்.

அதன்பிறகு, இரண்டு நாட்களுக்கு முன் பணம் செலுத்திய 9 பேரிடம் வேலைக்கான பணி நியமன ஆணைகளை சுப்பையா வழங்கி இருக்கிறார். அப்படி கொடுக்கப்பட்ட பணி நியமன ஆணையுடன் வேலையில் சேருவதற்காக வந்தவர்களை, அங்கு பணி செய்த அலுவலர்கள் பொது மேலாளர் பாண்டியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது நடந்த விசாரணையில், 9 பேருக்கும் வழக்கப்பட்ட பணி நியமன ஆணைகள் போலியானது என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இது தெரிந்ததும், பணம் கட்டி ஏமாந்தவர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மேலும், பொது மேலாளர் பாண்டி தலைமையில் அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே பணிக்காக பணம் கொடுத்த சிலர், சுப்பையாவை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்தபோது, சுப்பையா எந்தவிதமான பதற்றமும் இல்லமால், ' பொதுமேலாளருக்கு உங்களை தெரியாது. அங்கேயே இருங்கள், அதுதான் பணி ஆணை. போய் வேலையில் சேருங்கள்' என சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து இருக்கிறார்.

இந்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளர் பாண்டி அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை நகர காவல்நிலைய ஆய்வாளர் தினேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்" என்றனர்.

இந்த சம்பவம் இப்படியிருக்க, இப்படியான ஏமாற்றுவேலை புதுக்கோட்டை மாவட்டத்தில் அடிக்கடி நடப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். கடந்த சில வருடங்களுக்கு முன் இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே  உள்ள நாகுடி ஊராட்சி மணவாநல்லூரைச் சேர்ந்த குமார் மனைவி அமுதா என்பவருக்கு, முதல்வரின் பசுமை வீடு கட்ட போலியான அரசாணை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதுமட்டுமல்லாமல் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஆர்.டி.ஓ. அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்களில்,  20 இரவுக் காவலர் பணியிடங்கள் காலியாக  இருக்க, அந்த பணிக்காக விண்ணப்பித்த 10 பேருக்கு கலெக்டர் மனோகரன்போல், போலியாக கையெழுத்திட்ட பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த ஆணையை எடுத்துக் கொண்டு அறந்தாங்கி ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு ஒருவர் சென்றார்.

அந்த ஆணை மீது சந்தேகம் ஏற்பட்டு நடந்த விசாரணையில், புதுக்கோட்டை கலெக்டரை போல் போலி கையெழுத்திட்டு 10 பேருக்கு இரவுக் காவலர் பணி நியமன ஆணை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மீது நடந்த விசாரணையில், சம்பந்தப்பட்ட கிராம உதவியாளர் சுந்தரி என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தான் வாங்கிய பணத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர் செந்தமிழ் செல்வியிடம் கொடுத்தாக அவர் சொல்ல, செந்தமிழ் செல்வி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். அப்போது அவரிடம், கிராம உதவியாளர், அலுவலக உதவியாளர், மசால்ஜி, ரேஷன்கடை ஊழியர், அங்கன்வாடி ஊழியர் போன்ற பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் அரசாணைகள் நிறைய இருக்க, பதறிய அதிகாரிகள் அதை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அதன் பிறகுதான், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  மக்கள் குறை கேட்கும் பிரிவில் துணை வட்டாட்சியராக பணி்யாற்றிவரும் செல்வகணபதி, இதற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இவர்கள் எல்லோரும் சேர்ந்து, சுமார் ரூ.30 லட்சம் வரை அபேஸ் செய்தது அம்பலமானது. இதைத் தொடந்து கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய துணை வட்டாட்சியர் செல்வகணபதி மற்றும் தற்காலிக பணியாளர்கள் செந்தமிழ்செல்வி, சுந்தரி ஆகிய 3 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்,

கலெக்டர் கையெழுத்தையே போட்டு, போலி ஆணை வழங்கிய ஊர் இது. மக்களும் பணம் கொடுத்தாவது அரசு வேலைக்கு போய்விட வேண்டும் என நினைப்பதால்தான் அதை பயன்படுத்திக் கொண்டு சிலர் இப்படி செயல்படுகிறார்கள். அரசாங்கத்தில் வேலைக்கு ஆள் எடுக்கின்றார்கள் என்றால் பத்திரிகைகளில் அறிவிப்பு வரும், இல்லையெனில் பணம் கட்டும்முன் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் வேலைக்கு ஆள் எடுக்கிறார்களா என விசாரிக்கலாம். அதைவிட்டுவிட்டு ஏமாந்தபின், என்னை ஏமாத்திட்டாங்கன்னு சொல்லுவதில் நியாயம் இல்லை. மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்கனும்" என்றார்கள்.

அடுத்தடுத்து போலி பணி ஆணைகள் வழங்கப்பட்டு மக்கள் ஏமாறும் சம்பவத்தால் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- சி.ய.ஆனந்தகுமார்

படங்கள்: த.யோகேஸ்வரன்
(மாணவ பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ